Header Ads



இராணுவத்தினர் படுகொலைக்கும் அரந்தலாவை பிக்குகள் படுகொலைக்கும் கருணா காரணம் - அஸ்கிரிய பீடம்

(எம்.மனோசித்ரா)

விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் 3000 இராணுவத்தினரை மாத்திரமல்ல, அரந்தலாவை பிக்குகள் கொலை உள்ளிட்ட பல மனித படுகொலைகளுடன் தொடர்புபட்டுள்ளமை ஏற்கனவே அறிந்த விடயங்கள் தான். ஆகவே அவர் குறித்து கருத்துரைப்பது அநாவசியமானது என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர்  வீரகேசரிக்கு தெரிவித்தார்.

சுமார் 3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக கருணா அம்மான் கூறிய விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூகத்தில் மீண்டும் வீண் பிரச்சினைகள் உருவாக இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

கருணா அம்மான் பல மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர் என்பது அனைவரும் முன்னரே அறிந்த விடயமாகும். ஆனால் அவர் அதனை தற்போது பகிரங்கமாகக் கூறுகின்றார்.

இவ்வாறு கூறுவதற்கான நோக்கம் என்ன என்பது பற்றி எம்மால் கற்பனை செய்ய முடியாது. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர் மனம் திருந்தியிருப்பார் என்று எண்ணியே சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுவதற்கும் அரசியலில் ஈடுபடுவதற்கும் இடமளிக்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது என்ன நோக்கத்தில் செயற்படுகின்றார் என்று எம்மால் கணிப்பிட முடியாது.

3000 இராணுவ வீரர்கள் படுகொலை மாத்திரமல்ல. அரந்தலாவை பௌத்த பிக்குகள் படுகொலைக்கும் இவரே காரணம். பயங்கரவாதிகளுடன் இணைந்து இவர் இவ்வாறான பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். எனவே தற்போது அவர் கூறும் கருத்துக்கள் ஆச்சர்யத்தை தரக் கூடியவையல்ல.  எனவே வீணாக அவர் கூறும் கருத்துக்களின் பின்னால் சென்று அவரை பிரபலப்படுத்தத் தேவையில்லை.

பெரும்பாலான அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இதனையே செய்கின்றனர். ஆனால் நாம் அவரது கருத்துக்கள் தொடர்பில் எதிர்ப்பினையோ அல்லது அறிக்கைகளையோ வெளியிட்டு அவர் பின்னால் சென்று நேரத்தை வீணடிக்கவும் அவரை பிரபலப்படுத்தவும் விரும்பவில்லை. இதுவே எமது நிலைப்பாடாகும். எவ்வாறிருப்பினும் தற்போதைய அமைதியான சூழலில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பொறுத்தமானதல்ல என்றார். 

No comments

Powered by Blogger.