Header Ads



குறைபாடுகளை கண்டறிந்து தீர்வுகளை வழங்காவிட்டால் நிலைமை மோசமடையும் - சு.க. எச்சரிக்கை


எம்முடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி காணப்படும் குறைபாடுகளை களைந்து நீதி நியாயம் நிலை நாட்டப்படவில்லை என்றால் நிலைமை மோசமடையும் என ஆளும் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் 12 பங்காளி கட்சிகள் உள்ளன. ஆனால் பிரதான கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கின்றமையும் தொடர்புகளைப் பேணுகின்றமை என்பன மிக பலவீனமாகவே காணப்படுகிறது. உள்ளக தொடர்புகள் முழுமையாக அற்றுப் போயுள்ளன.

தேர்தலுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக தேசிய சொத்துக்கள் விற்கப்படமாட்டாது என்று கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதே போன்று ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டது.

நாட்டின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கும் போது , அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் தீர்மானிக்கப்பட்டு தகுதிகளினடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது உறவினர்கள், நண்பர்களுக்கே முக்கிய நியமனங்கள் வழங்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அவை மாத்திமின்றி பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதையும் காண்கின்றோம். இடங்கள் பல கொள்ளையடிக்கப்படுகின்றன. சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் பங்காளி கட்சிகளுக்கான நீதி , நியாயம் நிலைநாட்டப்படவில்லை. குறைபாடுகளை கண்டறிந்து அவ்வப்போது தீர்வுகளை வழங்காவிட்டால் நிலைமை மோசமடையும் என்றார். ibc

1 comment:

  1. Big Talk. What will you do? Will you Pull out of the Govt?

    ReplyDelete

Powered by Blogger.