Header Ads



ஐரோப்பாவில் வலுப்பெறும் புர்கா தடை, இஸ்லாமிய வெறுப்பா..?


- சுவிசில் இருந்து சண் தவராஜா -

சுவிட்சர்லாந்தில் கடந்த மார்ச் 7 ஆம் திகதி நடைபெற்ற பொதுமக்கள் வாக்கெடுப்பில் “பொது இடங்களில் முகத்தை மறைத்தலுக்கு ” எதிரான| முன்மொழிவு வெற்றி பெற்றிருக்கின்றது.

நேரடியாக இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரான ஒரு விடயமாக இது பார்க்கப்படாது விட்டாலும், உள்நாட்டில் இந்த வாக்கெடுப்பு புர்கா தடை என்ற பெயரிலேயே ஊடகங்களிலும், பொது வெளியிலும் அறியப்பட்டிருந்தது.

சுவிஸ் நாட்டின் மிகப் பெரிய கட்சியும், வலது சாரித் தேசியவாதச் சிந்தனையைக் கொண்டதுமான சுவிஸ் மக்கள் கட்சியின் முன்மொழிவிலேயே இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில் பிரேரணைக்கு 51.2 வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

வெளிநாட்டவர்களுக்கும், குடியேற்றவாசிகளுக்கும் எதிரான சிந்தனையைக் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது. 86 இலட்சம் மக்கட் தொகையைக் கொண்ட சுவிஸ் நாட்டில் சுமார் 5 வீதமான முஸ்லிம்கள் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மத வழிபாடுகளைத் தடையின்றி நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், தங்கள் வழிபாட்டு நிலையங்களில் உயரமான மதச் சின்னங்களுடன் கூடிய கோபுரங்களை நிர்மாணம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அனுமதியை மறுக்கும் நோக்குடனான மக்கள் வாக்கெடுப்பு 2019 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டது. சுவிஸ் மக்கள் கட்சியினால் முன்மொழியப்பட்ட அந்தத் தீர்மானமும் மக்களின் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது.

இந்த முஸ்லிம் கோபுரங்களைத் தடைசெய்ய முன்னின்ற அதே சக்திகளே தற்போது புர்கா தடை விடயத்திலும் முன்னின்றன என்பது அவர்களின் முஸ்லிம் விரோதச் சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அது மாத்திரமன்றி, பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு கோரி அவர்கள் மேற்கொண்ட பரப்புரைகள், அதற்காக அவர்கள் செலவிட்ட நிதி போன்றவை பிரமிப்பை ஊட்டுகின்றன.

இத்தகைய பெரும் நிதியை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? அத்துணை பெரும் நிதியை வழங்கும் அளவுக்கு சுவிசில் உள்ள பெரு வணிக நிறுவனங்களுக்கான அக்கறைக்கு அடிப்படை என்ன? போன்ற விடயங்கள் ஆய்வுக்கு உரியவை.

மக்கள் வாக்கெடுப்பில் 5 மாநிலங்கள் புர்கா தடைக்கு எதிராக வாக்களித்துள்ளன. பாசல் நகரம் (40.6), சூரிச் (45.1), ஜெனீவா (48.7), அப்பன்செல் இன்னஹோர்டன் (48.7), கிரபுண்டன் மற்றும் பேர்ண் ஆகிய மாநிலங்களில் தலா 49.6 என்ற வீதத்திலேயே புர்கா தடைக்கு ஆதரவான வாக்குகள் கிடைத்துள்ளன.

மறுபுறம் யூரா (60.7), தி;ச்சினோ (60.5), சுவிற்ஸ் (60.2) ஆகிய மாநிலங்களில் அதிக வீதத்திலான மக்கள் பிரேரணையை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

சுவிசைப் பொறுத்தவரை பொது வாக்கெடுப்பு ஒன்றை யாரும் கோரலாம். ஒரு பிரேரணையைத் தயாரித்து ஒரு இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்று, மத்திய அரசிடம் கையளித்தால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

கடந்த 130 வருடங்களில் இதுபோன்ற 219 மக்கள் வாக்கெடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் இதுவரை 23 வாக்கெடுப்புகள் வெற்றியும் பெற்றுள்ளன.

புதிய சட்டத்தை அமுல் படுத்துவதுடன் நடுநிலை நாடு என வர்ணிக்கப்படும் சுவிற்சர்லாந்து புர்கா அணிவதைத் தடை செய்துள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. 2011 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாடு முழுவதும் புர்கா தடை அமுலுக்கு வந்தது. அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களைக் கொண்ட ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அண்மைக் காலத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளின் பல்வேறு தாக்குதல்களுக்கு முகங் கொடுத்திருந்த நிலையில் புர்கா தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்தவேளையில் பாரிய விமர்சனங்களைச் சந்தித்திருக்கவில்லை.

