Header Ads



விஜயதாச பொய் சொல்கிறார் - பவித்ரா தெரிவிப்பு


பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ சுகாதார அமைச்சு தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் விஜயதாச ராஜபக்ச செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தி சுகாதார அமைச்சு தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் அதனை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர்;

விஜயதாச ராஜபக்ச சுகாதார அமைச்சு தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், நாம் வேலை செய்வதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். நாம் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக எமது கடமைகளை மேற்கொண்டு வருகிறோம்.

சுகாதார அமைச்சு, கொரோனா வைரஸ் தடுப்பு க்கான ஜனாதிபதி செயலணி மற்றும் அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாலேயே வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மிக சாத்தியமானதாக முன்னெடுக்க முடிந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனவைரஸ் மூன்றாவது அலை உருவாகியுள்ள நிலையில் எமது அயல் நாடான இந்தியாவில் நாள்தோறும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு மில்லியன் கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். எமது பிராந்தியத்தில் அறுபத்துமூன்று வீதம் கொரோனா வைரஸ் நோயாளிகளின் அதிகரிப்பு காணப்படுகிறது. உலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் மிக வேகமாக வைரஸ் தொற்று பரவி வருகிறது. மரணங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. நாம் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதால்தான் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் மரணங்களில் எண்ணிக்கையும் மிக குறைவாக காணப்படுகின்றன.

பெருமளவு வைரஸ் தொற்று நோயாளர்கள் சிகிச்சையளிக்கப்பட்டு   குணமடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நாம் வேலை செய்வதில்லை என்பது மிக மோசமான குற்றச்சாட்டு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.