Header Ads



நீர்கொழும்பில் புதிதாக 76 கொரோனா தொற்றாளர்கள் - 2 மரணங்கள்


- இஸ்மதுல் றஹுமான் -

நீர்கொழும்பில் புது வருட கொத்தனியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. நீர்கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கூடுதலானவர்கள் குரண, பிடிப்பன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பிரதான பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன தெரிவித்தார்.

பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் 10,12 வகுப்பு மாணவர்கள் இருவரும் மகளிர் பாடசாலை ஒன்றின் 9 ம் வகுப்பு மாணவி ஒருவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுடன் தொடர்புபட்ட மாணவ, மானவிகள் 45 பேர்களுக்கு நீர்கொழும்பு மாநகர சபையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதாக குணரத்ன மேலும் தெரிவித்தார். தொற்றாளர்களின் முதல் தொடர்புள்ளவர்களுக்கும் இங்கு பிசிஆர் செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை மாநகர சபையில் 98 பேர்களுக்கும், தழுவகொட்டுவையில் 156 பேர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் நான்கு ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தனியார் இடமொன்றில் மத வழிபாடுகளை நடாத்திய போது அங்கு பொலிஸாரின் உதவியுடன் சுற்றிவலைத்த போது அங்கு சுமார் 40 பேரளவில் இருந்துள்ளனர். உடணடியாக அவர்களிடையே "என்டிஜன்" பரிசோதனை மேற்கொண்டபோது ஒருவருக்கு "பொசிட்டிவ்" ஆகியுள்ளது.

புதுவருட கொத்தனியின் பின்னர் நீர்கொழும்பில் இரு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. லுயிஸ் பிலேஸை சேர்ந்த 28 வயது இளைஞரும், கெனல் வீதி 73 வயது பெண்ணும் இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.