Header Ads



சகல இன மக்களையும் ஜனாதிபதி அரவணைக்க வேண்டும் - முஜிபூர் ரஹ்மான்


(ஆ .யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான உரையில் அவர் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாது அவரை ஆதரித்த தரப்பை மாத்திரமே கருத்தில் கொண்டுள்ளார், இந்த நாட்டில் பிரிவினையினை உருவாக்கி வர்க்கவாதம், இனவாதத்தை தூண்டும் பிரதானியாக ஜனாதிபதியே உள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது, அதேபோல் ஜனாதிபதி நேற்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார். நேற்று அவர் உரையாற்ற முன்னர் பல பரபரப்புகள் காணப்பட்டன, 

ஆனால் அவரது உரையில் சில காரணிகளை முன்வைத்தார். இதில் அவர் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜனாதிபதி என்பதை மறந்து தனது வெற்றிக்கு வாக்களித்த மக்களை மாத்திரம் நினைவுபடுத்தி பேசினார். எனவே நேற்று அவரது உரை நாட்டு மக்களுக்கான உரை அல்ல. இது பிளவுக்கான ஆரம்பம் என்பதை அவர் காட்டுகின்றார்.

ஜோ பைடன் அண்மையில் ஒரு விடயம் கூறினார், அமெரிக்காவில் இனி சிவப்பு , நீல பிளவுகள் இல்லை, ஒட்டுமொத்த அமெரிக்காவாக நாம் இணைய வேண்டும் என்றார். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றும் வேளையில் இன பிளவை, வர்க்க வாதத்தை ஊக்குவித்துள்ளார். அடிப்படைவாதத்தை நிறுத்த வேண்டும் என கூறிய ஜனாதிபதியே பிளவுகளை ஏற்படுத்தியுள்ளார்

இந்த நாட்டினை அபிவிருத்தியின் பக்கம் கொண்டுசெல்ல வேண்டும் என்றால், நாடாக ஒன்றிணைய வேண்டும் என்றால் முதலில் சகல இன மத மக்களையும் ஜனாதிபதி அரவணைக்க வேண்டும். ஆனால் இன்னும் பிரிவினையின் பக்கமே ஜனாதிபதி நின்று சிந்திக்கின்றார். இது ஜனநாயக நாட்டினை கட்டியெழுப்பும் கொள்கை அல்ல. 

அதேபோல் பிரதமர் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டம் மிகவு பலவீனமான வரவு செலவு திட்டமாகும். வருமானத்தை பலப்படுத்த அரசாங்கம் எந்த வேலைதிட்டதையும் கையாளவில்லை, வெறுமனே சீனாவை நம்பி வரவு செலவு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். கடந்த ராஜபக் ஷ ஆட்சியில் போன்று நாட்டின் சொத்துக்களை விற்று வருமானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர் என்றார். 

No comments

Powered by Blogger.