Header Ads



அநுராதபுர மக்கள் சந்திப்பில், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள்


அரசாங்கம் தானிய இறக்குமதியை நிறுத்தியுள்ள காரணத்தினால் தானிய வகைகளை அதிக விலைக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்கும் வாய்ப்பு விவசாய சமூகத்திற்கு இப்போது உருவாகியுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 

சோளம், உழுந்து, பயறு, கௌப்பி, குரக்கன் போன்ற தானியங்களை அதிகம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுமாறும் ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். 

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் அநுராதபுரத்தில் நேற்று (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றி பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினார். உரிய காலத்திற்கு உரம் மற்றும் நீர் கிடைக்குமானால் தடைகளின்றி பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியுமென விவசாயிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். சேதன உரப் பாவனைக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

எஸ்.சி.முத்துகுமாரன ஹொரவப்பொத்தனை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், பதில் பாடசாலை அதிபர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார். பிரதேச பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்தார். 

முன்னாள் அமைச்சர் திஸ்ஸகரலியத்த கெப்பித்திகொல்லாவ நகர பூங்காவிற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். ஒப்பந்த முறைமையில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அபிவிருத்தி செயன்முறைகள் காலதாமதமாகுவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். சோற்றுக் கற்றாழை, நெல் மற்றும் சோளப் பயிர்ச் செய்கை தமது பிரதேசத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். சிறுநீரக நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் விவசாய சமூகம் முகங்கொடுத்துள்ள களஞ்சிய வசதிகள் குறித்த பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார். 

யானைகள் மனித மோதல் மற்றும் விவசாய கடன் சம்பந்தமாக மதவாச்சி பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எச்.நந்தசேன மதவாச்சி சேனாநாயக்க சிறுவர் பூங்காவிற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் இதுபற்றி தெரிவித்தனர். யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

சரத் மாரசிங்க அநுராதபுரம் மேற்கு தொலுவில தொல்பொருள் காப்பகத்திற்கு அருகிலும் பேராசிரியர் சன்ன ஜயசுமன, அநுராதபுரம் கிழக்கு வங்கி சந்தியிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். 

உத்திக்க பிரேமரத்ன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டின் விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அநுராதபுர மாவட்ட விவசாய சமூகம் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டார். 

அமைச்சர் எஸ்எம்.சந்ரசேன, முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் பங்குபற்றினர்.


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.04

No comments

Powered by Blogger.