Header Ads



கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அச்சுறுத்தலுள்ளது - மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் - தொற்றுநோய் தடுப்புப் பிரிவு

(ஆர்.யசி )

கொவிட் -19 வைரஸ் சமூக பரவலாக  இல்லை என்பதற்காக நாட்டில் முழுமையாக கொவிட் 19 தொற்றாளர்கள் இல்லை என்ற அர்த்தம் கொள்ளமுடியாது. எங்காவது ஒரு சிலர் எமது பரிசோதனைகளில் இருந்து விடுபட்டு நோய் அடையாளம் காட்டப்படாது சமூகத்தில் நடமாட வாய்ப்புகள் உள்ளது என்கிறது தொற்றுநோய் தடுப்புப் பிரிவு.

தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இது குறித்து கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் இலங்கைக்கு பாரிய அளவில் தாக்கங்களை செலுத்தாவிட்டாலும் கூட மீண்டும் மீண்டும் தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

விமான நிலையங்கள் மீள திறக்கப்படும் பட்சமே மீண்டும் எவ்வாறான தாக்கங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்பதை தெரியும். சமூகத்தில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது வரையில் கடற்படையினர் மட்டுமே கொவிட் -19 தொற்றுநோயளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

அவர்களை தவிர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மட்டுமே நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் எவரும் நோய் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை.

ஆகவே இலங்கையின் நோய் தாக்கமானது எவ்வாறான தன்மையில் உள்ளது, எந்த திசையில் பயணிக்கின்றோம் என்பதெல்லாம் இதன் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.

பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை, சமூக பரவல் இல்லை என்பதற்காக நாட்டில் முழுமையாக கொவிட் 19 தொற்றாளர்கள் இல்லை என்ற அர்த்தம் கொள்ளமுடியாது.

எங்காவது ஒரு சிலர் எமது பரிசோதனைகளில் இருந்து விடுபட்டு நோய் அடையாளம் காட்டப்படாது சமூகத்தில் நடமாடி வரலாம். ஆகவேதான் சமூக இடைவெளியை தொடர்ந்து கையாள வேண்டும் எனவும், அனாவசிய செயற்பாடுகளையும் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றோம்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் உள்ளது. இப்போது இவ்விரு மாவட்டங்களும் ஊரடங்கு சட்டத்தின் கீழ் இருக்கின்ற போதிலும் மக்களின் செயற்பாடுகள் வழமையாகவே உள்ளது. எனவே மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். நாட்டில் மீண்டும் வைரஸ் தொற்றுநோய் உருவாக இடமளிக்காத வகையில் மக்களே செயற்பட வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.