Header Ads



ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய தான் அனுமதிப்பதாக ஜனாதிபதி அமைச்சரவையில் (9/11/2020) அறிவித்திருக்கிறார்


இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்குமான ஓர் பொதுவான வேண்டுகோள்

கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக மரணிப்பவர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு தான் அனுமதிப்பதாக ஜனாதிபதி அமைச்சரவையில் (9/11/2020) அறிவித்திருக்கிறார். நாங்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு சற்று தாமதமாகித்தான் கிடைக்கும் என்றாலும் அதை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் வரவேற்கத்தக்கதாகும் என்பதை மனப்பூர்வமாக உணரப்படல் வேண்டும்.

 இலங்கையிலுள்ள 20 லட்சம் முஸ்லிம்களும் இறை அச்சத்துடன் அழுது தொழுது கேட்கின்ற பிரார்த்தனைகளுக்கும், அவர்கள் மனதுகளில் அடைத்து வைத்திருக்கின்ற மனக்குமுரல்களுக்கும் கிடைக்க வேண்டிய பெறுமதியான ஓர் பலன் கிடைக்கவேண்டிய நேரத்தில் இறைவன் உதவியால் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கைதான் எங்களது அடிப்படையின் ஆதாரமாகும்.

எனவே, இதற்கான ஒழுங்குகள் மேற்கொண்டு உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும் வரை நாம் காத்திருக்கும் அதேவேளை, அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் அமைச்சரவை அமைச்சர்கள், அரசாங்கம் மற்றும் எம் எல்லோரினதும் சேம நலன்களை பேனுவதற்காக இரவு பகல் பாராமல் அயராது உழைக்கும் சுகாதார துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், சகல உத்தியோகத்தர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

சாதகமான இந்தத் திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 8 மாதங்களாக இதய சுத்தியுடன் செயலாற்றிய ஒவ்வொருவருக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

எமது நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்களின் அளப்பரிய பங்களிப்பை இங்கு நாம் நன்றியறிதலுடன் பதிவு செய்தே ஆக வேண்டும்.

எமது இலங்கைவாழ் முஸ்லிம்களது கவனத்தில் கொண்டு வருவதற்க்காக மனம் திறந்து சில அத்தியவசிய விடயங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 

நாம் அனைவரும் காத்திருக்கும் நல்லதொரு தீர்வை அடையும் வரையும் இப்போது கேள்விப்படுகின்ற செய்தியை ஒரு வெற்றியாகக் கருதி வெற்றிக் களிப்புடன் கொண்டாடி ஆர்ப்பரிக்க வேண்டாம் என்பதை மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

உண்மையிலே நாம் அனைவரும் தேசப்பற்று மிக்க இலங்கையர்கள் என்றாலும், எமது முன்னோர்களின் அர்ப்பனிப்புகள், பங்களிப்புகளை மறந்து நாம் தவறியிருக்கின்றோம் என்றுதான் நாம் கருத வேண்டும். 

இப்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் எங்களது தவறுகளை சுட்டிக் காட்டுவதற்காகவும், எம்மை தட்டி எழுப்பி விழிப்படையச் செய்வதற்க்குமாக எச்சரித்து ஒழிக்கும் ஓர் பாரதூரமான அழைப்பாக உணர கடமைப்பட்டுள்ளோம். 

மீண்டும் நாம் எதிர் பார்க்கும் முற்று முழுதான சுதந்திரத்தையும், உரிமைகளையும் நாம் அனுபவிப்பதற்கான ஆற்றலை நாம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவ்வாறான திருப்பத்தின் ஊடாக மீண்டும் கிடைக்கப்பெற்றதாகவே கருதப்படுதல் வேண்டும்.

நாம் இலங்கையர்கள் என்ற வகையில் இதனை  அனுபவிக்கின்றோம். எமது முயற்சிகளின் மத்தியில் “சுதந்திரம்” மற்றும் “சாதாரண நிலைமை” என்பன முற்றிலும் புதிய வரைவிலக்கணங்களைக் கொண்டுள்ளன. 

