Header Ads



இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, இன்று ஆரம்பித்து வைப்பு - உத்தியோகபூர்வ அறிவிப்பு


-யாழ். நிருபர் பிரதீபன்-

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில், இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 

இந்தக் கட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும். 

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும் மற்றும் நிதிச்செயலாளராக வர்த்தகத் துறையை சேர்ந்த வீ.திலான் ஆகியோர் செயற்படுவார்கள். 

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும். 

தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்படுகின்றன எனினும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே கட்சிகள் செயற்படுவதை காணகாடியதாக உள்ளது. 

எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாதுள்ளன. இதன் காரணமாகவே அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. 

எனினும் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, ஆங்கிலக்கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களில் செயற்படவுள்ளது.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சியின் சேவை ஒரு மதத்துக்கான சேவையாக இருக்காது அனைத்து இனங்களிலும் புறந்தள்ளப்பட்டவர்களை சமூகத்தில் உயர்த்தும் கட்சியாக செயற்படும். 

எனவே அனைத்து சமூகத்தவர்களும் இந்தக் கட்சியில் இணைந்து செயற்படுவார்கள். இலங்கை பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கிய பணிகளாக. 

தமிழ் கல்வி மாநாடு ஒன்றை நடத்தி அதற்கூடாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் 10ஆண்டு திட்டத்தை முன்னெடுத்தல். 

இதற்காக தமிழ் பேசும் கல்வி சமூகத்தின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பை கோருகிறோம். 

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சுய வருமான ஊக்குவிப்பு திட்டங்களுக்கு உந்துதலை வழங்குதல். 

இதற்கான ஆலோசனைகளை தமிழ் பேசும் சமூகத்தின் பொருளியல் மற்றும் வர்த்தகத்துறையினரிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம். 

தமிழ் பேசும் மக்களின் விளையாட்டுத்துறை மற்றும் அழிந்துப்போகும் கலாசார விழுமியங்களை பாதுகாத்தல். 

இந்த விடயத்தில் தமிழர் மத்தியில் செயற்படும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

2 comments:

  1. வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என அணைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ் கட்சிகளையும் ஒரே குடைக்குள் கொண்டுவருவதற்கு இந்த கட்சியால் மட்டுமே முடியும. எனவே இதை தமிழர்கள் வரவேற்க வேண்டும்

    ReplyDelete
  2. If gov. register this party then it will be headache for every single srilankan, be aware pls

    ReplyDelete

Powered by Blogger.