Header Ads



குளியலறையில் வெட்டப்பட்டதா கழுத்து..? வீசப்பட்ட தலையைத் தேடி தேடுதல் தொடருகிறது

கொழும்பு டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் தலையில்லா சடலம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸார் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி குறித்த யுவதியை அவரது காதலனான புத்தல பொலிஸ் உத்தியோகத்தர் பிரேமசிறி, தனது தாக்கி கொலை செய்துள்ளதுடன், ஹங்வெல்ல விடுதியின் குளியலறையில் அவரது தலையை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதியின் கழுத்திலுள்ள காயங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த யுவதி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஹங்வெல்ல விடுதியின் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை நடத்தியுள்ளனர்.

இதன்படி, விசேட இரசாயண பதார்த்தமொன்றை பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, குளியலறையிலிருந்து நீர் வெளியேறும் பகுதியிலும், குளியலறையின் ஏனைய சில இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த யுவதி தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கொலை செய்யப்பட்டதன் பின்னர், ஹங்வெல்ல நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு சென்ற சந்தேகநபர், 6250 ரூபா பெறுமதியான பயணப் பையொன்றை கொள்வனவு செய்துள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று, குறித்த யுவதியை கொலை செய்வதற்கான கத்தியை, சந்தேகநபர் ஹங்வெல்ல பகுதியிலேயே கொள்வனவு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபர்கள் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.

பயணப் பையில் யுவதியின் உடல் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யுவதியின் தலை பகுதியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

குறித்த நபர், தனது கையில் கொண்டு செல்லும் பையிலேயே, யுவதியின் தலை இருந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

டாம் வீதியில் பயணப் பையை கைவிட்டு செல்லும் போது, அவரது கையில் பையொன்று காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், சந்தேகநபர் வீட்டிற்கு செல்லும் போது, அவரது கையில் எந்தவொரு பையும் இருக்கவில்லை என சந்தேகநபரின் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சந்தேகநபர், யுவதியின் தலையை ஏதேனும் ஒரு இடத்தில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

எவ்வாறாயினும், யுவதியின் தலையை தேடி தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

- IBC -


No comments

Powered by Blogger.