ஏனைய ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், டென்மார்க், ஒஸ்ரியா, நெதர்லாந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளிலும் புர்கா அணிவது முழுமையாகவோ அன்றி பகுதியாகவோ தடைசெய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நாட்டில் புர்கா அணிவதைத் தடைசெய்யும் வாக்கெடுப்பைக் கோரிய சக்திகள் தாம் முஸ்லிம்களை இலக்கு வைக்கவில்லை எனத் தெரிவித்திருந்த போதிலும், அவர்கள் பயன்படுத்திய விளம்பரங்களில் புர்கா அணிந்திருந்த ஒரு பெண்ணின் நிழற்படத்துடன் “தீவிரவாதத்தை நிறுத்துவோம், முகக் கவசத்தைத் தடை செய்வதற்கு ஆம் என்போம்| என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகிய அன்றைய இரவே சுவிஸ் இஸ்லாமிய மத்திய சபையின் இணையத் தளம் விசமிகளால் ஊடுருவப்பட்டு இயக்கம் நிறுத்தப்பட்டது.

இஸ்லாமியர்கள் மனித குலத்தின் விரோதிகள் என்பது போன்ற பிரசாரம் கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையைக் காணலாம். முஸ்லிம் அடிப்படைவாதிகள் யாவருமே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படும் செய்திகள் பிரதான ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஹொலிவூட் முதல் பொலிவூட் வரை திரைப்படங்களில் இஸ்லாமிய வில்லன்களே வலம்வருகின்றனர். தமிழ்த் திரைப்படங்கள் கூட இதில் விதிவலக்கு அற்றவையாகவே உள்ளன.

இத்தகைய சித்தரிப்பு ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. இதற்குப் பின்னால் திட்டமிட்ட சதி ஒன்று உள்ளது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னரான சூழலில் இத்தகைய பரப்புரை முன்னரை விட வேகமாகவும், கடுமையாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக முஸ்லிம்கள் அனைவரையும் விரோதிகளாகப் பார்க்கும் மனோநிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் போன்ற முஸ்லிம் தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகள் அதிகமாக உள்ளதை ஒருவகையில் நியாயப்படுத்த முடியும். ஆனால், முஸ்லிம் தீவிரவாதம் என்றே பேச்சே இல்லாத சுவிஸ் போன்ற நாடுகளில் இத்தகைய கடுமையான நிலைப்பாடு எதற்காக என்ற கேள்வி எழுகின்றது.


26 மாநிலங்களைக் கொண்ட சுவிஸ் நாட்டில் இத்தாலி மொழி பேசும் ஒரேயொரு மாநிலமான திச்சினோவில் புர்கா தடை ஏலவே அமுலில் உள்ளது. யேர்மன் மொழி பேசும் மாநிலங்களில் ஒன்றான செங் காலன் மாநிலத்திலும் ஒருசில வருடங்களாக இந்தத் தடை நடைமுறையில் உள்ளது. தவிர, சுவிஸ் நாட்டின் 15 மாநிலங்களில் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின் போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் தமது அடையாளத்தை மறைக்கும் நோக்குடன் முகங்களை மறைத்துக் கொள்வதற்கான தடையும் நடைமுறையில் உள்ளது. இத்தனைக்குப் பிறகும் முழு நாட்டுக்குமான புர்கா தடை என்பது உள்நோக்கம் கொண்டதே என்பதை மறைத்துவிட முடியாது.

சற்றேறக்குறைய 4 இலட்சம் முஸ்லிம்கள் வாழும் சுவிஸ் நாட்டில் 21 முதல் 37 வரையான முஸ்லிம் பெண்கள் மாத்திரமே முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் புர்கா அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக| லுற்சேர்ண் பல்கலைக் கழகம் அண்மையில் நடாத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.புதிய சட்டத்தின் பிரகாரம் தடையை மீறி புர்கா அணிபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட உள்ளது.

‘புர்கா அணிவது முஸ்லிம் மாதரின் அடிப்படை உரிமை. புதிய சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ள இஸ்லாமியர்களுக்கான மத்திய சபை, ‘புர்கா தடையை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதப் பணத்தை தமது அமைப்பு பொறுப்பேற்கும்” என அறிவித்துள்ளது.

அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கும் முறைமையைக் கொண்டுள்ள சுவிஸ் நாட்டின் அரசாங்கம் புர்கா தடை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு பொதுமக்களைக் கோரி இருந்தது. நாட்டின் தேசிய வருமானத்தின் கணிசமான தொகையை ஈட்டித்தரும் உல்லாசப் பயணத் துறையை வாக்கெடுப்பின் முடிவு பாதிக்கும் என்பது அரசாங்கத்தின் கரிசனைகளுள் ஒன்றாக இருந்தது.

