July 12, 2020

முஸ்லிம்கள் தைரியமாக வாழ வேண்டுமா..? வேண்டாமா..??


(ஆர்.யசி)

இந்த நாட்டில் வாழும் தமிழர்களை மனோ கணேசனிடமோ, சம்பந்தனிடமோஅல்லது  வேறு ஒரு தமிழ் தலைவரிடம் ஒப்படைக்க நாம் தயாரில்லை. தமிழர்களை நாம் எமது மக்களாக ஏற்றுக்கொள்ளவே விரும்புகின்றோம். தமிழ் தலைமைகள் மூலமாக தமிழர்கள் பெற்றுக்கொண்ட நன்மை என்ன என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இந்த நாட்டினை பிளவுபடுத்தும் யாராக இருந்தாலும் அவர்களை நாம் எதிர்ப்போம் ஆனால் அது தமிழர் மீதான எதிர்ப்பு அல்ல என்பதையும் தமிழர்கள் விளங்கிக்கொள்ளுங்கள் எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒன்று வெள்ளவத்தையில் இடம்பெற்றது. இதில் தமிழ் மக்களை சந்தித்த போதே அவர் இந்த கருத்துக்களை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,.

2000 ஆம் ஆண்டில் இருந்து நான் கொழும்பு மாவட்டத்திலிருந்து  பாராளுமன்றத்திற்கு தெரிவாகி வருகின்றேன். ஆனால் இம்முறை விசேடமான மாற்றம் என்னவென்றால் இதுவரை தமிழர்கள் எங்களை பார்த்ததை விடவும் மாற்று பார்வையில் இம்முறை எம்மை பார்க்கின்றனர். இந்த இருபது ஆண்டுகளில் தமிழர்களின் மனங்களை வெற்றிகொள்ள நான் கடுமையாக முயற்சி செய்தேன். இம்முறை தமிழர்கள் என்னை ஆதரித்துள்ளனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  முப்பது ஆண்டுகால யுத்தத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தது. நாமாக உருவாக்கிக்கொள்ளாத ஒரு போராட்டத்திற்கு நாம் இலக்கானோம். இன்றும் எம் மனங்களில் அது பதிந்துபோயுள்ளது. ஆனால் அது எதிர்கலத்தில் எமக்கு கைகொடுக்கப்போவதில்லை. தமிழர், சிங்களவர், முஸ்லிம் என அனைவரும் ஒரு நாட்டிற்குள் அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் வாழக்கூடிய சூழலே எமக்கு வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் அமைதியாக வாழும் சூழலை அனுபவித்தனர். வடக்கிற்கும் கொழும்பிற்குமான  தூரம் குறைவடைந்தது, தமிழர் சிங்களவர் இடையிலான உறவு பலமடைந்தது. சிங்கள சமூகம் தமிழர்களை எவ்வாறு பார்க்கின்றனர் என்பது உணரப்பட்டது. அதேபோல் சிங்கள சமூகத்தில் சில இனவாதக்குழுக்களின் நிலைப்பாடும் மாறியது.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களையும் , பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் வேளையில் மீண்டும் போர்க்கால சூழல் உருவாகிவிட்டதா என்ற அச்சம் ஏற்பட்டது. முன்னர் இடம்பெற்ற போராட்டத்தின் நோக்கம், காரணிகள் எமக்கு விளங்கியது. ஆனால் சஹரானின்  குண்டுத் தாக்குதலின் நோக்கம் என்ன என்பது எமக்கு விளங்கவில்லை. இவர்களின் நோக்கம் ஒன்று மட்டுமே, ஏனைய மதத்தவரை கொல்வதன்  மூலமாக சொர்க்கத்திற்கான விமான சீட்டை பெற்றுக்கொள்வதே அவர்ககளின் நோக்கமாக இருந்தது. தாம் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஏனைய மதத்தவரை கொல்ல  நிலைக்கும் கொள்கைக்கு இடமளிக்க முடியாது. அண்மையில் பிரித்தானிய பிரஜை ஒருவர் இலங்கைக்கு வந்த வேளையில் புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டார். அவர் சகரானின் செயற்பாடுகளுடன் ஈர்க்கப்பட்டு பிரித்தானியாவில் பல முக்கிய ஆலயங்களில் குண்டுத்தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியமை தெரியவந்துள்ளது.

