Header Ads



யாழ்ப்பாணம் சிவல பள்ளி எனும் முஹிதீன் பள்ளிவாசல்

- Jan Mohamed -

யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசல்கள் பலவற்றுக்கு ஒரே பெயர் இருப்பது நோக்கப் படல் வேண்டும். மானிப்பாய் வீதி முஹிதீன் பள்ளி, ஐதுரூஸ் மகாம் வீதி முஹிதீன் பள்ளி, சின்னப் பள்ளி முஹிதீன் பள்ளி, சிவலை பள்ளி முஹிதீன் பள்ளி என எட்டு பள்ளிவாசல்களுக்கு இந்த முஹிதீன் என்ற பெயர் உண்டு. ஒரு காலத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களில் சிலர் முஹிதீன் அப்துல் காதர் ஜீலானியை தமது குருவாக கருதியால் இப்படி ஒரே பெயரை எல்லோரும் சூட்டி இருக்கலாம். ஆனால் சின்னப் பள்ளிக்கு மட்டும் அதனைக் கட்டிய குழுவின் தலைவர் பெயரைக் கொண்டு அழைத்துள்ளார்கள். இருந்தாலும் அதன் பதிவுப் பெயர் இத்ரீஸ் தைக்கா என்றும் முஹிதீன் பள்ளி என்றும் உள்ளது. நம்ம யாழ்ப்பாண காரர்கள் என்ன சும்மாவா எல்லா பள்ளிகளுக்கும் இன்னொரு பெயரையும் வைத்துவிட்டனர்.பேச்சு வழக்கில் அப்பெயர்களே நிலைத்து நிற்கின்றன.

அந்த வகையில் 1744 இல் நல்லூரிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட பின்னர் தான் சிவலைபள்ளி பிரதேசத்தில் குடியிருப்புகள் உருவாக தொடங்கியிருந்தன. வான் இம்ஹொப் என்ற ஒல்லாந்த தேசாதிபதி யாழ்ப்பாணத்தை நிர்வகித்த காலப் பகுதியில் தமிழர்களை படையில் சேர்த்துக் கொண்டான், இந்தப் படையே முஸ்லிம்களை நல்லூரில் இருந்து வெளியேற்றுவதில் மும்முரமாக செய்ற்பட்டதாக நம்பப் படுகின்றது. நல்லூரிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் சோனகதெருவுக்கு சென்றிருந்த போதிலும் அவர்களை அங்கு சென்றும் அச்சுறுத்தும் வேலைகளை இவர்கள் செய்துள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் காரணமாக முஸ்லிம்களில் பலர் யாழ்ப்பாணத்தை விட்டே வெளியேறி முல்லைத்தீவு, தண்ணீரூற்று, குருனாகல், வவுனியா, கண்டி , புத்தளம் என இடம்பெயர்ந்தனர். சோனகதெருவுக்குச் சென்ற மக்களில் ஒரு சாரார் குடிசைகளை அமைத்துக் குடியேறினர். சுமார் ஐம்பது குடும்பங்கள் அவர்களுக்கு சோனக்தெருவில் காணிகள் இல்லாததால் குளத்தடிப் பிரதேசத்தில் இருந்த சட்டனா காடுகளுக்குள் ஓலைகளால் மறைத்துக் கொண்டு ஒழிந்து வாழ்ந்துள்ளனர்.

எனவே இந்த அடக்குமுறைகள் குறைவடைந்த அல்லது இல்லாது போன காலப் பகுதியில் தான் சிவலைபள்ளி கொட்டிலாக உருவாக்கப் பட்டு பின்னர் கட்டிடமாக கட்டப் பட்டிருக்கும் என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

1825 இல் தான் முஹம்மத் என்பவரால் இது கட்டிடமாக கட்டப் பட்டுள்ளது. பிற்காலத்தில் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் நபர் சிவந்த நிறமுடையவராக காணப்பட்டதாலும் அவர் அந்தப் பள்ளியுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாலும் அந்த பள்ளி சிவலை பள்ளி என்ற பெயரை பெற்றதாக நாம் அறிகின்றோம். சிவலை என அழைக்கப் பட்டவர் 1980 களிலும் வாழ்ந்ததை அவதானித்துள்ளேன். இரண்டும் ஒருவரா அவர் மூத்தவரின் தலைமுறையில் வந்தவர் 1980களில் வாழ்ந்தவரா என தெரியவில்லை.
1990 ஒக்டோபர் வெளியேற்றத்தின் பின்னர் இப்பள்ளியின் கூரைகள் , கதவுகள் , ஜன்னல்கள், மின்சாரப் பொருட்கள் களவாடப் பட்டிருந்தன. இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து இப்பள்ளியை புனருத்தாரனம் செய்து தொழுகைகளை மீண்டும் நடத்துகின்றனர். இதற்கு பின்பக்கமாக ஹாதி அபூபக்கர் வீதியிலுள்ள காணியொன்றும் இப்பள்ளிக்காக வாங்கப் பட்டதாக அறிகின்றோம். மீலாத் நிகழ்சித் திட்டத்தின் கீழ் இப்பள்ளிவாசல் காணியில் அறைகள் கட்டப் பட்டதாக ஒரு செய்தி வந்தது.

