Header Ads



உள்ளத்தின் வரிகள்...


அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.  [அல்குர்ஆன் 8:30]

எந்த ஒரு உயிரினத்தையும் நெருப்பால் எரிக்க வேண்டாம் என்று சொன்ன இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டவர்களை, 

மரணித்தபின் மனிதவுடலை புதைக்க வேண்டும் என்று ஏவிய இஸ்லாம் மதத்தை விசுவாசித்தவர்களுக்கு, 

அவர்களது உடலை தீயிலிட்டு நன்றாக கருகவிட்டு தன் இனவாத பசிக்கு மனதளவில் பசியாற்றிவிட்டு “இந்த சாம்பலை கொண்டுபோய் அடக்குங்கள்” என்று சொல்கின்ற அரக்கத்தனம் கொண்டவர்களை நிகழ்கால சவாலாக நம் சமூகம் பெற்றுள்ளது. 

“செத்தாலும் கணக்கிலெடுக்கமாட்டோம்” என்ற ஒரு விடயத்தை நம் சமூகத்திற்கான செய்தியாக இந்த இனவாதிகளும், அவர்களின் ஆட்டங்களை கண்டுகொள்ளாத அரசாங்கமும் தருவதாகவே கருதமுடியும்! 

இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவரின் வாழ்நாளின்போது மறுக்கப்பட்ட உரிமை, இறந்த பின்னும் மறுக்கப்படுகிறதை விட கொடுமை வேறு என்னதான் இருக்க முடியும்? 

உச்சபட்ச கோபம் கொண்ட ஒருவன் தன் எதிரியை கத்தியால் குத்திக் கொலைசெய்துவிட்டு, மீண்டும் இறந்த உடலின் மீது வெறியடங்காமல் அதே கத்தியால் குத்தி சல்லடைபோடுவதை போன்றே, இன்று முஸ்லிம் சமூகத்திற்கு நடக்கும் அநியாயங்கள் காட்சி தருகிறது. 

அண்மையில் பாலஸ்தீன விடுதலை பற்றியும், பாலஸ்தீனர்களுக்கெதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்களையும் கண்டித்துப் பேசிய நமது நாட்டு பிரதமர், உலக வரைபடத்தில் மீண்டும் பாலஸ்தீனம் உள்வாங்கப்படவேண்டுமென்றும் சொல்லிவைத்தார். நல்ல செய்தி தான்! 

ஆனால், தங்களின் நாட்டிலே வாழும் முஸ்லிம் சமூகம், உணர்வு ரீதியாக அடக்கப்பட்டு, உரிமைகள் பலவந்தமாகவும், பகிரங்கமாகவும் மறுக்கப்பட்ட நிலையில் இனவாதத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றோமே,,? இதற்கான விடுதலையை பற்றி ஏன் சிந்திக்கவில்லை.? 

பிரதமரே.. 

சரியோ, தவரோ.. உங்கள் அரசாங்கத்தை பாதுகாக்க ஜெனீவா வரை சென்று தங்கள் அரசுக்கு விசுவாசமாக முஸ்லிம் தலைவர்கள் இருந்தார்களே.. அதனை என்றாவது சிந்தித்ததுண்டா? 

உங்கள் காலத்தில் மட்டுமல்ல.. சிங்கள அரசரை, தன் நாட்டு அரசரை காட்டிக்கொடுக்காமல் தன்னுயிரை தியாகம் செய்தாளே.. ஒரு வீர இஸ்லாமிய பெண்.. அதனை மறந்துவிட்டதா உங்கள் சமூகம்..? 

எத்தனை மத்திய கிழக்கு நாடுகள் உங்கள் அரசுக்கு அள்ளியள்ளி தந்தது? நல்ல உறவோடு இந்த முஸ்லிம் சமூகம் இருந்த காலமெல்லாம் தங்கள் ஞாபகத்தில் இல்லாது போய்விட்டதா? 

