Header Ads



தேர்தல் இடாப்பிலிருந்து முஸ்லிம்களின் பெயர்களை நீக்க முயற்சி - அம்பலப்படுத்தினார் ரிஷாத்


வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களைத் தேர்தல் இடாப்பில் இருந்து நீக்குவதற்கு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. ஆனாலும், அதற்கு முயற்சிக்கப்படுகின்றது, எனவே, இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

1990 இல் வடக்கிலிருந்துவெளியேற்றப்பட்ட முஸ்லிங்கள் புத்தளம், குருநாகல், அநுராதபுரம் போன்ற பகுதிகளில் குடியேறினார்கள். இதில் 50 வீதமானவர்கள் மீள்குடியேறினார்கள். 20 - 30 வீதமானவர்கள் புத்தளத்தில் நிரந்தரமாகக் குடியேறிதோடு சுமார் 10ஆயிரம் வாக்காளர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்கள்.

மன்னார், முல்லைதீவு பகுதிகளில் வீடுகள் இருந்தாலும் தொழில், சுகாதாரம், பிள்ளைகளில் கல்வி என்பவற்றுக்காக புத்தளத்தில் தங்கினார்கள்.

இவ்வாறானவர்களுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், உதவித் தேர்தல் ஆணையாளர் இவர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து அகற்றி வருகின்றார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் அவருடன் தொலைபேசியில் பேசினேன். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களைத் தேர்தல் இடாப்பில் இருந்து நீக்குவதற்கு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பில் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.

தேர்தல் காரியாலயத்துக்குச் சென்று இது பற்றி முறையிட்டுள்ளோம். மக்களின் வாக்குரிமையை பறிப்பது குறித்து அறிவித்துள்ளோம். போராசிரியர் ஹூலை இங்கு விமர்சித்தார்கள். அவர் நேர்மையான அதிகாரி.

சட்டத்தின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வதிவிடம் உள்ள வாக்காளர்களுக்கு தமது வதிவிடத்தை பதியும் உரிமை அவர்களுக்கே உள்ளது. இரு மாவட்டங்களில் வாக்காளர் பதிந்திருந்தால் ஆணைக்குழுவுக்கே அது தொடர்பில் முடிவு செய்ய முடியும்.

ஆனால், இந்த மக்கள் ஒரு இடத்தில் மாத்திரம் பதிந்துள்ள நிலையில் அதனைத் தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. MUSLIMGALAIPATRI PESHUKIRAI.
    ITHUKAALAVARAIKUM, AMAICHARAAKA
    IRUNDU, MUSLIMGALUKKU ENNA NALAVU
    SHEITHAAI???

    ReplyDelete

Powered by Blogger.