இந்த காலகட்டத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனுபவித்திருக்கின்ற சோக சம்பவங்களை கேட்டு அவர்களை அமைதிப்படுத்தும் அதேவேளை, அனைவருக்கும் ஆறுதலிக்கின்ற நியாயமான எதிர்பார்ப்புகளை புரிந்து செயற்படுமாறு அரசாங்கத்திடமும் சுகாதார அதிகாரிகளிடமும் கடந்த 8 மாதங்களாக வாதாடி, இரவும் பகலும் பாடுபடுகின்றவர்களில் ஒருவன் என்ற வகையில் நான் இதனைக் கூறுகின்றேன். 

மக்கள் மத்தியில் திடீர் என்று ஏற்படுகின்ற அனர்த்தங்கள், ஆபத்துகளின் போதும் அவசரத்தேவைகளின் போதும் எந்த விதமான பங்களிப்பையோ , உதவிகளையோ வழங்க தவறியவர்கள் , தேவைப்பட்ட போது கண்டுகொள்ளாமல், தங்களது ஒரு விரலைக்கூட இந்த நோக்கங்களுக்காக சற்றேனும் அசைக்காமல் இருந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசியல் இலாபம் தேடுவதற்காக  தற்போது இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி அரசியல் லாபம் அடைய முயற்சித்து நிலைமைகளை சீர்குழைக்கிறார்கள் என்பதற்காகவும் நான் இதை கூறவேண்டியுள்ளது. 

இது தற்போதுள்ள சூழ்நிலையை தவிர்க்கமுடியாதவாறு மேலும் மோசமடையச் செய்யும் நிலமையை தோற்றுவிக்க செய்துள்ளது.

நாம் ஆரம்பத்திலிருந்தே மும்முரமாக இந்த விடயங்களில் கவனத்தை செலுத்தி முயற்சித்துக்கொண்டிருந்த போதெல்லாம் பேசா மடந்தையாக வாயடைத்திருந்தவர்கள்தான் இவர் கள். 

பின்னர், தேர்தல் காலங்களின்போது மாத்திரம் “தாம் முஸ்லிம்களின் உரிமைக்காக” போராடுவதாகக் கூறி, கோபாவேசத்தோடு ஆவேசமான வார்த்தை பிரயோகங்களுடன் பிரசாரங்களை செய்தார்கள்.

அதன் பின்னர் இந்த விடயம்  தமது நிகழ்ச்சி நிரலுக்கு பொருத்தமற்றதும் முக்கியத்துவம்  அற்றதும் எனக் கருதி மீண்டும் வெறுமனே மௌனமாகிப்போனார்கள். 

இந்த நிகழ்வுகள் எமக்கு ஓர் உதாரணத்தைப் போதிக்காவிட்டால், இலங்கை முஸ்லிம்கள், ஆகக் குறைந்தது கடந்த  19 மாதங்களாக நாம் முகம்கொடுத்த கசப்பான அனுபவங்களை எண்ணிப்பார்க்க தவறமாட்டார்கள். ஒரு வேறுபட்ட தோற்றப்பாட்டை இதன்மூலம் புலப்படுவதை உணர்வுபூர்வமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

நாம் அடைந்துள்ள இந்நிலைமைக்கான காரணம் மீண்டும் மீண்டும் நாம் மேற்கொண்ட நடவடிக்கைளும் தெரிவுகளும் தவறுகளுமேயன்றி வேறு யாராலும் ஏற்ப்பட்டதல்ல.

சமுதாய நலன் கருதி செயற்படுவதாகக் கூறிக்கொண்டு, சமாதானத்தை போற்றி , புகழ்ந்து, பூசித்து , நேசித்து சகவாசத்துடன் வாழ்ந்து வந்த மக்களிடையே குறுக்கே வந்து தலையீடுகள் செய்து தமது சொந்த நலனுக்காக பிரிவினைவாத விதைகளை விதைத்த, பழி பாவங்களுக்கு அஞ்சாத சுயநலவாத தனி நபர்களுக்கு நாம் அனுமதி வழங்கி இருக்கிறோம். 

எமது முஸ்லிம் சமுதாயத்தின்மீது கறைபடிந்த திரையொன்றை  “எங்களுக்கு எதிர் அவர்கள்” என்னும் மனோநிலையைத் தோற்றுவித்தவர்களுக்கு நாம் அங்கீகாரம் கொடுத்திருக்கிறோம். 

தமது சொந்த இலாபத்துக்காக அவர்கள் மேற்கொண்ட சுயநலம் மிக்க அவர்களின் செயல்கள் முஸ்லிம்கள் எமது தாய்நாட்டுக்காக செய்த எண்ணற்ற பங்களிப்புகளையும் தியாகங்களையும் எமது சக சகோதர பிரஜைகள் மறந்துவிடுவதற்கு வழிவகுத்துள்ளது.. 

