Header Ads



நான் பெற்ற அனுபவங்கள், எனது பயணம் முழுவதும் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளன - பிரதமர்


இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் திறன் இலங்கை பெண் சாரணியர் சங்கத்திடம் உள்ளது என்று கூறினார்.


உலகின் மிகப்பெரிய பெண்களுக்கான தன்னார்வ அமைப்பின் ஓர் அங்கமான இலங்கை பெண் சாரணியர் சங்கத்தால், இன்று (ஆகஸ்ட் 01) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி பெண் சாரணியர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.


இவ்விழாவில், 

ஒரு பெண் சாரணியர் பெறக்கூடிய மிக உயர்ந்த கௌரவ விருதான ஜனாதிபதி பெண் சாரணியர் விருது 301 பெண் சாரணியர்களிற்கு வழங்கப்பட்டது. 


அதேவேளை, பிரதமர் பெண் சாரணியர் விருது 23 பேருக்கு வழங்கப்பட்டது.

விருதளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் கூறியதாவது:


"இலங்கை பெண் சாரணியர் சங்கத்தால் வழங்கப்படும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 


1917 ஆம் ஆண்டில் கண்டியில் உள்ள மகளிர் உயர்தரப் பாடசாலையில் தொடங்கிய இந்த இயக்கம், இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.


இதன் மூலம், 8 வயது முதலே பெண் குழந்தைகள் நாட்டிற்குத் தலைமை தாங்குவதற்குத் தேவையான வலுவான மற்றும் முழுமையான ஆளுமையை வளர்த்து, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல்மிக்க சிறுமிகளாக உருவாவதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது.


நமது நாட்டிற்கு இதுபோன்ற வலிமையான எதிர்கால தலைமுறையே தேவை. இந்த விருது பெறுபவர்களின் அர்ப்பணிப்பும், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், சாரணியர்கள் மற்றும் சாரணிய தலைவர்களின் ஆதரவும் மிகவும் பாராட்டத்தக்கது.


நான் உங்களிடம் பிரதமர் என்ற முறையில் மட்டுமல்லாது, என் சிறுவயதில் ஒரு 'சிறிய சிநேகிதியாக' (little friend) இந்த இயக்கத்தில் இணைந்த ஒருவராகவும் பேசுகிறேன். அப்போது நான் பெற்ற அனுபவங்கள், எனது பயணம் முழுவதும் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளன.


இந்த இயக்கம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், தலைமைத்துவப் பண்புகளையும் அளித்து, ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதற்கான சூழலை உருவாக்குகிறது. இதுபோன்ற அமைப்புகளிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது இதுதான்.


அதேபோன்று, எமது அரசாங்கம் செயல்படுத்தி வரும் கல்விச் சீர்திருத்தங்களின் மூலமும், இதுபோன்ற பிள்ளைகளை உருவாக்குவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்."

No comments

Powered by Blogger.