Header Ads



தாக்குதலை நடத்தியவர்கள், நிதியுதவி அளித்தவர்கள், பின்புல அரசியல் சக்திகள், சர்வதேச உதவிகள் - விசாரணை வேண்டும்


அரசியல் லாபங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினரை பாதுகாப்பது தவறான செயற்பாடென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

'கருப்பு ஞாயிறு தின' அனுஷ்டிப்புடன் இன்று -07- இடம்பெற்ற அமைதி போராட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாதிகள் 8 பேரினால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 269 பேர் மரணித்து இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ளன.

இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கை வெளிப்படுத்தப்பட்ட பின்னர் இதற்கு பல தரப்பினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த பின்னணியில் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க கோரி கொழும்பு பேராயர் இல்லம் இன்று கருப்பு ஞாயிறு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கமைய நாட்டின் சகல தேவாலயங்களிலும் இன்று 'கருப்பு ஞாயிறு' தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று ஆராதனைக்கு சென்றிருந்தவர்களில் அதிகமானோர் கருப்பு நிய ஆடைகள் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 2019ஆம் ஏப்ரல் மாதம் 21ஆம் முதலாவது தாக்குதல் நடத்தப்பட்ட நேரமான முற்பகல் 8.45 அளவில் இன்று சகல தேவாலயங்களிலும் மணி ஓசை இசைக்கப்பட்டு மரணித்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்தநிலையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கருத்துரைத்த பேராயர் மெல்கம் ரஞ்சித், தாக்குதலை நடத்தியவர்கள், அதற்கு நிதியுதவி அளித்தவர்கள் போன்றோர் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்துடன் இந்த தாக்குதலின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் செயற்பட்டதா? அவற்றுக்கு சர்வதேச உதவிகள் கிடைத்தனவா? என்பன தொடர்பாகவும் அரசாங்கம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

1 comment:

  1. விசாரணைகளெல்லாம் உண்மை யாக நடைபெற்று வந்திருந்தால் உலகத்தில் எந்த அழிவுகளும் ஏற்பட்டிருக்காது தீமைகளின் இருப்பிடமாக இஸ்ரேலும் இந்தி யாவும் இருந்திருக்காது

    ReplyDelete

Powered by Blogger.