Header Ads



கிழக்கு மாகாணத்தின் 13 உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த தடை


கிழக்கு மாகாணத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் சபை தவிசாளர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச சபைகள், நகரசபைகள் அடங்கலாக 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அதிகாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர், அம்பாறை ஆகிய நகர சபைகளின் தலைவர்களுக்கும் பொத்துவில், இறக்காமம், பதியத்தலாவ, மண்முனை, வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர்பற்று, சேருவில, தம்பலகாமம், திருகோணமலை பட்டிணமும் சூழலும், மொரவெவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்களுக்குமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு தொடர்பான விசேட வர்த்தமானி வெயிடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரால் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது வரை சபை அமர்வுகளை நடத்துவதற்கும் தவிசாளர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவ்வித மூலதன வேலைத்திட்டங்களையோ அல்லது இலவச விநியோகங்களையோ மேற்கொள்ளாதிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.