Header Ads



பௌத்தர்களின் மனதைப் புண்படுத்தியதாக, இந்திக ரத்நாயக்கவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

புத்த மதத்தின் சில விடயங்களை மூடநம்பிக்கை என விமர்சித்தமைக்காக விசாரணை செய்வதற்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு இந்திக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தன்னை நாத்திகராகவும், பகுத்தறிவாளராகவும் கூறிக் கொள்ளும் இவர் மதங்களின் கட்டுக்கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் சமூகவலைத் தளங்களில் விமர்சித்து வருபவராவார். பேஸ்புக் பதிவுகளினூடாகவும் பேஸ்புக்கைத் தளமாகக் கொண்ட குழுக்கள் மற்றும் வலையமைப்புக்கள் ஊடாகவும் புத்தரைப் பற்றியும் பௌத்த மதத்தைப் பற்றியும் கட்டுக்கதைகளைப் பரப்பி பௌத்தர்களின் மனதைப் புண்படுத்தியதாகவும் இளைய தலைமுறையை தவறாக வழிநடத்தியதாகவும் கூறி பௌத்த தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலுகல்ல ஸ்ரீ ஜினானந்த தேரர் ஜூன் 08 ஆம் திகதி சிஐடியில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார்.

ரத்நாயக்கவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை செய்யுமாறு இவர் சிஐடி பணிப்பாளரை வேண்டியிருந்தார். இதற்கமைய இம்மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

அரச சுகாதார சேவையின் சுகாதார ஊழியரான ரத்நாயக்க புத்த மதம் ஜைன மதத்திலிருந்து உருவானது என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.