கவலையான விடயம்

பழைமை வாய்ந்த இந்தப் பள்ளிவாசல் தற்போது மிகக் குறைந்த மஹல்லா வாசிகளைக் கொண்டு காணப் படுகின்றது. இப்பள்ளியில் எல்லைகளாக வில்லூண்டிப் பிள்ளையார் வீதியில் நாவாந்துறையும், ஹாதி அபூபக்கர் வீதியில் ஹதீஜா கல்லூரிக்கு முன்னால் உள்ள இடம் வரையும், ஒஸ்மானியா நோக்கிய முஸ்லிம் கல்லூரி வீதியில் வை எம் எம் ஏ கட்டிடம் வரையும், ஏ.பி லேனிலும் போஸ்ட் ஒபிஸ் ஒழுங்கை வரையிலும், கொட்டடி நோக்கிய வீதியில் சீனிவாசன் வீதிக்கு சற்று முன்பு வரையும் காணப் பட்டது. 

தற்போது கோவில் வீதியில் ஒரு சில வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. லெப்பை லேன் முற்றாக விற்கப்பட்டு விட்டது. பள்ளிக்கு முன்னாலும் ஹதீஜா கல்லூரிக்கு முன்பாகவும் பக்கமாகவும் பல காணிகள் முஸ்லிம்களிடம் இருந்து கைமாறிப் போய்விட்டது.

பள்ளிக்கு முன்னாள்முஸ்லிம் கல்லூரி வீதியில் உள்ள காணியும் விற்பனைக்கு விடப் பட்டுள்ளது. இவை எல்லாம் பறிபோகும் சந்தர்ப்பத்தில் இந்த மஹல்லாவில் மார்க்கக் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சில சிக்கல்கள் எதிர்காலத்தில் நிகழ வாய்ப்புண்டு.

இந்த மஹல்லா வாசிகளில் பலர் குடும்பம் குடும்பமாக ஐரோப்பாவில் வாழ்கின்றனர். சில குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் அந்நாடுகளில் தொழில்புரிகின்றனர். மேலும் நாட்டில் தொழில் செய்வோரிலும் இந்த மஹல்லாவாசிகள் வசதியானவர்களாக திகழ்கின்றார்கள். கொடிகட்டிப் பறக்கும் சிலர் இந்த மஹல்லாவின் பூர்வீக குடிகள் தான். தற்போது பக்கத்து மஹல்லாவில் அவர்கள் வாழலாம்.

இவர்கள் ஒன்று சேர்ந்து சில காணிகளைக் கொள்வனவு செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு குறைந்த வாடகையில் கொடுக்க முடியும். மேலும் சில காணிகளை வாங்கி அதில் சிறிய ஒரு அறை வீடுகளைக் கட்டி யாழில் கடைகளில் வேலை செய்யும் முஸ்லிம் ஊழியர்களுக்கு குடும்பத்துடன் வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுக்க முடியும்.

இங்கு சொல்பவனைப் பார்க்காமல் சொல்லும் கருத்தை நோக்குங்கள். ஒரு காலத்தில் குளத்தடி வீதியில் ஹதீஜா பெண்கள் கல்லூரி அமைவதை சிலர் எதிர்த்தனர். அதற்குள்ள காரணங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாவிடினும், அவர்கள் முன்வைத்த விவாதங்களில் சில தட்டிக் கழிக்க முடியாதவை. அதைவிட பெரிய சிக்கல்கள் எதிர்காலத்தில் அபூபக்கர் வீதியில் தற்போது ஹதீஜா எதிர்நோக்கலாம்.

எனவே ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழி போல் இந்த பிரதேசத்தில் முஸ்லிம்களின் சனத்தொகையை அதிகரிக்க இந்த மஹல்லா வாசிகள் மட்டுமல்ல முழு முஸ்லிம்களுமே ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் சிவலை பள்ளிக்கு மஹல்லாவாசிகளை உருவாக்கி அங்கு அமல்கள் செயற்பாடுகளில் எதிர்காலச் சிக்கல் ஏற்படுவதை தடுக்கமுடியும் என்பதுடன், ஹதீஜாவுக்கும் பாதுகாப்பான ஒரு முஸ்லிம் சனத்தொகையை அங்கு ஏற்படுத்த முடியும்.

எமது சமூகம் நீண்ட காலத் திட்டங்களைத் தீட்டி செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே தனவந்தர்கள் வெளிநாடுகளில் வசிப்போர் ஒன்று கூடி ஒரு தீர்க்கமான ஒரு முடிவை எடுங்கள். சுமாராக ஒரு 40 மில்லியனை சேகரித்தால் இந்த மஹல்லாவைச் சுற்றி 60 குடும்பங்களைக் குடியேற்றலாம் என்பது அடியேனின் திட்டமிடலாகும். அல்லாஹ்வுக்காக வாருங்கள் கலந்துரையாடுவோம்.

2 comments:

  1. இந்த மஹல்லாவை சுற்றி இருந்தவர்கள் எந்த தேவையும் இன்றி காணிகளை விற்க முயற்சிக்கின்றனர்..

    ReplyDelete
  2. hi can u send for the land detailes please

    ReplyDelete

Powered by Blogger.