Header Ads



சீனாவும், பாகிஸ்தானும் தங்களுடைய அகன்ற கால்களை மிகவேகமாக வடக்கில் வைக்கின்றன - ஸ்ரீதரன் Mp


வடக்கில் கலட்டை பண்ணைக்கு அனுமதியளித்தது யார்? பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வடக்குக்கு வந்தது ஏன்? அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் வடக்கு விஜயத்துக்குப் பின்னர் நடப்பது என்ன? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், சீனாவும், பாகிஸ்தானும் தங்களுடைய அகன்ற கால்களை மிகவேகமாக வடக்கில் வைக்கின்றன என எச்சரித்தார்.

வடக்கில் சீனா,பாகிஸ்தான் நாடுகளின் பிரவேசமானது இந்தியாவை சீண்டும் செயலாகவே கருதுகின்றோம் எனத் தெரிவித்த அவர், தமிழ் மக்களை இன்னல்களுக்கு தள்ளுவதால் சிங்கள மக்களும் பாதிக்கப்படப்போகின்றனர் என்றார்.

இந்தியாவை சீண்டி தமிழர்களை இல்லாதொழிக்க சீனாவையும், பாகிஸ்தானையும் அரசாங்கம் தூண்டிவிடுகின்றதா என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என்றும் தெரிவித்த அவர், இதனால் சிங்கள மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையும் அதன் சுதந்திரத்தை இழக்கப்போகின்றது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் மீதான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய  அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்ட கௌதாரிமுனை கடலோர பிரதேசத்தில் சீன பிரஜை ஒருவருக்கு கடலட்டை பண்ணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க அலுவலகர், பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதி இல்லாது நேரடியா சீன நபருக்கு கடலட்டை பண்ணை செய்ய அனுமதி கொடுத்தது யார்? எமது மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு இருக்கையில் இந்த நாட்டு பிரஜை இல்லாத ஒருவருக்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரசாங்கம் செய்ய முயற்சிப்பது ஏன் என்று வினவினார்.

“நாற்பது ஏக்கர், நாற்பது ஏக்கர் பரப்புகளில், இரண்டு துண்டு காணிகளை இவ்வாறு கொடுத்துள்ளனர், அதேபோல் யாழ்ப்பாண கச்சேரியின் பழைய வளாகத்தில் சீன நிறுவனத்தின் ஹோட்டல் ஒன்றை நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது” என்றார்.

யாழ்ப்பாணத்துக்கு கடந்தவாரம் வந்திருந்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், யாழ்ப்பாண செயலகத்தில் கூட்டமொன்றை நடத்தியிருந்தார், அதேபோல் அவர் மண்டைதீவில் தங்கியிருந்துள்ளார். அல்லைப்பிட்டி கரையோரங்களை சென்று பார்வையிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த பகுதிகளில் பாகிஸ்தானிய நிறுவனம் ஒன்று ஹோட்டல் கட்ட முயற்சித்த வேளையில் நாம் தலையிட்டு அவற்றை தடுத்தோம்” என்றார்.

இப்போது மீண்டும் அதே முயற்சியை பாகிஸ்தானிய நிறுவனம் மேற்கொண்டுள்ளதா என்ற கேள்வி எம்மத்தியில் எழுந்துள்ளது எனத் தெரிவித்த அவர், பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரின் விஜயமும் அதற்காகத்தான் அமைந்துள்ளதா என்ற சந்தேகத்தையும் வெளியிட்டார்.

தமிழர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவுடனே எமது உறவுகள் இருக்கும். எனவே இந்தியாவை சீண்டி தமிழர்களை இல்லாது செய்ய சீனாவையும், பாகிஸ்தானையும் தூண்டிவிடுகின்றதா என்ற சந்தேகம் எம்மத்தியில் உள்ளது எனத் தெரிவித்த அவர், எமக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் இது பாரிய ஆபத்தாகும். இந்தியா எமது அயல் நாடு,

தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் கிடைத்து வருகின்றது என்றார்.

2 comments:

  1. இந்திய பாசம், இந்தியாவிற்கு கூட்டிக்கொடுக்கும் பாசம் என்றுமே இவர்களை விட்டு பிரியாது.

    ReplyDelete
  2. பாக்கிஸதானும் சீனாவின் ஒரு அடிமை நாடாகும். இலங்கை போன்றே அடுத்த 10 ஆண்டுகளின் சீனாவின் காலணி நாடாக போகின்றது.

    எனவே சீனா, பாக்கிஸ்தான் இரண்டையும் வடகிழக்கை அண்டவிட கூடாது. US/India/Japan/UK/EU கூட்டணிக்கே எமது முழுஆதரவு.

    ReplyDelete

Powered by Blogger.