December 20, 2020

இறுதி மூச்சிருக்கும்வரை முஸ்லிம் காங்கிரசில் இருப்பேன், என்றுதான் கட்சியில் இணைந்தேன் - அலிஸாஹிர்


இறுதி மூச்சிருக்கும் வரை முஸ்லிம் காங்கிரசில் இருப்பேன் என்றுதான் கட்சியில் இணைந்தேன் ஆனால் எமது மத அனுஷ்டானத்தையே சவாலுக்குள்ளாக்கிய காரணகர்த்தாக்கள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் தான் என்றிருக்க, எனது கடைசி மூச்சை நான் முஸ்லிம் காங்கிரசிலிருந்து கொண்டு எவ்வாறு சுவாசிக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றார் முன்னாள் சமூகவலுவூட்டல் இன நல்லிணக்க ராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா. தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு...

கே: முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து என்ன சொல்ல விளைகின்றீர்கள்? 

நான் அறிந்த வகையில், இலங்கையின் பெறுமதிமிக்க பாரம்பரியங்கள், கலை, கலாசார விழுமியங்களில் முஸ்லிம்களின் வகிபாகமும், பங்களிப்பும் கலந்தே இருந்து வந்திருக்கிறது. இருந்தும் கூட, அண்மைக்காலமாக எமது சமூகத்தின் பாதுகாப்பிற்கும், நல்வாழ்விற்கும், எம்மால் செலுத்தப்படக்கூடிய அதிகூடிய அக்கறை தொடர்ச்சியாக பல அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு, எமது சமூகத்தைப் புறந்தள்ளுவதுடன், தப்பபிப்பிராயங்களையும் துவேசத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். 

கே: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நீங்கள் ஏன் இணைந்து கொண்டீர்கள்? 

முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக பல்லின மக்களது புரிந்துணர்வுடனான சமாதான சகவாழ்வுக்காகவும், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சுபீட்சத்துக்காகவும் மக்கள் பணிகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் கடந்த 5 வருடங்கள் இணைந்து செயற்பட்டேன். மனத்தூய்மையுடன் இணைந்து நான் செயற்பட்ட இந்த 5 வருட காலத்தில் முடிந்தளவு பணிகளை ஆற்றியிருக்கிறேன். 

கே: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஏன் இப்போது விலகினீர்கள்? 

எமது மக்களது எதிர்பார்ப்புகளுக்கும், ஒட்டுமொத்த எமது நாட்டு பிரஜைகளினதும் நலன்கருதியும் கடமை உணர்வுடனும், சகிப்புத்தன்மையுடனும் அரசியல் வேறுபாடுகளை எல்லாம் மறந்து, கூட்டாக தீர்மானங்களை எடுத்து தன்னலமற்ற முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றோம். துரதிர்ஷ்டவசமாக சில விடயங்களுக்கு முற்று முழுதாக தீர்வுகள் எட்டப்படாத போதிலும், அரசியல் ரீதியாக பல விதமான இடையூறுகளும் அழுத்தங்களும் வந்த போதெல்லாம் அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடியதான தீர்வுகளை அடைய முடியா விட்டாலும், மனச்சாட்சிப்படி ஏதுவான கூட்டுத் தீர்மானங்களை வெளிப்படையாக எடுத்துச் செயற்பட்டோம்.

ஆனால், இன்று எமது சமூகம் முகங்கொடுக்கின்ற பாரதூரமான துன்புறுத்தல்களையும், சமூகப் பிரச்சினைகளையும் புறந்தள்ளி, கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, சுயநல நோக்கையும் அவரவர் தேவைகளை அடைவதை மாத்திரமே குறியாகக்கொண்டு கட்சியின் பிரதிநிதிகள் செயற்பட்டமையை என்னால் ஏற்க முடியவில்லை. இவர்களது செயற்பாடுகளை ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிந்த காலத்திலிருந்தே வெளிப்படையாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தேர்தலிலே வெல்லும் வரை மக்களுக்கு உணர்ச்சியூட்டி, தேசிய அரசியல்வாதிகளை தூற்றி, அழுது புரண்டு வாக்குகளைச் சேகரித்து விட்டு, தேர்தல் வெற்றிக்குப் பின் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, தேர்தல் சூடு அடங்குவதற்குள்ளேயே எதையெல்லாம் விமர்சித்து உரையாற்றினார்களோ, அவற்றையெல்லாம் மறந்து அரசியல் திருத்தத்திற்கு ஆதரவளித்தமையை கண்கூடாக நான் கண்டு கொண்டேன். பிடிக்காததால் விலகிவிட்டேன்.  

கே: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நம்பிக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன? 

