June 14, 2020

இனவாதிகளின் பிடிக்குள் ரணில் - சஜித், பெரமுனவின் பிரதியே ஐ.ம.ச, முஸ்லிம்களின் பாரம்பரியங்கள் மீறல் - மங்கள குற்றச்சாட்டு


தென்னிலங்கை வாக்குகளுக்காக சிங்கள, பேரினவாதத்தினை முன்னிலைப்படுத்தும் பொதுஜனபெரமுனவின் பிரதியாகவே ஐக்கிய மக்கள் சக்தியும் காணப்படுகின்றது என்று முன்னாள் நிதி மற்றும் வெகுஜன, தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து தலைமைத்துவம் வழங்கும் வகையிலான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோ அல்லது வலுவான எதிர்க்கட்சி என்ற வகிபாகத்தினை வகிப்பதற்காக வெளிப்படையான கருத்துக்களை வெளியிடவோ, செயற்பாடுகளை முன்னெடுக்கவோ தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மாற்று சக்தி என்பதற்கான கொள்கைகள் உட்பட எந்தவிதமான இலட்சணங்களும் காணப்படவில்லை.

நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் நிறைந்த இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரத்தினை கட்டியெழுப்புதவற்கான வலுவான சக்தியொன்றை எதிர்பார்த்து பொதுமக்கள் இருக்கையில் எவ்விதமான கொள்கைகளோ, இலக்குகளோ இல்லாத கையறு நிலையில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் காணப்படுகின்றன. 

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் தனிப்பட்ட முறையில் சிறந்தவர்களாக இருக்கின்றபோதும் அடிப்படைவாதிகளின் சிறைப்பிடிக்குள் சிக்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய நாட்டை இராணுவ ஆட்சிக்குள் நகர்த்திச் செல்கின்றார். நாட்டின் நல்லொழுக்கத்தினை கட்டியெழுப்புவதற்கு இராணுவத்தை முன்னிலைப்படுத்திய செயலணி அமைக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருளின் பெயரால் அபகரிப்புக்களைச் செய்வதற்கு செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

சிறுகுழந்தை உள்ளிட்டவர்களை கொலை செய்த மனிதாபிமானமற்றவருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளபோதும் பொதுமன்னிப்பளித்து விடுவிக்கப்படுகின்றார். 

கொரோனாவின் பெயரால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதிகளையும் பொருட்படுத்தாது முஸ்லிம்களின் பாரம்பரியங்களை மீறும் வகையில் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

முச்சக்கர வண்டிச்சாரதிகள் சங்கத்தலைவர் கொலை, துப்பாக்கி கலாசாரம் என்று சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகியுள்ளது. எமது ஆட்சிக்காலத்தில் நாட்டில் காணப்பட்ட நிலைமைகள் நேரெதிராக மாறியுள்ளன.

இவைபற்றி எதிரணியாக அல்லது நாட்டிற்கு தலைமைத்துவம் வழங்கத்தயாராகும் மாற்று அரசியல் அணியாக உரிய நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். அதில் பின்னிற்கவே முடியாது.

ஆனால் தேர்தலில் தென்னிலங்கை வாக்குகள் சரிவடைந்துவிடும் என்ற மாயைக்குள் சிக்கி மௌனம் காத்துக்கொண்டிருக்கும் போக்குடைய அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே முன்னாள் நிதி மற்றும் வெகுஜன, தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(ஆர்.ராம்)

3 கருத்துரைகள்:

கௌரவமான அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஒதுங்குவது நாட்டிற்கு ஆபத்து

இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளில் அரசியலறிவு, அரசியல் முதிர்ச்சி, அனுபவம், இராஜ தந்திரம், நாட்டுப்பற்று, தூர நோக்கு, மனிதாபிமானம், சர்வதேச தொடர்புகள், இன ஐக்கியம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ள கௌரவ மக்கள சமரவீர போன்ற கௌரவமான அரசியல்வாதிகள் இந்நாட்டின் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது ஜனநாயகத்திற்கு பின்னடைவும் இந்நாட்டிற்கு ஆபத்துமாகும்.

இந்த நாட்டிலுள்ள சமூகங்கள் சிவில் தலைமைகள் இதனை அனுமதிக்க கூடாது

Mr மங்கள சமரவீர மாவீரன்

உண்மையிலே இவர் அரசியலில் இருந்து ஒதுங்க எத்தனிப்பது இந்த நாட்டிற்கு சாபக்கேடுதான்.நாட்டை நேசிக்கின்ற எவரும் இதை அநுமதிக்க முடியாது.
சகோதரர் சுபைடீன் அவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றேன்.

Post a comment