Header Ads



தினேஸ் குணவர்த்தனவுக்கு எண்கணிதம் தெரியும் என நம்பினேன், இப்போது சந்தேகம் வந்துள்ளது - சுமந்திரன்


ஐ.நா.வில் பிரேரணை தோற்க வேண்டுமென சில தமிழ் கட்சிகள் கைக்கூலிகளாக செயற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. கடந்த 23ஆம் திகதி இறுதி தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் முதலாவது தீர்மானமாக இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் 2009ஆம் ஆண்டு ஒரு தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் வாக்குகெடுப்புடன் மூன்று தீர்மானங்களும் அதனை தொடர்ந்து 2015, 2017, 2019ஆம் ஆண்டுகளில் இலங்கையின் இணை அனுசரணையுடன் இணைந்து வாக்கெடுப்பு இல்லாமல் மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இறுதியாக நிறைவேற்றப்பட்ட 40/1 தீர்மானம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் இலங்கையில் நிலவுகின்ற விடயங்கள் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரலுவலகம் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது. அந்த அறிக்கை டிசம்பர் மாதமே ஒரு வரைபாக இலங்கைக்கு காண்பிக்கப்பட்டதாக நாங்கள் தற்போது அறிந்தோம். அது ஜனவரி நடுப்பகுதியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

அது மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு காலக்கெடு. அது நாட்டுக்குக் கொடுக்கின்ற காலக்கெடு அல்ல. இது தொடர்பாக சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

உண்மையில் மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமது மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, பரிகாரம் காலம் கடந்தாலும் மெதுவாக நகர்ந்தாலும் இறுதியில் அதனை நாங்கள் அடைவோம் என்ற நம்பிக்கையினை வைத்திருக்க உதவியுள்ளது.

அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுக்கு எண்கணிதம் தெரியும் என்று நம்பியிருந்தேன். இப்போது அது தொடர்பாக சந்தேகம் வந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் சாதாரண பிரேரணையை நிறைவேற்றுவதாக இருந்தால் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை தான் கருத்தில்கொள்ளப்படும். வாக்களிக்காதவர்கள் தொடர்பாக கருத்தில்கொள்வதில்லை.

நாட்டின் நிலைமை தற்போது மோசமான நிலையினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.

ஏதாவது, கட்டத்தைத் தாண்டி படுமோசமான நிலைக்கு நாடு சென்றால் ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலமாக சமாதானப் படையினை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.