October 08, 2020

மாற்றங்களுக்கு வித்திட்ட, மஸ்ஊத் ஆலிம்


இலங்கையில் வாழ்ந்து மறைந்த கண்ணியத்திற்குரிய உலமாக்களின் வரிசையில் மஸ்ஊத் ஆலிம் அவர்களுக்கு தனியான இடம் உள்ளது. அன்னார் மறைந்து சுமார் 32 வருடங்களாகின்றன. 1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி அஹ்மத் அலி தம்பதிகளுக்கு மகனாக கிதானவத்தை, பஸ்யாலவில் பிறந்த அவர் தனது தந்தையின் ஊராகிய கஹட்டோவிட்டவில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். அவ்வூரைச் சேர்ந்த அப்துல் ஹபீழ் ஆலிமிடம் அல்குர்ஆனையும், மார்க்கச் சட்டங்களையும் பயின்று, சன்மார்க்கக் கல்வியை பயில காலி பஹ்ஜியதுல் இப்றாஹீமியாவில் இணைந்து கொண்டார்.


1951இல் திஹாரிய மஸ்ஜிதுல் அமீனியாவில் கதீபாக இணைந்தார். அங்கு அல்லாமா இக்பாலின் பெயரில் ‘இக்பால் நூலகம்’ அமைத்து மக்களின் வாசிப்புப் பழக்கத்துக்கு வழிகாட்டினார். ‘முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்’ ஒன்றையும் தோற்றுவித்தார். கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலுமுள்ள ஏராளமான பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரைகளை நிகழ்த்தி மக்களை விழிப்பூட்டினார். மரபுவழி ஜும்ஆக்களுக்கு மாற்றமாக தூய தமிழில் அந்தந்த காலப் பிரிவுக்குப் பொருத்தமான ஜும்ஆ உரைகளை முன்வைக்கத் தொடங்கினார்.


நாடு பூராகவும் நடத்தப்பட்ட தப்லீக் மகாநாடுகள், இஜ்திமாக்களில் பக்திபூர்வமான உரைகளை நிகழ்த்தி உள்ளம் உருகும் துஆக்களையும் மேற்கொண்டார். ஆரம்பத்தில் பெண்களே தமது வீடுகளில் சிறார்களுக்கு அல்குர்ஆனை ஓதிக் கொடுக்கும் மரபு காணப்பட்டது. இந்நிலையை மாற்றி உலமாக்கள் இப்பணியை முன்னெடுக்கும் வகையில் தோற்றுவிக்கப்பட்டிருந்த ‘மஊனதுர்ரஹ்மான்’ நிறுவனத்தில் 1961 காலப்பிரிவில் இணைந்து அதனை உரமூட்டி வளர்த்ததோடு மத்ரஸாக்களை ஒரு பரிபாலன ஒழுங்கின் கீழ் கொண்டு வந்தார். இந்நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 900க்கும் அதிக மத்ரஸாக்களை தரிசித்து அவர் அவதானித்த குறை நிறைகள் அடங்கிய குறிப்புப் புத்தகம் கிடைக்கப் பெற்றுள்ளது.


மஸ்ஊத் ஆலிமவர்கள் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தை உடையவர். ஹஜ், உம்ராக்களுக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் பெறுமதி வாய்ந்த நூல்களை அவர் சுமந்து வந்தார். ஆரம்ப கால இமாம்கள் அறிஞர்களது நூல்கள், நவீன கால அறிஞர்களது படைப்புகள் யாவும் அவரது விசாலமான வாசிகசாலையில் இடம்பெற்றிருந்தன.


1985 காலப் பிரிவில் அன்னார் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நளீம் ஹாஜியார் தனது நெருங்கிய நண்பரும், ஆலோசகருமாகிய மஸ்ஊத் ஆலிமின் நிலை பற்றி கவலை கொண்டு உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். இந்தியாவில் இடம்பெற்ற சத்திர சிகிச்சைக்குப் பின்னர் சுகமாக நாடு திரும்பினார். மருத்துவர்களது ஆலோசனைகளையும் மீறி நோன்பு நோற்றமை, தஃவா பணியில் ஈடுபட்டமை காரணமாக உடல் நிலை படிப்படியாக பாதிக்கப்பட்டு 1988.10.04 இல் அவர் காலமானார். மௌலவி அல் பாஸில் அல்ஹாஜ் மஸ்ஊத் ஆலிம் அவர்களின் மறைவு முஸ்லிம் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.


முஹம்மது அக்ரம்


2 கருத்துரைகள்:

I am pleased see his photo Br Akram

தன் அறிவுப் பணிகளால் மறைந்தும் மறையாது வாழ்ந்து கொண்டிருப்பவர் மஸ்ஊத் ஆலிம் அவர்கள்.  வல்ல நாயன் அல்லாஹ் அவருக்கு நிறைவான அருள் பொழியட்டும்... ஆமீன்.

Post a comment