அன்றிலிருந்தே ஆரம்பித்த அளுத்கம-“வந்த பெத்தி”, திகன-உயிர்த்த ஞாயிறு ஆகியவற்றுடன் இன்று கொவிட் வரை நமது சமூகம் முகம் கொடுக்கின்ற அனைத்துமே தேர்தல்காலங்களில் மீண்டும் மீண்டும் நாம் இழைத்த தவறுகளுக்கு நாங்கள் செலுத்தும் விலையன்றி வேறு ஏதுமல்ல. 

எமது பல்வகைத் தன்மையிலிருந்த பெருமதியான கலாசார பாரம்பரியத்தில் ஈட்டிய சந்தோசம், பெருமிதம் ஆகியவற்றை அனுபவிப்பதன் நியாயபூர்வமான அர்த்தத்தை நாம் மறந்துவிட்டோம். 

எமது அந்த நாள் நினைவுகளில் இணக்கத்துடன் ஊசலாடிய ஒற்றுமை என்னும் இதயத் துடிப்பு இன்று வேதனையுடன் எம்மை விட்டு நழுவிச் செல்கின்றது. 

இவை வரலாற்றின் பங்கங்களிலிருந்து அழிந்து எமது எதிர்கால சந்ததிகள் அறியாத ஒரு விடயமாகவே ஆகிவிடும். 

நாம் அந்நியர்களாகவே பார்க்கப்படுவதற்கான ஆரம்பத்தை அடைந்திருக்கின்றோம். எமது சொந்த தாய்நாட்டிலேயே நாம் அந்நியர்களாகியுள்ளோம்.

இவ்வாறான நிலமை நிகழ்வதற்க்கு குறைகூறப்பட வேண்டியவர்களும், பொறப்புக்கூற வேண்டியவர்களும் நாமே தான்.

இது நாம் சிந்தித்து பொறுப்புணர்வுடன் செயற்ப்படுவதற்க்கான காலம்.

இது நாம் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதற்கான காலம்.

இந்த விசயத்தில்  அரசியல் கலக்காமல் செயற்ப்படுவது மிகச் சிறந்தது என சொல்லப்படுகிறது. 

ஆனால், எம்மை இந்த இக்கட்டான நிலைமைக்குள் தள்ளியிருப்பது இந்த அரசியலேதான் அன்றி எமது மார்க்க ரீதியாக நாங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை அல்ல என்பதை உணரத் தவறினால் நாம் மடையர்களாவோம். 

என்றும் நாம் கொண்டுள்ள எமது நம்பிக்கைக்குத்தான் முதலிடம். 

ஆனால், எமது தூய்மையான உண்மையுடன் கூடிய நம்பிக்கையும், எமது தனித்துவத்தை பிரதிபலிக்கும் அடையாளமும் இரண்டையுமே பாதுகாத்துப் பேணுதல் எமது விசுவாசத்துடன் இணைந்ததும் ஆகும்.   

சமாதானம், ஐக்கியம், சமத்துவம் மற்றும் தேசப்பற்று பற்றி எமது புனித குர்ஆனிலும் , எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை  வழிமுறைகளிலும் எண்ணற்ற போதனைகள் உள்ளன.  

அவற்றை அனைவரும் அறிந்து, வாசித்து , ஆராய்ந்து புரிதலை வளர்த்துக் கொள்ளல் அவசியம்.

நாம் இஸ்லாத்தை கடைப்பிடித்து நடக்கும் முஸ்லிம்கள் ஆதலால் நாட்டுப்பற்றுள்ள இலங்கையர்களும் ஆகும் என்பதால்தான் இஸ்லாமிய நம்பிக்கையின் உண்மையான அர்த்த த்தை புரிந்திருக்கிறீர்கள்.

அவ்விரண்டும் ஒன்றிணைந்து காணப்படவேண்டியது அவசியம்.

எமது தனித்துவம், எமது கலாசாரம் மற்றும் எமது பாரம்பரியங்கள் ஆகியவையும் ஏனைய எல்லா ,இலங்கைப் பிரஜைகளுடனும் ஒருங்கிணைகின்ற போதுதான் பொதுவாக நாம் அனைவரும் இலங்கையர் என்ற தனித்துவத்துடனான அடையாளத்தினூடாக வேற்றுமையிலும் ஒற்றுமை கான்கிறோம். 

