Header Ads



பள்ளிவாசல்கள் இமாம்கள், முஅத்தின்மார்களிற்கான கொடுப்பனவுகளை நிறுத்தி விடாதீர்கள்

மாதம் ஒன்பதாயிரம் ரூபா சம்பளம், வாரம் ஏழு நாளும் வேலை செய்யவேண்டும், முழு நாளும் கடமை என்பதால் ஊரிலேயே இருக்க வேண்டும், வருடத்திற்கு இருமுறை மாத்திரமே சம்பளத்திற்கு மேலாக கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படும். இப்படி ஒரு தொழில் கிடைத்தால் நம்மில் எத்தனைபேர் அதனை செய்ய விரும்புவோம்?. 

மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெறும் ஒருவர் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியவில்லை என்று அங்கலாய்ப்பது சாதாரண நிகழ்வாகிப் போன காலத்தில், பத்தாயிரத்திற்குட்பட்ட சம்பளத்தில் ஒரு பள்ளி இமாமின் வாழ்வு, ஒரு முஅத்தினின் வாழ்வு... அவர்களுக்கும் பசி எனும் உணர்வும் தேவை எனும் நிலையும் வரத்தானே செய்கிறது. இந்த சம்பளத்தில்தான் அதிகமான பள்ளிவாசல் இமாம்களும் முஅத்தின்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் மாளிகையில் பணிபுரிபவர்கள், அவனது வார்த்தைகளை ஐந்து வேளையும் ஓதுபவர்கள், இரவு, பகல், மழை, வெயில், ஊரடங்கு, நோய் என்று எதுவும் பாராமல் ஊழியம் பார்ப்பவர்கள், இறை மாளிகையை சுத்தம் செய்பவர்கள் இவர்கள்தான் இந்த உலகிலேயே மிகக்குறைவான ஊதியம் வழங்கப்படுகின்றவர்கள் என்றால் நம்பமாட்டோம் ஆனால் அதுதான் உன்மை என்பதனை நாம் ஏற்கத்தான் வேண்டும். 
பள்ளி இமாம், முஅத்தின்கள் வெள்ளைச் சேட்டும் அத்தரும் போடுவதனால் அவர்களிற்குள்ளால் இழையோடும் சோகங்கள் வெளியில் வராமல் மறைந்துவிடுகின்றன. வருடக்கணக்கில் வேலை செய்தும் ஓய்வடையும்போது வெறும் கையாகத்தான் பலர் வெளியேறுகிறார்கள். 

இந்த கொரணா காலத்தில் பல இமாம்கள் முஅத்தின்களின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் காரணம் அவர்கள் பணி செய்யவில்லை என்பதால். அவ்வாறான இறுக்கமான முடிவுகளை பள்ளிநிர்வாகங்கள் எடுத்துவிடாதீர்கள் எனபதனை பணிவான வேண்டுகோளாக முன்வைக்கிறேன். 
ஐந்து வேளை நமக்கு தொழுகை நடாத்தும் இமாம் என்ன செய்கிறாரோ என்று எண்ணிப்பார்க்க நமக்கு நேரமிலல்லாமல் இருக்கலாம்... 

ஊரடங்கு வேளையிலும் நாளைக்கு ஐந்து முறை அதான் சொல்லி அல்லாஹ்வை நினைவூட்டும் குரலை சுமந்த மனிதன் பற்றி நினைத்துப்பார்ப்பது அவ்வளவு முக்கியமில்லாமல் இருக்கலாம். 

ஆனாலும் இவற்றிற்கு அப்பால் மனிதர்கள் என்ற வகையிலாவது இந்த இக்கட்டா சூழலில் பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் விடையத்தில் சற்று கவனம் எடுக்கவேண்டும் என்பதே அவா.

-றிஸான் சுபைதீன் (நளீமி)
B.A , Dip in Eng, Adv Dip in Development Studies,
LLB (R)

2 comments:

  1. மாஷா அல்லாஹ்....அல்லாஹ்வின் பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்...

    ReplyDelete
  2. அரச நிறுவனங்களிலும்,ஏன் தனியார் நிறுவனங்களிலும் அவர்கள் பணி செய்தாலும் இல்லாவிட்டாலும் இந்த ஊரடங்கும் மற்றும் நெருக்கடியான வேளைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படுகின்றது. அப்படியானால் ஒவ்வொரு நாளும் பாங்கு சொல்லும் பள்ளிவாயல்களின் ஏனைய பொறுப்புக்களை நிறைவேற்றும் இமாம்கள்,முஅத்தின்கள், ஏனையவர்களின் சம்பளம் கட்டாயம் வழங்கப்பட வேணடும். அவ்வாறு வழங்கப்படாது இருப்பின் தயவுசெய்து முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்திலும், வக்பு சபையிலும் முறையிடுங்கள். அவர்கள் நிச்சியம் அந்த விடயத்தைக் கவனிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.