இந்தக்கட்சியில் இணைந்த நாள் முதல் நான் பகிரங்கமாக கூறி வந்த விடயம் இறுதி மூச்சிருக்கும் வரை இக்கட்சியில் இருப்பேன் என்பதாகும். எமது மத அனுஷ்டானத்தையே சவாலுக்குள்ளாக்கிய காரணகர்த்தாக்கள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் தான் என்றிருக்க, எவ்வாறு எனது கடைசி மூச்சை நான் முஸ்லிம் காங்கிரசிலிருந்து கொண்டு சுவாசிக்க முடியும்? எமது நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்களை ஆதரிப்பவர்கள் எமது கட்சியைச் சார்ந்தவர்கள். இதனை எந்த வகையிலும் எனது மனச்சாட்சிப்படி ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. ஒரு முஸ்லிமின் ஜனாசாவைக்கூட காப்பாற்றி இறுதிக்கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பது உணர்வுபூர்வமாக எம் எதிர்காலத்தை வழிநடாத்தக்கூடிய இளைஞர்களை உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு ஆளாக்கியுள்ளது. இவர்களை வழிநடாத்தி, தேவையான உள ஆற்றுப்படுத்தல்களை வழங்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளோம். எமது கட்சிசார் பிரதிநிதிகளது கவனயீனமான செயற்பாடுகள் காரணமாக நாங்களும் குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டுள்ளோம். எமது கட்சி உறுப்பினர்களது பாராளுமன்றச் செயற்பாடுகள் மக்கள் மீதும், சமூகம் மீதும் கரிசனை இல்லாத சூழலில் இக்கட்சியோடு தொடர்ந்து பயணிக்க முடியாமைக்கு என்னை மன்னியுங்கள்.இந்த மனோநிலையுடன் என்னால் தொடர்ந்தும் இக்கட்சியில் பயணிக்க முடியாதென்பதை இங்கு வெளிப்படுத்துகிறேன். 

கே: உங்களுடைய எதிர்கால அரசியல் பயணம் எவ்வாறு அமையும்? 

எந்தவித சலுகைகளையோ, சிறப்புரிமைகளையோ, பதவிகளையோ எங்கும் எதிர்பார்க்கவுமில்லை. அவற்றைத்தேடி அலைபவனுமில்லை. உண்மையிலேயே, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி ஸ்திரத்தன்மையை நிலைபெற வைப்பதற்காக பாராளுமன்றப் பதவியையே முன்வந்து இராஜினாமாச்செய்த ஒரு சிலரில் நானும் ஒருவன் என்று சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். எமது முஸ்லிம் சமூகத்திற்காகவும், எமது நாட்டின் அத்தனை பிரஜைகளின் சுபீட்சத்துக்கும் நான் எவ்வாறு ஆரம்பம் முதல் தொழிற்பட்டு வந்தேனோ அதே அடிப்படையில் தான் என்னால் தொடர்ந்தும் செயற்பட முடியும். 

கே: முஸ்லிம் காங்கிரஸ் எம்.பீக்கள் சுயநலமாகவே நடந்துகொள்கின்றார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

முஸ்லிம்களது எதிர்காலம், இருப்பு, அவர்கள் மீதான அடக்குமுறை குறித்த எவ்வித அக்கறையுமின்றி ஆதரவளித்த இவர்களது நயவஞ்சகத்தனமான செயற்பாட்டிற்கெதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளோ, பகிரங்க விளக்கங்களோ கோராதிருக்கின்ற கட்சியை முஸ்லிம்களது ஏகோபித்த குரல் என எவ்வாறு கூறுவது? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது ஜனாசாவுக்காக கௌரவமாகச் செய்ய வேண்டிய இறுதிக்கடமையான நல்லடக்கத்தைக்கூட சரிவர நிறைவேற்ற முடியாத வகையில் வந்திருப்பது நீதி, நியாயத்தை மதிக்கின்ற எமக்கு கஷ்டத்தையும், வருத்தத்தையும் உண்டாக்கிய போதும், நீதிக்கு மதிப்பளித்து இறைவன் மீது பாரத்தை அளித்துவிட்டு  அல்லாஹ்வே எமக்குப் போதுமானவன், அவனே பாதுகாவலன் எனும் தாரக மந்திரத்தைக் கொண்டு எம்மைச் சாந்தப்படுத்திய போதும் மிகவும் மனமுடைந்தவர்களாகவே உள்ளோம். 

யூ.எல்.எம்.ஹரீஸ்

2 கருத்துரைகள்:

NO.1 THUVESHI CHAMPIKVIN MADIYIL
UTKAARA POY IRUKKIRAAN.

Post a comment