Header Ads



நடுவீதியில் தாக்குதல், பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம் (மேலதிக விபரம் வெளியாகியது)


நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிதித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கும்  காட்களின் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் லொறியொன்றின் சாரதி என தெரியவந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  கூறினார்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் பன்னிப்பிட்டிய பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த லொறியின் சாரதி, போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மீது மோதி காயமேற்படுத்தியுள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த சாரதியை தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட  விசாரணையில்  தெரியவந்துள்ளது.

குறித்த சாரதி தவறிழைத்து இருந்தாலும், அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இவ்வாறு பொலிஸ் அதிகாரி தாக்குல் நடத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.