Header Ads



வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, அரச வங்கிகள் பங்களிக்க வேண்டும் - ஜனாதிபதி

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரச வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 

அரசாங்கமொன்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையை வகுக்க வேண்டியது அரச வங்கிகளின் பொறுப்பாகும். அதனை விளங்கி பொருளாதாரத்தை செயற்திறமாக பேணுவதற்கான மூலோபாயத்தை முன்கொண்டு செல்வது வங்கிகளின் முக்கிய பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கை வங்கியின் செயலாற்றுகை மீளாய்வு தொடர்பான கூட்டமொன்று இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். 

கடனுக்காக 02 இலக்க வட்டியை அறவிடுவதன் மூலம் நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதனை ஒரு தனி இலக்க குறைந்த பெறுமாணத்திற்கு கொண்டுவந்து அபிவிருத்திக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். 

தனது உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அல்லது தனக்கு உதவியவர்களுக்கு கடன் வழங்குமாறு ஒருபோதும் தான் வங்கிகளுக்கு கூறவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், விவசாயிகள் முதல் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் நிதி உதவிகளை வழங்குவதற்கு அரச வங்கிகள் முன்னணியில் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இன்றுள்ள நிலைமைக்கு உலகின் எந்தவொரு நாடும் இதுவரையில் முகங்கொடுக்கவில்லை. இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பழைய முறைமைகளிலிருந்து விலகி சிந்திக்க வேண்டும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பாரம்பரிய முறைமைகளின் ஊடாக மட்டும் செய்ய முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். மக்கள் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி முழு நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு பின்நிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அது ஒருபோதும் அரசியலுக்காகவன்றி நாட்டுக்கானதாகும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்கு தடையாக இருந்தால் பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதற்கு பின்நிற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். 

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் 07% வீதத்திற்கும் 08% வீதத்திற்கும் இடையிலிருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 2019ஆம் ஆண்டாகும்போது 02% வீதத்தைப் பார்க்கிலும் வீழ்ச்சியடைந்தது. கொவிட் 19 நோய் தொற்றுடன் வீழ்ச்சியடைந்த உலக பொருளாதார சூழலில் அது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் விளங்கிக்கொண்டு நாட்டின் பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுவது அரச வங்கிகளின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தே, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
15.06.2020

No comments

Powered by Blogger.