Header Ads



பாணி மருந்தை பயன்படுத்துமாறு Email - மற்றுமொரு புதிய சர்ச்சை..!


விமான நிலைய பணிக்குழாமினருக்காக கொவிட் 19 தடுப்பதாக கூறப்படும் தம்மிக்க பாணியை கொள்வனவு செய்யுமாறு அறிவித்து மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

இன்றைய -19- நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவ்வாறான எந்தவொரு தீர்மானமும் விமான நிலையம் அல்லது விமான சேவைகள் நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் வழிநடத்தல் பணிப்பாளர் சேஹான் சுமனசேகர எமது செய்தி பிரிவிற்கு உறுதிப்படுத்தினார்.

கொவிட் 19 தடுப்பதாக கூறப்படும் கேகாலை தம்மிக்க பண்டாரவால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பாணி தொடர்பிலான ஆய்வு கூட பரிசோதனை ஆரம்பித்து இன்றுடன் 10 நாட்கள் நிறைவடைகின்றன.

எனினும் அந்த பாணியை அருந்தியவர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை தொடர்பில் Hiru செய்தி சேவை, சுதேச சிகிச்சை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவிடம் வினவியது.

இதற்கு பதில் வழங்கிய அவர், ஆய்வு கூட பரிசோதனையில் உறுதிப்படுத்துவதற்கு முன்னர் குறித்த பாணியை கொரோனா தடுப்பு ஒளடதமாக பயன்படுத்த முடியும் என தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.