June 21, 2020

"உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை" - பிணம் எரிக்கும் பணியில் முஹம்மது

“வைரஸைக் கூட வென்றுவிடலாம். பசியை வெல்வதுதான் பெரிய போராட்டமாக இருக்கிறது” அருகிலுள்ள தகனமேடையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைவிடச் சுடுகிறது, சாந்த் முஹம்மதுவின் வார்த்தைகள்!

உம்மாவுக்கு மருந்து வாங்க வேண்டும்; தங்கைகளைப் படிக்க வைக்க வேண்டும்; வீட்டில் உள்ளவர்களின் பசியைப் போக்க வேண்டும்; இது எல்லாம் நிறைவேற, உலகிலேயே மிகவும் ஆபத்தான வேலையில் ஈடுபட்டிருக்கிறார், இந்த பிளஸ் டூ மாணவர்.

வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர் (Seelampur) பகுதியைச் சார்ந்தவர், சாந்த் முஹம்மது. வருமானத்திற்காக இப்போது பிணங்களை எரிக்கும் பணி செய்து வருகிறார். அதுவும் வெறும் பிணங்கள் அல்ல; கொரோன வைரஸ் தொற்றால், சிகிச்சை பலனின்றி இறந்த சடலங்கள் அவை.

“வீட்டின் வறுமையைப் போக்குவதற்கான எல்லா வழிகளும் அடைபட்டதால்தான் இந்தப் வேலையைத் தேர்ந்தெடுத்தேன். இது ஒரு ஆபத்தான வேலை என்று எனக்கு நன்றாக தெரியும். இதனால் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகம்தான். ஆனாலும், இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

எங்கள் குடும்பத்தில் அப்பா, அம்மாவுடன் மொத்தம் ஏழு பேர். இரண்டு சகோதரர்கள். மூன்று சகோதரிகள். மூத்த சகோதரர் கிருஷ்ணா நகர் மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இதுநாள் வரை குடும்பப் பொறுப்புகளை அவர்தான் பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக அந்த வேலையை அவர் இழக்க நேரிட்டது. அதனால் குடும்ப சூழ்நிலை மிக மோசமானது. அதன் பிறகு தொடர் பட்டிணி எங்களை வேட்டையாடியது. ஒரு நல்ல வேலைக்காக நானும் தட்டாத கதவுகள் இல்லை. இருந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை” என்கிறார், சாந்த் முஹம்மது.

சாந்த்வுக்கும் மூத்த சகோதரருக்கும் எப்போதாவது சிலநேரம் கூலி வேலைகள் கிடைக்கும். அதிலிருந்து கிடைக்கிற சொற்ப வருமானத்தைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை சாமான்களை வாங்கி வந்தனர். பெரும்பாலான நாட்களில் ஒருவேளை மட்டும்தான் உணவு சமைப்பார்கள். மீதமுள்ளவை அடுத்த நாளுக்காக சேமிக்கப்படும்.

தைராய்டு பாதித்த உம்மாவுக்கு மருந்து வாங்குவதற்குப் பணம் இல்லாததுதான் முக்கிய பிரச்சினையாக இருந்தது. மேலும், பள்ளியில் படிக்கும் அவருடைய மூன்று சகோதரிகளுக்கும், தனக்கும் பீஸ் கட்ட வேண்டும். அதனால்தான் இவ்வளவு பெரிய ஆபத்தான வேலையைச் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார், சாந்த் முஹம்மது. எனவே, இந்த வேலையை ஏற்பதை விட அவருக்கு முன்னால் வேறு வழி தெரியவில்லை.

ஒரு வாரம் முன்பு, ஒரு தனியார் தொழிலாளர் ஒப்பந்த நிறுவனம் மூலம், டெல்லியிலுள்ள லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சாந்த் முகம்மதுவுக்கு வேலை கிடைத்து. அங்கு, கொரோன வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்சில் ஏற்றுவது, சுடுகாட்டுக்குக் கொண்டு செல்வது, இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, தகன மேடையில் ஏற்றி - எரிக்க உதவுவது என மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை நேரம். எப்படியும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று சடலங்களை இவ்வாறு செய்தாக வேண்டும்.
மாதம் 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. முதல் மாத சம்பளம் கிடைத்தவுடன் பிரச்சனைகளை ஓரளவுக்குத் தீர்க்க முடியும் என்பது சாந்துவின் நம்பிக்கை. அதேநேரம் இத்தகைய ஆபத்தான பணி செய்வோருக்கு கம்பெனி இன்சூரன்ஸ் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை என்ற கவலையும் அவருக்கு உண்டு.

