Header Ads



நாட்டு மக்களை குழப்பத்துக்கு, உள்ளாக்கும் வேலையை செய்ய வேண்டாம்

- சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட் -

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் மரணத்தை சுவைத்தே ஆகனும் என்பது நியதி. மரணம் யாருக்கு எந்நேரத்தில் எப்படி வரும் என்பது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. 

ஒருவர் இறந்தபின் அந்த இறப்பு பதிவு செய்யப்பட வேண்டும். பிறக்கும் போது எவ்வாறு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கப்படுமோ அதேபோல் இறப்புக்கும் அத்தாட்சிப் பத்திரம் கொடுப்பதுதான் இலங்கையில் உள்ள நடைமுறை. இந்த இறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் இறந்தவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் நடத்த முடியாது.இறப்பு ஒன்றை பதிவு செய்வதற்கு அந்த இறப்பிற்கான அல்லது மரணத்திற்கான காரணம் தெரிய வேண்டும். காரணம் இன்றி இறப்பை பதிவு செய்ய முடியாது. இன்று முழு நாடுமே கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக அவதானமாக இருக்கின்ற ஒரு நிலைமையில் ஏனைய காலங்களைவிட மரணத்தை பதிவு செய்வதில் மட்டுமல்லாமல் இறுதிக் கிரியைகள் நடத்துவதிலும் பல்வேறுபட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக ஒரு மரணம் நிகழ்ந்த காரணம் எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தாலும் சட்டத்தின் முன்னிலையிலேயே அந்த மரணம் சம்பந்தமாக பல்வேறு தெளிவுகளை அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. உதாரணமாக ஒருவர் பாதையில் செல்லும்போது வாகனம் ஒன்று மோதி மரணமடைந்தார் என்று எடுத்துக் கொள்வோம். அந்த மரணம் ஏற்பட்ட காரணத்தை தெளிவாக மரணம் நடந்த இடத்தில் இருந்து சம்பவத்தை நேரில் கண்டவருக்கு தெரியும். என்றாலும் மரணம் சம்பந்தமாக காரணத்தை கண்டறிவதற்காக உடல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் சட்ட வைத்திய அதிகாரிகளினால் வெட்டப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படுகின்றது. அதேபோல் வீட்டிலே இருக்கும் ஒருவர் திடீரென வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறக்கின்றார் என்று எடுத்துக்கொள்வோம் வீட்டில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும் அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் தான் இறந்தார் என்று. ஆனால் அந்த சந்தர்ப்பத்திலும் உடல் சட்ட வைத்திய அதிகாரியின் முன் கொண்டு செல்லப்பட்டு மரணத்துக்கு உரிய காரணத்தை தெளிவாக பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் உடல் வெட்டப்பட்டு பாகங்கள் பரிசோதிக்கப் படுகின்றன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும்  பொதுமக்கள் சம்பவங்கள்  தெளிவாக தெரிந்த விடயம் தானே? பிறகு ஏன் இவ்வாறு செய்கின்றார்கள்?  இது எங்கள் மார்க்கத்திற்கு முரணான ஒன்று என்று பல்வேறு காரணங்களை சொல்லி எப்படியாவது உடலை வெட்டாமல் எடுப்பதற்கு உரிய சகல முயற்சிகளையும் செய்வதை நாங்கள் காண்கின்றோம். இச்சந்தர்ப்பத்தில் உடலை வெட்டுவதற்கு மிக முக்கிய காரணம் உண்மையிலேயே அவர் குறித்த சம்பவத்தில் கீழே விழுந்து அடிபட்டு இறந்தாரா என்பதை அறிவதற்கு ஆகும். ஏனெனில் வேறொருவர் அடித்ததன் பின்னர் கீழே விழுந்து இறப்பு ஏற்பட்டு இருக்கலாம் அல்லவா. அதேபோல் வாகனத்தில் மோதுவதற்கு முன்  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் அல்லவா. இதேபோல் பல உதாரணங்களை நாங்கள் காணலாம். ஒருவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்வதை இன்னொருவர் கண்டிருந்தாலும் அவர் உண்மையிலேயே கிணற்றில் பாய்ந்ததனால்  இறந்தாரா அல்லது நஞ்சூட்டப்பட்டு கிணற்றில் தள்ளி விடப்பட்டாரா என்பதை அறிய வேண்டும் என்றால் உடலை வெட்டத் தான் வேண்டும்.