வாக்கெடுப்பின் முடிவில் கருத்து வெளியிட்டிருந்த தலைநகர் பேர்ண் மற்றும் ஜெனீவாப் பிராந்திய உல்லாசப் பயண விடுதிகள் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் இதே கருத்தையே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை சீன நாட்டவருக்கு அடுத்ததாக அதிகளாவான உல்லாசப் பயணிகள் அரபு நாடுகளில் இருந்தே வருகை தருகின்றனர். அது மாத்திரமன்றி, அரபு நாட்டு பெரு வணிகர்கள் ஏற்பாடு செய்யும் கொண்டாட்ட நிகழ்வுகளும் சுவிசில் ஆண்டுதோறும் நடைபெறுவதும் வழக்கம்.

கொரோனாக் கொள்ளை நோய்த் தாக்கத்தால் உலகளாவிய அடிப்படையில் பொருளாதார நலிவு ஏற்பட்டுள்ள நிலையில், புர்கா தடை வாக்கெடுப்பு முடிவுகளின் விளைவால் அரபு நாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படுமானால் அது சுவிஸ நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத் தளத்திற்கு அப்பால் இராஜதந்திரத் தளத்திலும் சுவிஸ் நாட்டிற்கு புர்கா தடை விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடுநிலை நாடு| என்ற பெருமையைக் கொண்டுள்ளதால் உலகின் பெரும்பாலான நாடுகளின் உள்நாட்டுப் போர்கள் தொடர்பிலான சமாதானப் பேச்சுக்கள் சுவிஸ் நாட்டிலேயே இடம்பெறுகின்றமை வழக்கம்.

சமரசப் பேச்சுக்களை ஊக்குவிப்பதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாகக் கொண்டுள்ள சுவிஸ் நாட்டின் நம்பகத்தன்மை எதிர்காலத்தில் கேள்விக்கு இலக்காகக் கூடிய அபாயம் புர்கா தடை காரணமாக எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி முன்மொழியும் திட்டங்கள் யாவற்றுக்கும் எதிராக எப்போதும் குரல் எழுப்பும் இடதுசாரிகளில் ஒரு சாராரும், பெண்ணியவாதிகளுள் ஒரு பகுதியினரும் புர்கா தடை வாக்கெடுப்பின் போது ஆதரவு தெரிவித்திருந்தனர். ‘பெண்ணியச் சிந்தனையின் அடிப்படையில் மதத்தின் பெயரால் புர்கா அணியுமாறு பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்பது அவர்களது வாதம்.

“ஒரு பெண் எத்தகைய ஆடையை அணிய வேண்டும் என்பதையோ, எத்தகைய ஆடையை அணியக் கூடாது என்பதையோ மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது. அதனைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கே உரியது” எனத் தங்கள் செயற்பாட்டிற்கு அவர்கள் நியாயம் கூறுகிறர்கள்.

அவர்களது வாதம் முழுக்க முழுக்க நியாயமானது என்றாலும், புர்கா தடைச் சட்டம் தொடர்பான முன்மொழிவில் உள்ள பின்னணி அரசியலை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எழுகின்றது. புர்கா தடைச் சட்டத்தை முன்மொழிந்தவர்களின் உண்மையான நோக்கம் முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதல்ல. தங்கள் முஸ்லிம் விரோதக் கொள்கைகளை நடைமுறைப் படுத்த இதுவொரு கருவி மாத்திரமே.

‘இலட்சியம் மட்டும் உயர்ந்ததாய் இருந்தால் போதாது. அதனை அடையும் வழிமுறைகளும் உயர்ந்ததாய் இருக்க வேண்டும்” என்ற மேற்கோள் இந்த இடத்தில் குறித்த பெண்ணியச் செயற்பாட்டாளர்களுக்கும், இடதுசாரிச் சிந்தனையாளர்களுக்கும் பொருத்தமானது என எண்ணத் தோன்றுகிறது.

மக்கள் வாக்கெடுப்பு குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் இடம்பெற்றிருந்தன. ‘உனக்கு ஏற்புடைத்ததான நாட்டை நீயே தெரிவு செய்து கொள். நாடு உனக்கு ஏற்றதாக மாறும் என எதிர்பார்க்கதே” என்கிறது ஒரு பதிவு. எதிர்காலத்தில் வெளியே உள்ளவர்களால் சுவிற்சர்லாந்து எவ்வாறு நோக்கப்படும் என்பதைப் பிரதிபலிக்கிறது இந்த வாசகம்.

No comments

Powered by Blogger.