Header Ads



கொட்டுகொட தம்மாவாச மகாநாயக்க தேரரின், தகனக்கிரியை நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தவை


ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்கர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர் தேசிய, சமய பிரச்சினைகளில் சாசன பாரம்பரியத்தை பாதுகாத்து அந்த கருத்தின் அடிப்படையில் நாட்டுக்காக பணியாற்றினார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

தேரர் அவர்கள் அமைதியான நாட்டிற்காக எப்போதும் அரசாங்கத்திற்கும் அரச தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கியதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

இன்று (25) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் தகனக் கிரியை நிகழ்வின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

தகனக் கிரியை நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். 

1933 ஜனவரி 26ஆம் திகதி அலுத்குரு கோரளை, தாசியாபத்துவை அத்தனகல்லை ஓயா அருகே உள்ள கொட்டுகொட கிராமத்தில் பிறந்த தேரர் அவர்கள், தனது 88வது வயதில் உயிர் துறந்தார். தனது 14வது வயதில் துறவரத்தில் இணைந்துகொண்ட தேரர் அவர்கள், 1954ஆம் ஆண்டு உபசம்பதாவ பெற்றார். 

இரத்மலானை பரமதம்மசைத்திய பிரிவெனா மற்றும் மாலிகாகந்த வித்யோதய பிரவெனாக்களில் கல்வி கற்ற தேரர் அவர்கள், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக உன்னதமான சாசனத்தை மகிமைப்படுத்தினார். அமரபுர மகா நிக்காயவின் அனுநாயக்கர், இணை லேக்ககாதிகாரி, மகா லேக்ககாதிகாரி மற்றும் சங்கைக்குரிய மகா நாயக்க பதவிகளை வகித்த தேரர் அவர்கள், உயிர் துறக்கும் வரை சமூகத்திற்கும் பௌத்த மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை புரிந்தார். வானொலி, தொலைக்காட்சிகளின் ஊடாக அதிகளவிலான தர்மப் போதனைகளை போதித்த தேரர் அவர்கள், பல தர்ம புத்தகங்களையும் எழுதியுள்ளார். 

பாதுகாப்புச் செயலாளராகவும், அரச தலைவராகவும், அதன் பின்னர் நெருங்கிய பங்களிப்பாளராகவும் தம்மாவாச மகாநாயக்க தேரர் அவர்களை சந்தித்த எல்லா சந்தர்ப்பங்களிலும் சமூக நலன்பேணல், சமூகத்தை சுபீட்சம் பெறச்செய்தல், மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை செய்யுமாறே தேரர் அவர்கள் அனுசாசனை வழங்கியதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மகாநாயக்க தேரர் அவர்களின் தயாளத் தன்மையையும் உயர்ந்த பண்புகளையும் பெரியோர் மட்டுமன்றி சிறு பிள்ளைகளும் கூட உணர முடியுமாக இருந்தது. மரியாதைக்கும் உலகின் கீர்த்தியையும் பெற்ற மகாநாயக்க தேரர் அவர்கள், மென்மேலும் சமுதாயத்திற்கும் பங்களிப்பாளர்களுக்கும் கருணை காட்டியதாக ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

சங்கைக்குரிய தேரர் அவர்களின் இதயத்தில் இருந்த கருணை, குரலிலும் அவர் பேசும் பாணியிலும் தெளிவாகத் தெரிந்ததாக ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார். கிராமங்களில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சமய போதனைகளில் ஈடுபட்டிருந்த தேரர் அவர்கள், நாட்டுக்கும் பௌத்த உலகிற்கும் பெரும் புகழை கொண்டு வந்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர் அவர்களின் பூதவுடல் தகனக் கிரியை நிகழ்வு முழு அரச மரியாதையுடன் நடைபெற்றது. 

மகாநாயக்க, அனுநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர், கர்தினால் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அமரபுர நிக்காயாரக்ஷக்க நிர்வாகக் குழுவின் தலைவர் அஜிதா த சொய்சா, நிர்வாகக் குழுவினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.03.25

No comments

Powered by Blogger.