Header Ads



மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கிய 2 விமானங்கள் - தீவிர முற்பாதுகாப்பு நடவடிக்கைகள்


(நா.தனுஜா)

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலையடுத்து சுமார் மூன்று மாதகாலமாக மூடப்பட்டிருந்த மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன.

ஜொஹனஸ்பேர்கில் இருந்து புறப்பட்ட அன்ரோனோவ் ஏ.என்124 என்ற விசேட விமானமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.23 மணியளவில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது.

விமான ஊழியர்கள் 13 பேருக்கான பரிசோதனைகளை மேற்கொள்தல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதே இவ்விமானம் இலங்கையில் தரையிறங்கியமைக்கான நோக்கமாகும்.

அதேபோன்று அஸர்பைஜானில் இருந்து புறப்பட்ட ஜி-200 விசேட விமானம் நேற்று சனிக்கிழமை அதிகாலை 12.13 மணிக்கு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது.

இது மாஹம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தரித்துநிற்கும் கப்பலுக்கு 3 கப்பல் பொறியியலாளர்களை அனுப்பிவைப்பதற்காகவே இந்த விமானம் இலங்கை வந்திருக்கிறது.

விமான மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் அதேவேளை புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையானது சர்வதேச விமானப்போக்குவரத்து சேவைகள் தமது தேவைகளுக்காக விமானங்களை இடைநிறுத்துவதற்கு மத்தள விமானநிலையத்தைத் தெரிவுசெய்யும் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது.

அனைத்து விமான ஊழியர்களுக்கும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், சுகாதாரப் பிரிவினால் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து முற்பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை விமானநிலையங்கள் மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.