Header Ads



அரசாங்கத்துடன் இணைக்கமாக செயற்பட வேண்டும் இல்லாவிடின் கிழக்கு மாகாண தமிழ்மக்களே தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.

(இராஜதுரை ஹஷான்)

தொல்பொருள் பாதுகாப்பிற்கான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட  செயலணி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர்   தமிழ்- முஸ்லிம்  சமூகத்தின் மத்தியில் தவறான  சித்தரிப்புக்களை முன்னெடுக்கிறார்கள். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில்  தமிழ் அரசியல் தலைவர்கள்  இணைந்து  செயற்படாவிடின் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களே தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரனர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

எலிய அமைப்பின்   காரியாலயத்தில்  இன்று வியாழக்கிழமை -18- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அடிப்படை உரிமை,  பொருளாதார விடயம் ஆகியவற்றில்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.   தமிழ் அரசியல் தலைவர்கள்  தமிழ் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்களே தவிர  திறன்படும் விதத்தில் எவ்விதமான அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லை.

தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தினால் அரசியல் தீர்வு மழுங்கடிக்கப்படும் என்று குறிப்பிடும்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள்   அரசாங்கத்தில்  இருந்து  அனைத்து  வரப்பிரசாதங்களையும் பெற்றுக்  கொண்டு சுகபோகமாகவே   வாழ்கின்றார்கள். தேர்தல் காலத்தில் மாத்திரமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு  தொடர்பில்  இவர்களால் கவனம் செலுத்தப்படுகிறது.

தமிழ் அரசியல்தலைவர்கள்     வடக்கு கிழக்கு மக்களுக்க எவ்விதமான அபிவிருத்திகளையும்   முறையாக முன்னெடுக்கவில்லை. அரசியல் தீர்வு என்பதொன்றை குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்கள்.   கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ்   மக்களின் உரிமை தொடர்ந்து  மறுக்கப்ட்ட வண்ணமே உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மையங்களை   ஆய்வு செய்து, பாதுகாப்பதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட  செயலணி குறித்து  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் தவறான சித்தரிப்புக்களை முன்னெடுக்கிறார்கள். தொல்பொருள் ஆய்வு தொடர்பில்  ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை ஒன்றும் புதிய விடயமல்ல.

கடந்த  அரசாங்கத்திலும் பல  ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில்  இந்து மத புனித தலங்கள், பாரம்பரிய  இடங்கள் தொல்பொருள் மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. அன்று  எதிர்கட்சி பதவியில் இருந்துக் கொண்டு  அரசாங்கத்தின் இருப்பினை தீர்மானிக்கும்  சக்தியாக இருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பு  அச்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால்  இன்று  அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலணியை  எதிர்க்கிறார்கள்.

தமிழ் , மக்களின் பாரம்பரிய கலை,  மதம் சார்பான உரிமைகள் ஆகியவற்றுக்கு   பாதிக்கும் விதத்தில் அரசாங்கம் செயற்படவில்லை.      செயலணியில் தமிழ் , முஸ்லிம்  சமூகத்தை பிரநிதித்துவப்படுத்தும்  சமூகத்தினரை ஏன்  நியமிக்கவில்லை என  பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியுள்ளேன்.

தொல்பொருள்  மையங்கள் அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரமே தற்போது இடம் பெறுகின்றன.    அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் சிறுபான்மை மக்களை பிரநிதித்துவப்படுத்தும் விதத்தில் உறுப்பினர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்றார்.

அத்துடன்   தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்தும் உரிய நடடிவக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளர்.  அரசியல் தீர்வு, அபிவிருத்தி ஆகியவற்றை  ஒருசேர பெற்றுக் கொள்தே   சிறந்த  இராஜதந்திரம் அரசாங்கத்தை பகைத்துக் கொண்டு  இவ்விரண்டு விடயங்களையும் ஒருபோதும்பெற்றுக் கொள்ள முடியாது.    

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே இனி  ஆட்சி செலுத்தும் தமிழ் தலைவர்கள் அரசாங்கத்துடன்   இணைக்கமாக  செயற்பட வேண்டும் இல்லாவிடின் கிழக்கு மாகாண  தமிழ்மக்களே  தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள். புதிய அரசாங்கத்தில்  தமிழ் மக்களுக்கு  அபிவிருத்தி,  எத்தரப்பினருக்கும் பாதிப்பற்ற அரசியல் தீர்வு ஆகியவை நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.