Header Ads



சிரியாவுக்கு ISIS இல் சேர இலங்கையிலிருந்து சென்ற 28 பேர் பற்றி மைதித்திரிக்கும் ரணிலுக்கும் தெளிவுபடுத்தினேன்


( எம்.எப்.எம்.பஸீர்)

 உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி, சஹ்ரான் ஹஷீம் இல்லை எனவும் சஹ்ரான் ஹஷீமுக்கும் மேலாக செயற்பட்ட தற்போது சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள  நெளபர் மெளலவியே பிரதான சூத்திரதாரி எனவும் , அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன  தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து  விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில்,  256 ஆவது சாட்சியாளராக கடந்த 27 திங்கள் முதல் சாட்சியளித்துவரும்  நிலையிலேயே நேற்று மாலை அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்டன் பாலசிங்கம் இருந்தைப் போல, தேசிய தெளஹீத் ஜமா அத்துக்கு நெளபர் மெளலவி இருந்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ராஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று முன் தினம் இரவு வரை நீண்ட, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் சாட்சியம் இன்றும் தொடர்ந்தன. இந்நிலையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின்  கேள்விகளுக்கு பதிலளித்தவாறு அரச உளவுச் சேவை முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன  மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.

'கடந்த 2019 ஏப்ரல் 4 ஆம் திகதியன்று,  பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து வெளிநாட்டு உளவுத்துறை எச்சரிக்க முன்னரேயே, சஹ்ரான் ஒரு பயங்கரவாதி என்பதை நாம் அறிந்திருந்தோம். அதனால் சஹ்ரான் தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபைக்கு 2019 ஜனவரி மாதமே அறிவித்திருந்தேன்.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களின் போது, சஹ்ரானைக் கைது செய்ய ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க நான் வலியுறுத்தினேன். சஹ்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து பல்வேறு உளவுத் தகவல்களை நாம் தொடர்ச்சியாக வழங்கியும் வந்தோம்.

உளவுத் துறை தகவல்களை ஒப்பீடு செய்து விசாரணைப் பிரிவுகள் தமது விசாரணைகளை முன்னெடுத்திருப்பின் நிச்சயமாக சஹ்ரானை உயிர்த்த ஞாயிறு தின தககுதல்களுக்கு முன்னரேயே கைது செய்திருக்க முடியும்.

2018 டிசம்பர் மாதம் ஊவா, மத்திய, வட மேல் மாகணங்களில்  பெளத்த, இந்து, கத்தோலிக்க சமயங்கள் சார் உருவச் சிலைகள் ( மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு பிரதான சம்பவம்) தகர்ப்பு சம்பவங்கள் சாதாரண காழ்ப்புணர்ச்சி அல்ல. முழு சம்பவத்திற்கும் பின்னால் தீவிரவாதம் இருந்தது, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து உளவுத் தகவல்களையும்  சிஐடியிடம் சமர்ப்பிக்குமாறு நான் எனது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க்கியிருந்தேன்.

அதன் பிரகாரம் சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில்,   மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு தொடர்பில் பிரதான சந்தேக நபர்களாக மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹஹ் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் ஆகியோரை அவர்கள் அடையாளம் கண்டனர். இவர்களை நாம் ஹக் சகோதரர்கள் என்றே உளவுச் சேவையில் அடையாளம் கண்டிருந்தோம். அவர்களில் ஒருவர் ஏர்கனவே எமது கண்கானிப்பு வலயத்துக்குள் இருந்தவர். அவ்விருவரும் துருக்கிக்கு சென்ரு வந்தவர்கள். அந்த இருவரும் அவர்களின் தகப்பனாரான இப்ராஹீம் மெளலவியும், ஜமா அத்தே இஸ்லாமி எனும் இஸ்லாமிய அமைப்பில் இருந்து அவர்களது அடிப்படைவாத சிந்தனைகளினால் நீக்கப்பட்டதாக அறிந்தேன். அதன் பின்னர் அவர்கள் மூவரும் தங்களது வீட்டிலேயே மத போதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விசாரணைகளில் ஒரு அங்கமாக, வனாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்களை சி.ஐ.டி. யினர் கைப்பற்றியிருந்தனர். சி.ஐ.டி. விசாரணைகளில் அவை வெளிப்படுத்தப்படும் வரை உளவுத் துறைகளுக்கு அது குறித்து எந்த தகவல்கலும் இருக்கவில்லை.

எவ்வாறாயினும் அவை அனைத்தினதும் பின்னனியில் சஹ்ரான் ஹஷீம் இருந்தார் என்பதை நான்  தேசிய பாதுகாப்பு கவுன்சில், உரிய விசாரணை தரப்புக்களுக்கு அறிவித்தோம்.

தான் அரச உளவுச் சேவைக்கு தலைமை வகித்த  போது,   நல்லாட்சி அரசாங்க காலத்தில் பணியாற்றிய பாதுகாப்பு செயலாளர்களுக்கு உளவுத்துறை அறிக்கைகள் உட்பட 2738 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளேன்.' என நிலந்த ஜயவர்தன சாட்சியமளித்தார்.

இதன்போது, அரச உளவுச் சேவையின் பிரதி பணிப்பாளர் ஒருவரால், சஹ்ரானின் நடவடிக்கைகள் தொடர்பில் அப்போது தேசிய உளவுத் துறை பிரதானி சிசிர மெண்டிஸுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை மையப்படுத்தி  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன கேள்வி எழுப்பினார்.

'ஆம், அந்த அறிக்கையில் இஸ்லாமிய தேசத்தை கொச்சைப் படுத்துவோர் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும் என சஹ்ரானின் கூற்று உள்ளடக்கப்பட்டிருந்தது. அத்துடன் சஹ்ரான் நாரம்மலை - கெக்குனுகொல்ல பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைந்துள்ளமை தொடர்பிலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையான உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடப்பதற்கு 10 மாதங்களுக்கு முன்னரேயே அனுப்பட்டிருந்த அறிக்கையாகும்.

உண்மையில் உயிர்த்த ஞாயிறு தின தககுதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹஷீம் இல்லை. நெளபர் மெளலவியே அதன் சூத்திரதாரி. புலிகளுக்கு அன்டன் பாலசிங்கம் போல தேசிய தெளஹீத் ஜமா அத்துக்கு நெளபர் மெளலவி செயற்பட்டுள்ளார். அவர் கட்டாரில் வெகுகாலம் வசித்ததால், வெளிநாட்டு தொடர்புகள் பல இருந்துள்ளன.

தாக்குதலின் பின்னர், தம்புள்ளை பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.' என குறிப்பிட்டார்.

இதேவேளை, சிரியாவுக்கு ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் இலங்கையில் இருந்து சென்ற  28 பேர் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைதித்திபால சிறிரிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரை தேசிய பாதுகாப்பு  சபை கூட்டங்களில் வைத்து தான் தெளிவுபடுத்தியதாகவும் நிலந்த ஜயவர்தன சுட்டிக்கடடினார். 

1 comment:

  1. NEENGA ELLARUM NALLAA MADA ADINGADA.NO PROBLEM.ALLAH ENGALODA IIKIRAAN DAAAA

    ReplyDelete

Powered by Blogger.