Header Ads



சறூக் ஹாஜியார்க்கு வாழ்த்துக்கள், அவரை பாராட்டாவிட்டால் அந்த செருப்புக்கள் நம்மை வந்து அடிக்கும்


- Dunstan Mani -

சறூக் ஹாஜியார்க்கு வாழ்த்துக்கள் 

கொச்சிகடை புனித அந்தோனியார் திருவிழா வந்தாலே நமக்கு கொண்டாட்டாம் தான், ஜீன் மாதம் 3 ஆம் திகதி கொடியேற்றம் ஆரம்பமாகும்.

அன்றைய தினம் முதல் திருவிழா நடைப்பெறும் வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் நமது கொச்சிகடையை நோக்கி படையெடுப்பார்கள்.

அந்நேரம் கொச்சிக்கடையில் பக்தர்கள் தங்குவதற்கு பல வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அது மாத்திரமா இரவு பகல் பாராமல் வயிறு நிரம்ப இலவச உணவு பல்வேறு வழிகளில் பகிர்ந்தளிக்கப்படும்.

எங்க தோட்டத்தில் மரிசிலா அக்கா எப்போதுமே மஞ்சள் சோறு சமைத்து சீனி சம்பல் வைத்து சின்ன பேக்குகளில் கட்டி கொடுப்பார்.

அதனை வாங்க ஏழை எளிய மக்கள் வரிசையில் நிற்பதை நான் நேரடியாக கண்டவன். அவர்கள் அந்த உணவை சந்தோஷமாக எடுத்து சாப்பிட்டு மகிழ்வதை கண்டுள்ளேன்.

பொதுவாக திருவிழா காலங்களில் பல தனவந்தகர்கள் ஏழைகளுக்கு உதவுவதை வழமையாக கொண்டிருப்பார்கள். அந்த உதவிகளை நம்பி பல ஏழைகள் வாழ்வதை நான் நேரடியாக அனுபவித்தவன்.

இவ்வகையான சூழ்நிலையை கடந்தவர்களுக்கு நேற்றைய சம்பவம் அதிர்ச்சியை மட்டுமல்ல கண்ணீரையும் தந்திருக்கும்.

வறுமையின் கொடுமையை அறியாதவர்கள் கூட மாளிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை கேள்வி பட்ட பின்னர் கண்ணீர் விட்டு இருப்பீர்கள்.

இந்த சம்பவத்தை பலர் பல மாதிரி பேசலாம் ஆனால் மனித நேயமிக்க வள்ளல் சறூக் ஹாஜியாரை நான் மனதார பாரட்டுகிறேன்.

ஏனெனில் தற்போதைய பொருளாதார நெருக்கடி நேரத்திலும் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய அவர் முன்வந்ததை நாம் பாராட்டாமல் இருந்தால் ...அந்த இடத்தில் இருந்த செருப்புக்கள் நம்மை வந்து அடிக்கும்.

சாறூக் ஹாஜியார் அரசியல்வாதியோ ஏமாற்றுகாரோ அல்ல, ஏழைகளுக்கு உதவும் வள்ளல். நேற்றைய தினம் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய அவர் நினைத்திருந்தார்.

துரதிஷ்டவசமாக எதிர்பார்த்ததை விட சனநெரிசல் அதிகமாகி உயிரழப்புக்கள் ஏற்பட்டன. இந்த நிலைக்கு யார் காரணம்?

வறுமையின் கொடுமையை அனுபவிக்கும் மக்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது. என்பதை நீங்களும் மறுதலிக்க மாட்டீர்கள்.

கொரோனா எனும் கொடிய நோய் வந்ததன் காரணமாக பலருடைய அன்றாட தொழில்கள் பாதிக்கப்பட்டன.இதனால் வருமானமும் குறைவடைந்தன.

இதனையே நிவர்த்தி செய்ய அரசாங்கம் யோசிக்கிறது.

இந்த நிலைமையில் வறிய மக்கள் குறித்து என்ன நினைப்பார்கள்? இவ்வகையான நேரத்தில் மக்களுக்கு உதவி செய்ய வந்த நவீன கர்ணனான சறூக் ஹாஜியாரை பாரட்டாமல் இருக்க முடியாது.

நேற்றைய தமிழன் இணையத்தளத்தில் இது தொடர்பாக வந்த செய்தியை நான் படித்து விட்டு சற்று சிந்தித்தேன். அதன் பிறகே எனது எண்ணத்தை எழுதுகிறேன்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமால் இருக்க நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அத்துடன் வறுமையை ஒழிக்க சொல்லி நமது அரசியல் தலைமைகளை வலியுறுத்த வேண்டும்.

வாக்கு வேண்டும் என்றால் வறுமையை ஒழிக்கும் வாக்குறுதியை தாருங்கள் என்று அரசியல் தலைமைகளிடம் கோருங்கள்...!!!

No comments

Powered by Blogger.