Header Ads



என்னால் இப்போது நிம்மதியாக, தூங்க முடிகின்றது - பல்டியடித்த டயானா Mp


"அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக எனக்கு எதிராகக் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கை பற்றியும் கவலையில்லை" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் எம்.பி. டயானா கமகே தெரிவித்தார்.

இப்போதே தன்னால் நிம்மதியாகத் தூங்க முடிவதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கொரோனா சுகாதார நெருக்கடிகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு கூறிய, அவர் மேலும் பேசுகையில்,

"கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோதே போரை நிறைவு செய்தார். நகரங்களை அழகுபடுத்தினார். அவரிடம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால், அண்மையில் நாட்டில் நடந்தது என்ன? உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் 250 இற்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தோம். அதற்குப்

பொறுப்புக்கூற யாரும் இல்லை. காலையில் ஒருவரும் மாலையில் ஒருவரும் விசாரணைக்குச் செல்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்ச திறமைமிக்கவர். அவரின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு ஆற்றில் தூக்கி வீசிவிட்டு நீந்தி வரச் சொல்கின்றனர். அவர் மூழ்கப்போகின்றார்.

இந்தநிலையில்தான் நான் எனது வாக்கை அவருக்கு ஆதரவாகப் பயன்படுத்தினேன். இதே நிலைமை சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்பட்டிருந்தாலும் நான் மாற்று அணியில் இருந்திருந்தாலும் இதே முடிவையே எடுத்திருப்பேன்.

எனவே, 20வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக எனக்கு எதிராக கட்சி எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தொடர்பில் கவலையில்லை.

நாட்டுக்கு அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரே தேவை. அதற்காக எனது வாக்கைப் பயன்படுத்திய மன நிறைவுடன் இப்போது என்னால் நிம்மதியாகத் தூங்க முடிகின்றது" - என்றார்.

1 comment:

  1. Welldone Daiana. We are going on wonder land in the world

    ReplyDelete

Powered by Blogger.