“இந்தக் கோடை காலத்தில் PPE கிட்டு அணிந்து வேலை செய்வதுதான் ரொம்ப சிரமமாக இருக்கிறது. இது ஒரு கனமான ஆடை. இதை அணிந்துகொண்டு நம்மால் சுதந்திரமாக இயங்கவோ, ஒழுங்காக மூச்சுவிடவோ கூட முடியாது. பணி முடிந்து இதை கழற்றும்போது வியர்வையில் குளித்து இருப்போம். அதேநேரம் உயிருக்குப் பாதுகாப்பு முக்கியம் என்பதால் இதை அணியாமல், இந்த வேலையை செய்யவும் முடியாது.

“மருத்துவமனையிலிருந்து சடலத்தை எடுத்துச் செல்வது முதல், அதன் இறுதிச் சடங்கு வரை எல்லா வேலைகளிலும் நான் பங்கேற்க வேண்டும். உதவிக்கு ஆள் உண்டு என்றாலும், கடந்த செவ்வாய்க்கிழமை நானே தன்னந்தனியாக ஒரு பிணத்தை எரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதுவும் அந்தப் பிணம் ஒரு மாதமாக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது என்று மருத்துவர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

வாரிசுகள் யாரும் வராததால் அதை சவக்கிடங்கிலேயே போட்டு வைத்திருந்தனர். அதன் பொறுப்பாளர் அதை சரியாக மூடவுவில்லை. ஆம்புலன்சில் இருந்து அந்த சடலத்தை இறக்கும்போது அதன் அழுகிய பகுதிகள் என்மேல் சரிந்து விழுந்தது. அப்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஒருகணம் நடுங்கிவிட்டேன்; இது எவ்வளவு ஆபத்தான வேலை என்று இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.

எனது இந்தப் பணி குறித்து குடும்பத்தினர் அனைவருமே கவலைப்படுகின்றனர். 

குறிப்பாக, எனது பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் இந்த நிமிடம் வரை பயந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போதைய சூழலில் இதை தவிர எனக்கும் வேறு வழியில்லை. அதனால் எல்லா வகையான முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துவருகிறேன். பணி முடிந்து வீடு திரும்பியவுடன் குளித்துவிடுவேன். தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் முகமாக, வீட்டிலுள்ள அனைவரிடமிருந்தும் விலகியே இருப்பேன்.

ஒவ்வொரு நாளும் எனது வேலையைப் பற்றி பெற்றோர்கள் விசாரிப்பார்கள். எனக்காக அவர்கள் நேரம் தவறாமல் பிரார்த்திக்கிறார்கள். அம்மாதான் என்னை நினைத்து ரொம்பவும் கண் கலங்கிவிடுவார். அவருக்கு எனது நிலைமையை விளக்கிப் புரிய வைப்பேன். என்று மெல்லிய குரலில் துயரம் வழிய பேசுகிறார் சாந்த் முஹம்மது.
குடும்பச் சுமை காரணமாக சாந்துவுக்கு பலமுறை படிப்பு தடைபட்டது. ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு மருத்துவத்தில் சேர வேண்டும் என்பது தனது நீண்டகால ஆசை. ஒவ்வொரு நாளும் தொழுதுவிட்டுத்தான் வேலைக்குப் புறப்படுவேன். இறைவன் மீது  நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். எனது இறைவன் என்னை பாதுகாப்பான்; அவனே எனக்கொரு நல்ல வழியைக் காட்டுவான் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு” என்று, பொறுப்புகள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறார், சாந்து முஹம்மது.

நம்பிக்கைதானே வாழ்க்கை.
அவர் வாழ்வு வளம்பெற நாமும் பிரார்த்திப்போம்.!

- தமிழ்த் தொகுப்பு : ஜாபர் சாதிக் பாக்கவி

0 கருத்துரைகள்:

Post a comment