இன்றைய நிலையில் கொரோனா நோய் தொற்றால் ஒருவர் இறந்தால் அதற்குரிய இறுதிக்கிரியைகள் நடத்துவது சம்பந்தமாக அரசும் உலக சுகாதார ஸ்தாபனமும் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது .காரணம் நோய்த்தொற்று ஏனையோருக்கும் ஏற்படாமல் கட்டுப்படுத்துவதற்கு ஆகும். ஏனைய காலங்களில் ஒருவர் வைரஸ் தொற்றால் இறந்துள்ளாரா அல்லது வேறு ஏதும் கிருமித் தொற்றால் இறந்துள்ளாரா என்பதை பரிசீலிப்பதற்கு தேவையான உடல் உறுப்புகளை அல்லது பாகங்களை எடுத்து விட்டு உடலை இறுதிக் கிரியைகள் செய்வதற்கு அதிகாரிகள் கொடுப்பார்கள். 

ஆனால் இன்றைய நிலையில் ஒருவர் ஏதாவது தொற்றுக்கு ஆளாகி இறந்தால் அது கொரோனா தொற்றால் ஆகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே உடலை உறவினர்களிடம் கையளிப்பார்கள். ஏனென்றால் கொரோனா(covid 19) காரணமாக இறந்த ஒருவருக்கு இறுதிக் கிரியைகள் நடத்துவது சம்பந்தமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதால் ஆகும். இதன் காரணமாக அதிகாரிகள் தமது கடமையை சரிவர செய்யும் போது அதனை பிழையாக விளங்கிக் கொள்ளும் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்களையும் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கும் நோக்கில் பதிவுகளை விடுகின்றனர் ஒருசில படித்தவர்கள் கூட சில சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு இருப்பது வேதனைக்குரியது. ஏனைய காலங்களில் இறுதிக் கிரியைகள் நடத்தும் விதமும் இன்றைய காலத்தில் உள்ள நடைமுறையும் சற்று வித்தியாசமானது என்பதை புரிய வேண்டும்.

ஆகவே ஒருவர் திடீர் நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்த பின்னர் அந்த உடலை கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்திருப்பாரா என்று அதிகாரிகள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினால் அதற்கு இடம் கொடுங்கள். அவர்கள் செய்வது எல்லோரினதும் நன்மைக்காகவே உண்மையிலேயே ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறந்த பின்னர் அந்த உடலை சரியாக பரிசோதிக்காமல் இறுதிக் கிரியைகள் செய்வதற்கு உறவினர்களிடம் கொடுத்தால் இன்னும் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். கொஞ்சம் காலத்துக்கு ஏற்றவாறு பொறுமையை கையாளுங்கள். எல்லாவற்றையும் இனவாத நோக்கில் பார்க்க வேண்டாம். உங்களுக்கு அதிகாரிகளின் நடத்தையில் சந்தேகம் என்றால் அந்த சந்தேகத்தை முதலில் விடயம் தெரிந்தவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

 அதனை விடுத்து உணர்ச்சி வசப்பட்டு சமூக வலைத்தளங்களில் தேவையற்ற பதிவுகளை இட்டு நாட்டு மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்கும் வேலையை செய்ய வேண்டாம். தடி எடுத்தவன் எல்லாம் வீரன் என்பதை போல் செயற்படவேண்டாம். கடந்த சில தினங்களாக இவ்வாறான உணர்ச்சிவசப்பட்டு அனுப்பிய பல்வேறு குரல் பதிவுகளும் எழுத்துருவிலான முறைப்பாடுகளும் சமூக வலைதளங்களில் உலாவி வந்ததால் தான் இதனை எழுதுகின்றேன். குறிப்பிட்ட உடல்கள் கொரோனா அல்ல என்று உறுதிப்படுத்திய பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது என்று பின்னர் அவர்களே எழுதுகிறார்கள்.

No comments

Powered by Blogger.