October 15, 2020

ஜும்மாவிலும் துஷ்பிரயோகம் செய்யப்படும், நம்பிக்கையாளர் பொறுப்புக்கள்


- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

பள்ளிவாயல்களில் நம்பிக்கை பொறுப்பாளர் என்ற பதவி எந்தளவு பொறுப்பு மிக்கது என்பதை ஒருவர் சரியாக புரிந்தால் ஒரு கணமேனும் அந்தப் பதவியில் இருப்பதை விரும்ப மாட்டார். அவ்வளவு பொறுப்பு வாய்ந்ததும் அல்லாஹ்விடத்தில் பதில் கூறவேண்டியதுமான ஒரு பொறுப்பாகும். அதேபோல் அதனை சரியாக செய்யும் ஒருவருக்கு மகத்தான கூலியும் உண்டு என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.பொறுப்புமிக்க இந்த பதவியை துஷ்பிரயோகம் செய்யும் பலரும் நம்மிடத்தில் உள்ளனர்.சிலர்  நம்பிக்கையாளராக தெரிவு செய்யப்படுவது பெருமைக்குரியது என்று எண்ணிக் கொள்கின்றனர். அதேபோல்  பள்ளிவாயல்களின்சொந்தக்காரர்களை போல் நடக்கும் நம்பிக்கையாளர்களும்  நம்மிடத்தில் உள்ளது துரதிஷ்டவசமே.


கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிவாயல்களில் தொழுகைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .ஐவேளை தொழுகையை பல ஜமாத்துகள் ஆக மாறி மாறி  தொழ சந்தர்ப்பம் இருந்தாலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு பள்ளிவாயலுக்கு செல்வதற்கு பலத்த போட்டி உள்ளது. 50 பேரில் ஒருவராக நுழைந்து கொள்ள இருக்கும் இந்த போட்டியின் காரணமாக 11 30 மணி ஆகும் போது நாட்டின் பல பள்ளிவாசல்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கை பூர்த்தி செய்யப்படுகின்றது.


 கடந்த வாரம் கண்டியில் ஒரு பிரபல பள்ளிவாயலில் நடந்த சம்பவத்தை எனது நண்பர் ஒருவர் என்னிடம் வந்து கூறி எப்படியாவது இதனை நீங்கள் பொது மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்றார். கடந்த ஒரு வாரமாக இதனைப்பற்றி யோசித்துவிட்டு எழுதுவதில் பிழை இல்லை என்று நினைத்து  எழுதுகின்றேன். குறித்த எனது நண்பர் 11.30 மணி அளவில் பள்ளிவாயல் நுழைவாயிலுக்கு சென்றாலும் 50 பேர் நிரம்பியுள்ளதால் வேறு எவருக்கும் செல்ல சந்தர்ப்பம் இல்லை என்று நுழைவாயிலில் இருந்தவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லையாம். அங்கே அன்று பிரசங்கத்தை நடாத்த இருந்த மௌலவி இருந்ததால் அவரை உள்ளே செல்ல அனுமதிப்பதில் எவருக்கும் ஆட்சேபணை இருந்திருக்கவில்லையாம். ஆனால் அவரை உள்ளே விட நுழைவாயிலை திறந்ததும் மேலும் சிலர் உள்ளே சென்றுள்ளனர் .அவர்கள் யாரென கேட்டபொழுது பள்ளிவாயலில் நம்பிக்கை பொறுப்பாளர் என்று ஒருவர் கூறினாராம். பின்னர் பாடசாலை மாணவ பருவத்தை உடைய ஒருவர் நுழையும் போது அவர் யார் என கேட்டதற்கு அந்த நம்பிக்கை பொறுப்பாளர் அது தனது மகன் என்று கூறினாராம் அவருக்கு எப்படி உள்ளே நுழைய அனுமதிப்பது என்று அங்கிருந்த எனது நண்பர் கேட்டதற்கு ஏற்கனவே Booking  செய்ததாக கூறினாராம். 

இங்கு நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற பதவியை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் இவ்வாறு ஒருவர் தொழுகையை நிறைவேற்ற செல்லும்போது இறைவனிடத்தில் சரியான கூலி கிடைக்குமா ? இங்கு குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த கதைதான் ஞாபகம் வருகின்றது. 


நாட்டில் பல இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இருந்திருக்கலாம்.. தொழும் போது எந்தவித வேறுபாடுமின்றி ஒன்றாக இருந்து நிறைவேற்றும் நாம் தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல்களுக்கு அனுமதி அளிப்பதில் பாகுபாடு காட்டலாமா? அறியாமை காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தாலும் இவற்றை தவிர்த்து முன்மாதிரியாக ஒவ்வொரு பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் செயற்பட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் மீதான நம்பிக்கை பொதுமக்களிடத்தில் வலுப்பெறும்.


2 கருத்துரைகள்:

பள்ளிவாசலின் பெயர் குறிப்பிட விரும்பவில்லை: எனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் கேள்விப்பட்டேன் கொழும்பில் பிரபலமான ஒரு பிரதேசப் பள்ளியில் நிர்வாகத்தினருக்கென்று பத்து இடங்கள் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டபின் மீதமுள்ள நாற்பதுதான் ஜமாத்தாருக்கு வழங்கப்படுகிறதாம்???

தினசரி அதிகாலைத் தொழுகைக்கு வழக்கமாக வரக்கூடியவர்களில் இருந்தே வாராந்த ஜூம்ஆத் தொழுகைக்கான 50 பேரும் தெரிவு செய்யப்பட்டால் அதிகமான பள்ளிவாசல்களில் இவ்வாறான பிரச்சினைகள் எழாது.

பள்ளிவாசல் நிர்வாகம் இதனை முன்னரேயே அறிவித்துவிடல் வேண்டும்.

மேலும், 50 பேருக்கு அதிகமானவர்கள் அதிகாலைத் தொழுகைக்கு வருகை தரக்கூடிய பள்ளிவாசல்களில், வழக்கமாக முன்வரிசைகளில் தொழுவோருக்கே அம் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

CCTV கெமராக்கள் இத்தெரிவுக்குப் பயன்படுத்தப்படலாம்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சுபஹ் தொழுகையின் பின் அவ்வாறு அவ்வாரத்துக்குத் தெரிவானோரை NOTICE BOARD மூலம் அறிவித்துவிட்டு, உரியவர்களுக்கு ஜூம்ஆத் தொழுகைக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படலாம்.

இம்முறையால் வாராந்த  முஸ்லிம்கள் நாளாந்த முஸ்லிம்களாகவும், நாளாந்த முஸ்லிம்களில் பலர் முன்வரிசையில் தொழுவோருக்குக் கிடைக்க உரிமை பெற்ற அபரிமிதமான நன்மைகளை அடைந்தோர்களாகவும் ஆவர்.

Post a comment