Header Ads



எரிக்கப்பட்ட ஜனாஸாவின் சாம்பலை குடும்பத்தினர், அடக்கம்செய்வது உணர்வு சார்ந்த விடயம்


- அபூ அய்மன் -

இன,மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமான உணர்வுடன் நோக்கப்பட வேண்டிய கொரோனாவில் இறந்த ஜனாஸாவின் சாம்பல் அடக்கம் விவகாரம் இன்று விமர்சனப் பொருளாக மாறிப்போயுள்ளது.

கொரோனாவில் மரனிப்பவர்களின் உடல்களை இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் எரித்து தகனம் செய்கின்ற நடைமுறையை இலங்கை சுகாதாரத்துறையின் முடிவிற்கமைய அரசு முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இன்று வரை கொரோனா தொற்றினால் 7 உயிர்கள் பரிக்கப்பட்டு 190 இற்கும் நெருக்கமானவர்கள் நோயாளிகளாக இனம் கானப்பட்டுள்ள நிலையில் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வுக்கு அப்பால் 'கொரோனாவினால் உயிரிழந்தவரின் சாம்பலை' அடக்கம் செய்வதா இல்லையா என்ற விவகாரம் விவாதப் பொருளாக தோற்றம் பெற்றுள்ளது.

எரிக்கப்பட்ட ஜனாஸாவின் குடும்பத்தாரின் மன நிலை குறித்த சிந்தனையை தாண்டி 'தடியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன்' என்பது போல் மார்க்கத்தீர்பு வழங்குவதும், மாற்றுக் கருத்து சொல்கின்றவர்களை தரக்குறைவாக சாடுதல் என்பதும்தான் ஆன்மீக அமைப்புகளின் முதன்மைப் பணியாக மாறிப்போயுள்ளது.

எரிக்கப்பட்ட ஜனாஸாவின் சாம்பலை அடக்குதல் தொடர்பான விவகாரம் வெறுமனே ஆன்மீகத்துடன் மட்டுமல்லாது தனிமனித உணர்வுடன் நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இஸ்லாம் எனும் வாழ்க்கை திட்டம் மனித உயிருக்கும், உனர்வுக்கும் மட்டுமல்லாது இறந்த உடலுக்கும் மதிப்பளிக்கும் முன்மாதிரிமிக்க வாழ்க்கை திட்டம் என்பதை என்னற்ற சான்றுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புனித ஆலயமான கஃபாவின் கன்னியத்துடன் மனித உயிரின் புனிதத்தையும், மானத்தையும் ஒப்பிட்ட அன்னல் நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை முஸ்லிம் அல்லாத யூதர் ஒருவரின் மரனித்த உடலுக்காக எழுந்து நின்று உயிரற்ற உடலும் மதிக்கப்பட வேண்டியது என்பதை உலகிற்கு சொல்லிக் கொடுத்த நிகழ்வை அன்னலாரின் வாழ்வின் கானலாம்.

மனிதனாக முழுமை பெறாமல் பிரசவிக்கும் 'விழு கட்டிகளுக்கும்' ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அதன் பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடப்பட வேண்டும் என்ற பாடத்தை அல்லாஹ்வின் தூதர் படித்துக் கொடுத்திருக்கும் போது எரிக்கப்பட்ட ஜனாஸாவின் சாம்பல் குறித்து விமர்சிப்பவர்கள் இவற்றை கவனிக்க தவறி விட்டார்களோ தெரியவில்லை.

எரிக்கப்பட்ட ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யும் விடயத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற ஏவலையோ அல்லது அடக்கம் செய்யக்கூடாது என்ற விலக்கலையோ இஸ்லாம் நேரடியாக கூறாத நிலையில் இது குறித்த மார்க்க தீர்ப்பை சொல்வதற்கு முன் இறந்தவரின் குடும்பத்தினரின் உணர்வுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்து தீர்ப்பு வழங்குவது பொருத்தமான விடயமாகும்.

ஸஹீ{ஹல் புகாரியில் இடம்பெறும் செய்தியில் உஹதுப் போரில் வீரமரணமடைந்த ஜாபிர் (ரழி) அவர்களின் தந்தை மற்றொருவருடன் சேர்த்து ஒரே குழியில் அடக்கம் செய்யப்படுகிறார். 'வேறொருவருடன் எனது தந்தையை அடக்கம் செய்யப்பட்டதை எனது மனம் ஒப்பவில்லை. எனவே என் தந்தையின் உடலை தனியாக எடுத்து வேறு கப்ரில் மறு அடக்கம் செய்தேன்.' என்று ஜாபிர் (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்.

இறந்தவரின் குடும்பத்தின் உணர்வுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள இந்த ஒரு செய்தி போதுமானதாகும். அல்லாஹ்வின் தூதர் அடக்கம் செய்த ஜனாஸாவை வேறு எந்த காரணமுமின்றி மனம் ஒப்பவில்லை என்ற ஒற்றைக் காரணத்திற்காக மீண்டும் தோண்டி எடுத்து தனியாக அடக்கம் செய்ததை இஸ்லாம் கண்டிக்கவில்லை எனும்போது, எரிக்கப்பட்ட ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்தல் என்பது இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது.


அடக்கம் செய்த ஜனாஸாவை மனம் ஒப்பவில்லை என்பதற்காக மீண்டும் தோண்டி அடக்கம் செய்ததை இஸ்லாம் அங்கீகரித்திருக்கும் போது, அடக்கத்திற்கு பகரமாக எரித்து தகனம் செய்யப்பட்ட உடலில் சாம்பலை அடக்குதல் என்பது தோண்டி எடுத்து இரண்டாம் முறை அடக்குவதற்கு நிகரான ஒன்றாகும். 

எனவே வீனான வாதப்பிரதி வாதங்களையும் , தர்க்கங்களையும் விட்டு விட்டு இறந்தவரின் குடும்பத்தின் உணர்வை இஸ்லாம் மதித்துள்ளது என்ற அடிப்படையில் கொரோனாவினால் இறந்த ஜனாஸா எரிக்கப்பட்ட பிறகு அவரின் குடும்பம் சாம்பலை அடக்கம் செய்ய விரும்பினால் அவ்வாறு செய்வது இஸ்லாம் தடை செய்த ஒன்றல்ல. மாறாக அதற்கான உரிமை குடும்பத்திற்கு உள்ளது அவர்களின் உணர்வு சார்ந்த விடயம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. ஆம் அவ்வாறான குடும்பங்களின் மனோநிலையை யோசித்தப்பார்க்காமல் கருத்து தெரிவிக்கின்றனர்.அடுத்து மனித உடலில் அஜபுத் தனஸ் என்ற ஒரு பகுதி உள்ளது அது என்ன செய்தாலும் அழியாது மறுமை நாளில் அதனைக் கொண்டே மனிதர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்ற விடயத்தையும் மார்க்கம் எமக்கு கற்றுத் தருகிறது.எனவே அது இணைந்துள்ள சாம்பல் ஒவ்வொருவரின் பெயரிலும் பையொன்றில் பாதுகாக்கப்பட்டால் அதை பெற்று அடக்கம் செய்வதே பொருத்தமானது மட்டுமன்றி அது குடும்பத்தவர் ஸியாரத் செய்வதற்கான மன ஆறுதலையும் கொடுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.