Header Ads



தாக்குதல்தாரி முன்னர் கைது செய்யப்பட்டும் வெளியே வந்துள்ளதால், பயங்கரவாத தடைச்சட்டத்தை இறுக்கமாக்கும் நியூசிலாந்து பிரதமர்


பயங்கரவாத தடைச்சட்டத்தை இறுக்கமாக்குவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உறுதியளித்துள்ளார்.

ஒக்லாண்ட் நகரில் இலங்கையர் ஒருவரால் நேற்று (03) கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்தே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக இந்த மாற்றங்களை மேற்கொள்ள இயலுமான நிலையில் தாம் இருக்க வேண்டுமென ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த நபரொருவர் ஒக்லாண்டிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் 6 பேரை நேற்றைய தினம் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதுடன், IS அமைப்பின் ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரதமர் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதுடன், அந்த மாற்றங்களுக்கு பாராளுமன்றம் இம்மாத இறுதியில் ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்றைய கத்திக்குத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டிருந்ததாகவும் சட்டத்தின் இடைவௌிகளை பயன்படுத்தி அவர் ஒவ்வொரு முறையும் வெளியே வந்ததாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.