நாம் பொதுவான ஒரு வரலாற்றைப் பகிர்ந்துகொள்கின்றோம். எமது சிறார்கள் பொதுவான ஒரு எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக, ஒரே தேசத்தவர்களாக சமாதானத்துடன் சகவாழ்வு வாழ்வதற்கான திடசங்கற்பத்தையும் ஆசையையும் நாம் கொண்டிருத்தல் வேண்டும். 

ஓர் அரசியல்வாதியாகவும் இலங்கையன் என்ற நாட்டுப்பற்றுள்ளவனாகவும் கடந்த 3 தசாப்தங்களில் எனது  நாட்டுக்காகவும் அதன் மக்களுக்காகவும் நான் என்னால் முடிந்தவரை தியாக மனப்பான்மையுடன், தன்னலம்பாராது, உண்மைத்தன்மையுடன்  பனிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறேன். 

எனினும், நானும் சில தவறிழைத்திருக்கின்றேன் என்பதை உணர்ந்து, அவற்றை திருத்திக்கொள்ள முயல்கிறேன். இவ்வாறு நாட்டின் மக்களது நன்மை கருதி நாம் எல்லோரும் நம்மில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு காலம் ஒரு தடையல்ல என்பதை உணர்த்த முயல்கிறேன். 

எனவே, நாம் எல்லோரும் நாம் இழைத்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்துவோம். 

நாம் போதியளவு துன்பங்களை அனுபவித்துவிட்டோம். 

நாம் போதியளவு போராடியுள்ளோம். 

ஆயினும், முடிவில் நாம் சாதித்தது என்ன? 

சமுதாயத்தின் பெயரில் குரல்கொடுப்பதாக உரிமைகோருவோர் அவரவர்கள் இலாபமடைந்துள்ளார்களே தவிர மக்கள் எந்த நன்மையும் அடையவும் இல்லை மாறாக மக்களது நிலமைகள் அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனை நிறுத்தி மேலும், மேலும் மோசமடைவதற்குள் நாம் அவற்றை மாற்றி அமைக்க இப்போதே புறப்படுவோம். 

நாடு பின்பற்றுவதற்கான முன்னுதாரணத்தைக் காட்டுவதற்கு நாம் எம்மை மாற்றிக்கொள்வோம். 

நாம் சிறந்ததைத் தெரிவு செய்வோம். சிறந்தவர்களாகத் திகழ்வோம். 

நாம் பிரிவினைவாத விதைகளைத் தூவாமல், அதற்குப் பதிலாக ஐக்கியத்தின் விதைகளை நடுவோம். 

நாம் எமது சிங்கள, தமிழ், கிறஸ்தவ மற்றும் பறங்கியர் ஆகிய அனைத்து சகோதரர்களையெல்லாம் ஒன்றிணைத்து ஐக்கியமான ஒரே குடும்பமாகத் தழுவுவோம். 

நாம் எம்மை இலங்கை முஸ்லிம்கள் என அடையாளப்படுத்திக்கொள்வதில் பெருமிதம் அடைதல் வேண்டும். 

மேலும், நாம் “இலங்கையர்கள்” என அடையாளப்படுத்தும் கௌரவ இலச்சினையை அணிந்து நாம் அந்தப் பெருமிதத்தில் திளைப்போம்.!

இதனை சிந்தித்துப் பாருங்கள்.

முன்னேறிச் செல்வதற்கான, உங்களினதும் குடும்பத்தினதும் நாட்டினதும் மேன்மைக்காக சரியான தேர்வை மேற்கொள்ளுங்கள். 

உங்கள் அனைவரினதும் பாதுகாப்புக்காகப் பிரார்த்திக்கின்றேன். இந்த கொரோனா தொற்று காரணமாக எம்மை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் எல்லாம் வல்ல இறையருளால் இடையறா இன்பத்தை அடைவதற்கு பிரார்த்திப்போமாக. 

எல்லா முஸ்லிம்களினதும் உலகளாவிய பிரார்த்தனைகளுடன் நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

ஆமீன்.

- அன்பார்ந்த சக இலங்கைப் பிரஜை 

(அலி ஸாஹிர் மௌலானா)

No comments

Powered by Blogger.