ஆயுதம் மூலமாக, வெடிகுண்டுகள் மூலமாக வழங்கக்கூடிய அதியுச்ச தீர்வு மரணமாக மட்டுமே இருக்க முடியும். அதை தவிர்ந்து எந்த தீர்வுகளும் கிடைக்காது. எனவே இவ்வாறான சூழலில் இருந்து மாறுபட்ட சூழல் ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. அதற்கான மாற்றம் ஒன்று அவசியமானது. வடக்கு மக்களின் மனங்களில் சிங்கள இனவாத கோவங்களை உருவாக்கிக்கொண்டு அவர்களை தனியாக்கும் செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். கோத்தாபய ராஜபக் ஷ ஆட்சியில் தமிழர்கள் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. யாழ்ப்பணத்தில் ஆவா குழுக்கள் இருக்க வேண்டுமா அல்லது அவற்றை துடைத்தெறிய  வேண்டுமா? தமிழர்கள் அச்சம் இல்லாது வீதியில் நடமாட வேண்டுமா வேண்டாமா ? முஸ்லிம்கள் தைரியமாக வாழ வேண்டுமா வேண்டாமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். கண்முன்னே குண்டு வெடிப்பதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்த அரசாங்கம் வேண்டுமா அல்லது சகல மக்களும் தமது மதத் தளங்களுக்கு சென்று அச்சமில்லாது வழிபட்டு அமைதியாக வாழ வேண்டுமா என்பதை மக்களே தெரிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் இன்று கொரோனாவின் தாக்கம் மிக மோசமானதாக மாறி வருகின்றது. வேறு நாடுகளிலும் அவ்வாறே தாக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அவ்வாறு செயற்படவில்லை. வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்  இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு வரவேண்டும் என அடம்பிடிக்கின்றனர். இலங்கை இன்று பாதுகாப்பான நாடாக மாறியுள்ளது. பாராளுமன்றம், மாகாணசபை இல்லாத காலத்திலும், கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத சூழலில், பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் மக்களை நெருக்கடியில் தள்ளாது மக்களுக்கான செயற்பாடுகளை எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. எனவே இன்று மக்கள் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். நாட்டில் மூவின மக்களும் வாழ வேண்டும் என்றால் பலமான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும். வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் சகலரும் அமைதியாக வாழ வேண்டும்.

வடக்கில் இன்று பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, பரந்தன்,ஒட்டிசுட்டான் பிரதேசங்களில் பாரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகின்றது. இதில் வேலைவாய்ப்புகள் வடக்கில் தமிழர்களுக்கே கிடைக்கும். அதற்கான வாக்குறுதிகளை என்னால் வழங்க முடியும். தமிழர்கள் எம்மை வேறு கோணத்தில் பார்க்க வேண்டாம், வேறு எவரும் செய்யாத வேலைத்திட்டங்களை தமிழர்களுக்காக நாம் செய்வோம். கடந்த காலத்தில் ரிஷாத் பதியுதீன் செய்த நலன்கள் என்ன? வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் இரும்புகளை விற்றதை மட்டுமே அவர் செய்தார். நாம் இன்று இந்தியாவுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளோம். விரைவில் வடக்கு கிழக்கு மீண்டெழும். வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழர் முஸ்லிம்கள் அங்கு சுயமாக வாழக்கூடிய சூழல் உருவாகும். இது இனவாத அரசியல் அல்ல, அனைவருக்கும் வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அது தவிர்ந்து ஒருவரை ஒருவர் அடக்கி அதில் அரசியல் செய்ய இனியும் எவரும் நினைக்க வேண்டாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றது என்பதை பாராளுமன்றத்தில் நான் பாக்கின்றேன். சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஒரே கதையை மட்டுமே கூறி வருகின்றார்.  20 ஆண்டுகள் அவரது ஒரே கதையை நான் பாராளுமன்றத்தில் கேட்டு வருகின்றேன். இன்னும் எத்தனை காலத்திற்கு சம்பந்தன் இதே கதையை கூறிக்கொண்டு அரசியல் செய்யப்போகின்றார். அவரால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைதான் என்ன. இப்போதாவது தமிழர்கள் மாற்று கொள்கையை சிந்தியுங்கள். மாற்றம் ஒன்றினை அனைவருமே உருவாக்குவோம். மாற்றுக் கதை ஒன்றினை எழுதுவோம். உங்களை மனோ கணேசனிடமோ வேறு ஒரு தமிழ் தலைவரிடம் ஒப்படைக்க நாம் தயாரில்லை. தமிழர்களை நாம் எமது மக்களாக ஏற்றுக்கொள்ளவே விரும்புகின்றோம். அதற்காக தமிழ் தலைமைகள் உருவாக்க வேண்டாம் என்று அர்த்தமில்லை. மனோ கணேசனோ, சம்பந்தனோ தமிழர்களுக்கு செய்தது என்ன என்ற கேள்வியே நாமும் எழுப்புகின்றோம். தமிழர்கள் என்ற ரீதியில்  நீங்களே இந்த உண்மையை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் எமது மக்கள். உங்களை நாம் பொறுப்பேற்க வேண்டும் என்பதையே நான் கூறுகின்றேன். அதே வேளையில் நான் இந்த நாட்டினை உயிரிலும் மேலாக நேசிகின்றேன். இந்த நாட்டு துண்டாடப்படுவதை நான் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன். இது தமிழர்களுக்கு எதிரான கோபதாபங்கள் அல்ல. சிங்களவராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் இந்த நாட்டினை எவர் பிளவுபடுத்தினாளும் அதற்கு எதிராக நாம் முன்வருவோம். ஆனால் தமிழர்களை நாம் நேசிக்கிறோம். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க வேண்டாம் ஆனால் மாற்றுவோம். மூவினமும் இனியாவது ஒன்றினைவோம் அதற்கு நீங்கள் எம்மை நம்புங்கள் என்றார். 

1 கருத்துரைகள்:

எல்லாம் 2/3 பெற்றுக்கொள்ளவே இவ்வளவு நாடகமும் . அதன் பிறகு முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்றே கத்துவான் இந்த நாதாரி.

Post a comment