Header Ads



பிள்ளையானுக்கு வழங்கும் சலுகை, ரிஷாத் பதியுதீனுக்கும் வழங்கவேண்டும் - லக்ஷ்மன் கிரியெல்ல


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறையில் இருக்கும் பிள்ளையானுக்கு ஒரு விதமாகவும் ரிஷாத் பதியுதீனுக்கு வேறு விதமாகவும் கவனிக்க முடியாது. அதனால் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

பாராளுமன்றம் இன்று  புதன்கிழமை காலை கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதன் பின்னர் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர அனுமதிக்குமாறு நாங்கள் ஆரம்பத்தில் கேட்டபோது, அதற்கு சபாநாயகரான நீங்கள், சிறைச்சாலையில் கொவிட் பிரச்சினை இருப்பதால் சிறைச்சாலைகளில் இருப்பவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருவதால் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக  கட்சி தலைர்கள் கூட்டத்தின்போது தெரிவித்தீர்கள். ஆனால் ரிஷாத் பதியுதீன் தற்போது இருப்பது கொவிட் குவியலிலாகும்.

அத்துடன் சிறைச்சாலைகளில் இருக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வைபவங்களுக்கு செல்கின்றனர். சிறையில் இருக்கும் பிள்ளையான் மட்டக்களப்பில் ஒரு வைபவத்துக்கு சென்று அங்கு திறப்பு விழாவொன்றில் கலந்துகொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். அவர் மட்டக்களப்பில் இருந்தாலும் சிறையிலே இருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உங்களிடமே இருக்கின்றது. இதனை தெரிவிப்பதற்கு எங்களுக்கு வேறு யாரும் இல்லை. 

சிறையில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மாதிரி கவனிக்கப்படவேண்டும். பிள்ளையானுக்கு ஒருவிதமாகவும் ரிஷாத் பதியுதீனுக்கு ஒரு வேறுவிதமாகவும் செயற்படமுடியாது. அதனால் சுகாதார வழி முறைகளை கடைப்பிடித்தேனும் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மட்டக்களப்பிலே இருக்கின்றார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம். அத்துடன் இதில் இருக்கும் பிரச்சினை தொடர்பாகவும் நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றோம் என்றார்.

1 comment:

  1. அது எப்படி? இரண்டு பேரும் ஒரே குற்றத்தை செய்யவில்லையே..

    ReplyDelete

Powered by Blogger.