உங்கள் அரசின் சமயம் முஸ்லிம்களுக்கெதிராக முதல் இனவாத தீபற்றிய போதே, அதனை அணைத்து அகிம்சையை நிலைநாட்டியிருந்தால், ஆரம்ப ஆட்சி மாற்றம் நிகழாமல் இருந்திருக்கலாம் அல்லவா? 

படுபயங்கரமான உள்நாட்டு போரையே அடக்கிய உங்களுக்கு, இந்த இனவாத தீயை கொளுத்திய சில சக்திகளையும், சில இனவாதிகளையும் அடக்கமுடியாமல் போனதேனோ? 

நீங்கள் கைவிட்ட பின்னரே முஸ்லிம் சமூகம் உங்களை மாற்ற எண்ணம் கொண்டு மற்றைய அரசை உருவாக்க உதவி செய்தனர். 

ஒருவேளை அதற்காகவா இந்த சமூகம் சுட்டெரிக்கப்படுகிறது? 

நீங்கள் எம் சமூகத்தை உதறிவிட்டு, இந்த சமூகத்தின் மீது விரல் நீட்டுவது என்ன ஞாயம் என சொல்வீர்களா?

இஸ்லாமியர்கள் ஒருபோதும் மத வழிபாட்டுத்தளங்களை தாக்குவதில்லை. தாக்குபவனும் நிச்சயமாக ஒரு இஸ்லாமியனாக இருக்க மாட்டான்.  

இன்னும் உரக்கச் சொல்கிறோம். ஸஹ்ரானும் அவனது கூட்டமும் செய்த செயல், எங்களுக்கும் எதிரானது. 

நாங்கள் அள்ளாஹ்விற்கு உருவம் இல்லை என்கிறோம்.  அது உங்களுக்கு மட்டுமல்ல. பிற மத சகோதரர்களும் அறிவார்கள். 

ஆனால், ஸஹ்ரான் அள்ளாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்று சொன்னவன். அவன் எப்படி ஒரு முஸ்லிமாக இருக்க முடியும்?

அன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அந்த நாசகாரர்களின் உடல்களை வாங்க மறுத்தது. ஆனால், அவர்களின் உடல்களை புதைத்தீர்கள். எரித்தாலும் கேட்பதற்கு யாருமில்லை.

ஆனால், இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் புதைக்க உடல்களை கேட்டு நிற்கும் பொழுது, எரித்துவிட்டு சாம்பலை கொடுக்கிறீர்கள்.. 

அந்த அயோக்கியர்களை நம் சமூகமே ஏற்றுக்கொள்ளாத நிலையில், எம்மை ஏன் அனாவசியமாக தண்டிக்கின்றீர்கள்? நாங்கள் இதற்கு பொருப்பாளிகள் அல்லவே..!

வெளியிலே எரிந்துகொண்டிருந்த இனவாத நெருப்பு, அரசாங்க அதிகாரங்களுக்குள்ளும், அமைச்சுகளுக்குள்ளும் பரவியிருக்கின்றன. மக்கள் நலன்பேணக்கூடிய மருத்துவ துறையே இன்று மனிதநேயமற்று எரிந்த புகையை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. 

இந்நிலை தொடர்ந்தால், மிகவும் ஆபத்தானதொரு முன்னோடியை நம் அடுத்த தலைமுறைக்கு கொடுத்த பாவத்திற்கு ஆளாகிவிடுவோம்.  

இனவாத பேச்சுக்களையும், இனவாத சக்திகளையும் அடக்கினாலே, இலங்கையில் சகல மக்களும் நிம்மதியாக வாழ முடியும். 

நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நல்லாட்சியைத் தான்!

இது இலங்கை நாட்டின் பிரஜை,

அப்துல் ரஹ்மான் ஹனீஃபா 

1 comment:

  1. Excellent. Well said brother Abdul Rahman Haneefa

    ReplyDelete

Powered by Blogger.