Header Ads



ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்ட சார்ஜன்ட் இடைநீக்கம்


புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


அந்த சார்ஜன்ட், சந்தேகநபர் நந்தகுமார் தக்ஷியுடன் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்டதாகவும், சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உப சேவைக் கடமையில் இருந்தபோது, இலக்கம் 03 சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்தகுமார் தக்ஷி என்ற சந்தேகநபரிற்கு பிஸ்கட் கொடுத்ததாகவும், அதனை சந்தேகநபர் பாதி உட்கொண்டதன் பின்னர் மீண்டும் குறித்த சார்ஜன்ட்டுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. 


அத்துடன், அவர் பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திற்கு அருகில் சென்றதாகவும், அவருடன் சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் CCTV காட்சிகளைச் சோதனைக்கு உட்படுத்தியதில் தெரியவந்துள்ளது. 


இது தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

No comments

Powered by Blogger.