100 வயது மூதாட்டி காலமானார்
(Zanhir ZA)
காலஞ்சென்ற நூர் ஜெஸீமா அவர்கள், இலங்கை முதல் முஸ்லிம் சிவில் சேவையாளரும் (CCS) மருதானை ஸாஹிறா அதிபரும் செனட்டருமான அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரி (cousin sister) என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலப் புலமைமிக்க நூர் ஜெஸீமா அவர்கள் 1925. நவம்பர் 20 அன்று யாழ். வண்ணார்பண்ணையில் பிறந்தவர். எ.எம்.எ. அஸீஸுக்கு ஒன்பது வயதாகும் போது அஸீஸின் தாய் மரணித்துவிட்டார். இந்நிலையில் ஜெஸீமா அவர்களின் தாயாரே, சிறுவன் அஸீஸை தனது வீட்டில் தனது மூன்று பிள்ளைகளுடன் வளர்த்துவந்தார்.
"உம்மாச்சி" என்று செல்லமாக அழைக்கப்படும் ஜெஸீமாவின் தாயார், எ.எம்.எ. அஸீஸின் சிறிய தாயார் ஆவார். அஸீஸை வளர்த்தெடுப்பதிலும் பரிவு காட்டுவதிலும் எவ்வித குறைபாட்டையும் அவர் வைக்கவில்லை. இவரின் பிள்ளைகள் அஸீஸை பொன்னிக்காக்கா (Golden Brother) என்று அழைப்பர். சிறுபிள்ளைகளுக்கே உரிய குறும்புத்தன விளையாட்டுக்களில் அவர்கள் ஒன்று சேர்ந்து ஈடுபடுவதுடன் மார்க்கம் பயில 'அல்லாப்பிச்சை மத்ரஸா'வுக்கும் சென்றுவந்தனர்.
முஹம்மது இப்ராஹிம், செய்னம்பு நாச்சியா ஆகியோரின் புதல்வியான ஜெஸீமா அவர்களின் பிள்ளைகள் லாஹிர், ஜாபிர், சாஹிர், மின்னத், ஜென்னத், ஸீனத், ரஹ்மத் ஆகியோராவர்.
காலஞ்சென்ற சித்தி ஜெஸீமா அவர்களின் ஜனாஸா நல்லடக்கம்' இன்று பகல் 10.30 மணிக்கு புத்தளம் மஸ்ஜிதுல் பகா மையவாடியில் இடம்பெறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப்பொறுத்து ஜன்னத்துல் பித்தவ்ஸை வழங்கப் பிரார்த்திப்போம்.
20. 12. 2025

Post a Comment