October 19, 2021

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு நீர்கொழும்பு "எக்கோ" நிதி உதவி


- Ismathul Rahuman -

      பல்கலைக் கழகத்திற்கு தெரிவான நீர்கொழும்பு பிரதேச மாணவர்களுக்கு நீர்கொழும்பு கல்வி,கலாச்சார உதவி அமைப்பான "எக்கோ"   (Education Culture Helper Organization) புலமைப்பரிசில் நிதி உதவி வழங்குகின்றது.

 அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை அதிபர் எம்.எம்.எம். றிலுவான் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அல் ஹிலால் தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். சஹீர் புலமைப் பரிசில் நிதிக்கான காசோலையை வழங்கிவைத்தார்.

  நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த தென்கிழக்கு , யாழ்ப்பாணம், ஊவவெல்லஸ்ஸ, களனி , கொழும்பு, மொரட்டுவ ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான அல் ஹிலால் தேசிய பாடசாலை, நிவுஸ்டட் மகளிர் கல்லூரி, கெக்குனுகொள்ள தேசிய பாடசாலை, கொழும்பு சாஹிராக் கல்லூரி, கல்எளிய அரபுக்கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்கள் பத்து பேருக்கு இந்நிதி உதவி வழங்கப்பட்டன.

   பல்கலைக் கழக கல்வி நிறைவடையும் வரை மாதம் ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகின்றன. இதற்காக ஊரின் நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவிவருவதாக தலைவர் குறிப்பிட்டார்.

    பிரதம அதிதி அதிபர் எம்.எஸ்.எம். சஹீர் உரையாற்றும்போது நீர்கொழும்பில் கல்வியில் பெரிய மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். சமூகம் சகல துறையிலும் நல்ல நிலைக்கு முன்னேற வேண்டும்.  எல்லா வாய்ப்பு க்களையும் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள நல்ல மனதுள்ள மக்கள் உள்ள ஊர். எக்கோ அமைப்பு ஏற்படுத்தித் தந்துள்ள இந்த சிறந்த வாய்பை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவும்.

      வர்த்தகம் துறையை எடுத்துக்கொண்டாலும் தூரநோக்கு இல்லாத தன்மையை காணப்படுகின்றன. மாற்று சமூகத்தினர் நாம் பாரம்பரியமாக செய்து வந்த வர்த்தகத்தையும் மிஞ்சிச் சென்றுள்ளனர். எங்களிடம் நோக்கமுமில்லை. அதனை படிப்பதற்கான ஆர்வமுமில்லை. வர்த்தகம் துறையினருக்கும் விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்தவேண்டும். 

    பல்கலைக் கல்வி எனும் போது சமூகத்தின் மத்தியில் ஒருவகை பீதி ஏற்படுகிறது. எமது உள்ளத்தில் இறைவனின் அச்சமிருந்தால்  எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் சென்று படிக்க அச்சம் கொள்ளத்தேவையில்லை. நீங்கள் கல்வியை நோக்கிச் சென்றால் உங்கள் பிள்ளைகள் ஞானிகளாக வருவார்கள். எப்போதும் தமது பெற்றோருக்கு நம்பிக்கையுள்ள பிள்ளைகளாக செயல்பட வேண்டும். ஆன்மீகத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்றார்.

    "எக்கோ" அமைப்பின் தலைவர் எம்.எம்.எம். றிலுவான் தமது தலைமை உரையில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவுவது சமூகப் பொறுப்பாகும். இதன்மூலம் சமூக இடைவெளியை குறைக்க முடியும்.  பல்கலைக் கழகத்திற்கு தெரிவான நீங்கள் அங்கு உயர்கல்வியை முடித்து வெளியேறும் போது மனித நேயமுள்ளவர்களாகவும் மாறவேண்டும். நாம் செய்யும் இப்பணியை எதிர்காலத்தில் நீங்கள் கையில்எடுத்து இச்செயல் திட்டத்தை முன்ணெடுத்துச் செல்ல திடசங்கற்பம் பூணவேண்டும்.

   இப் புலமைபரிசில் நிதிக்காக எமது ஊரின் நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவி வருக்கின்றார்கள். அவர்களுக்காக நீங்கள் பிறார்திப்பதோடு நன்றி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

 எமது ஊரிலிருந்து   பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. இதனை நிவர்திப்பதற்காக  க.பொ.த.உயர் தரம் படிக்கும் வசதிகுறைந்த மாணவர்களை ஊக்குவிப்பதற்காக உதவிசெய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் பாடசாலை இடைவிலகல் மாணவர்களை இனம்கண்டு உதவுவதற்கான செயல்திட்டமொன்றும் வகுக்கப்படவுள்ளது எனக்கூறினார். இவ்வைபவத்தில் டாக்டர் எம். என். எப்.றிம்சினா,டாக்டர் என.எஸ்.எம். நஸ்மீர், சேலான் சர்வதேச பாடசாலை பணிப்பாளர் எம்.எச்.இசட்.எம்.மர்சூக், அமைப்பின் பொருளாலர் இலாம் காசிம், டாக்டர் எம்.ஆர்.எம். நளீம் ஆகியோர்களும் உரையாற்றினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment