Header Ads



பிள்ளைகள் கிணற்றில் வீசிய தந்தை, உண்மையில் என்ன நடந்தது...?

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில்,  ஊடரங்கு உத்தரவு அமுலில் இருந்த அதிகாலை வேளையில் (நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர்) இடம்பெற்ற சம்பவமானது இப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

விடிவதற்கு முன்பாக அதிகாலை வேளையில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமான முறையில் உயிரிழந்து போயுள்ளன. இம்மரணங்களால் வாழைச்சேனை பிரதேசம் எங்கும் சோகத்தில் மூழ்கியது.

மாவடிச்சேனை கிராமத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கிணற்றுக்குள் வீசி கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாவடிச்சேனை, பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளையே அவர்களது தந்தை  தனது வீட்டுக் கிணற்றுக்குள் தூக்கி வீசியுள்ளார். இரு பிள்ளைகளுமே கிணற்று நீரில் அமிழ்ந்து போய் மரணமடைந்தனர்.

இப்பிள்ளைகளின் தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமான மரணமடைந்த நிலையில், ஆண் பிள்ளையை அட்டுல்கம பிரதேசத்திலுள்ள காப்பகத்திலும், பெண் பிள்ளையை இரத்மலானை பிரதேசத்திலுள்ள காப்பகத்திலும் தந்தை சேர்த்துள்ளார்.

அங்கு இவ்விருவரும் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பிள்ளைகளை ஏறாவூரில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்ப்பதற்காக பாடசாலைகளில் இருந்து பிள்ளைகளை இடைவிலகலில் தந்தை அழைத்து வந்திருந்தார்.

இதில் பெண் பிள்ளை ஆங்கில மொழியில் பாடங்களை கற்று வந்தது. பிள்ளைகளை பாடசாலையில் இருந்து விலக்கிச் செல்ல வேண்டாம் என்று பாடசாலை நிருவாகம் கூறியதாக தெரிய வருகின்றது.

இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த குற்றத்தில் முகம்மது லெப்பை சுலைமா லெப்பை (வயது 45) என்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

“என்னைக் கொலை செய்யப் போகின்றார்கள். நான் இறந்தால் பிள்ளைகள் அநாதைகளாகி விடும்” என்று கைது செய்யப்பட்ட தந்தை கூறியதாகத் தெரியவருகிறது.

இக்கூற்றை வைத்துப் பார்க்கும் போது பிள்ளைகளை அந்தத் தந்தையே கொலை செய்திருக்கலாமென நம்பப்படுவதாக பிள்ளைகளின் தந்தையின் தமையனாரான முகமது காசீம் (வயது 51) என்பவர் தெரிவித்தார்.

“எனது தம்பி செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஒன்றரை மணியளவில் எனது வீட்டுக்கு வந்து எனது வீட்டுக் கதவை தட்டினார். நான் பயத்தினால் சற்று நேரத்தின் பின்னர் கதவைத் திறந்து பார்த்த போது, ‘என்னைக் கொலை செய்வதற்கு துரத்தி வருகின்றனர்’ என்று கூறினார்.

‘உன்னை யார் துரத்துகின்றனர்?’ என்று நான் கேட்டேன்.

சற்று நேரம் கழிந்த நிலையில், எனது தங்கையின் மருமகன் (தங்கையின் மகளின் கணவர்) தொலைபேசி ஊடாக என்னுடன் தொடர்பு கொண்டு ‘நித்திரையில் இருந்த இரண்டு பிள்ளையும், உங்கள் தம்பியையும் காணவில்லை’ என்று கூறினார்.

அப்போது நான் எனது தம்பியிடம் ‘பிள்ளைகள் எங்கே?’ என்று கேட்டேன்.

‘பிள்ளைகள் இறந்து விட்டனர்’ என்று தம்பி கூறினார். உடனடியாக நாம் பொலிஸாருக்கு அறிவித்து விட்டு தம்பி இருந்த வீட்டுக்குச் சென்று, தங்கையுடன் கிணற்றை எட்டிப் பார்த்தோம். கிணற்றுக்குள் பிள்ளைகள் இறந்த நிலையில் கிடந்தனர்.

தம்பியிடம் இது பற்றி நான் கேட்டேன். அப்போது அவர், ‘நான் இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்தேன். கிணற்றில் நீர் குறைவாக இருந்தமையால் நான் மேலே வந்து விட்டேன்’ என்று அவர் தெரிவித்தார்.

இவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று இவரது பேச்சுகள் மூலம் எங்களால் ஊகிக்க முடிகிறது. இவர் பிள்ளைகளோடு நல்ல இரக்கமாக இருந்தார். ‘என்னை கொலை செய்யப் போகின்றார்கள். நான் இறந்தால் பிள்ளைகள் அநாதையாகி விடுவார்கள்’ என்று கூறுவார். அவர்தான் பிள்ளைகளை கொலை செய்திருக்கலாம் என்று நம்புகிறேன். பிள்ளைகள் கல்வி கற்ற பாடசாலையிலும் இவ்வாறே கூறியிருக்கின்றார்.

எனது தம்பியின் மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக இறந்தார். இக்குடும்பத்தை எனது தம்பி மற்றும் தங்கை ஆகியோர் பராமரித்து வந்த நிலையிலேயே பிள்ளைகளை கொழும்பிலுள்ள காப்பகத்தில் கல்வி கற்பதற்கு அவர் சேர்த்துள்ளார்”.

இவ்வாறு அந்தத் தந்தையின் தமையனான முகமது காசீம் மேலும் தெரிவித்தார்.

பிள்ளைகளின் பெரியம்மா கூறிய தகவல்;

“எனக்கு நிம்மதி இல்லை. நானும் பிள்ளைகளும் மரணிக்கப் போகின்றோம் என்று இரண்டு நாட்களாக அவர் கூறித் திரிந்தார்” என உயிரிழந்த பிள்ளைகளின் பெரியம்மாவான சம்சுன் நிஹாரா (வயது 47) என்பவர் தெரிவித்தார்.

“அவர் எனது கணவரின் தம்பியாவார். எனது வீட்டுக்கு வந்து ‘என்னைத் துரத்துகின்றார்கள், கொலை செய்யப் போகின்றார்கள்’ என்று கூறிக் கொண்டிருந்தார். இந்நிலையிலேயே இவரின் தங்கையின் மருமகன் தொலைபேசி என்னுடன் தொடர்பு கொண்டு ‘பிள்ளைகளையும் தந்தையையும் காணவில்லை’ என்று கூறினார்.

அவரிடம் நான் விசாரித்த போது பிள்ளைகளை கிணற்றில் வீசியதாகக் கூறினார். கிணற்றில் பார்த்த போது பிள்ளைகள் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.

எனக்கு ஆஸ்துமா உள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு சக்தியற்றவளாகிப் போனேன். உடனடியாக அயலவர்களை தற்போதைய சூழலில் அழைக்க வேண்டாம் என்று கூறி எனது கணவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்”.

இவ்வாறு பிள்ளைகளின் பெரியம்மாவான சம்சுன் நிஹாரா தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் பிள்ளைகளை காப்பகத்தில் சேர்த்து விட்டு கொழும்பில் வேலை செய்து வந்ததாகவும், கொழும்பில் வேலை செய்த இடத்திலும் தன்னைக் கொலை செய்ய வருகின்றார்கள் என்று கூறியே அங்கிருந்து விலகியதாகவும் தெரியவருகிறது.

இரண்டு பிள்ளைகளையும் அழைத்து வந்து ஒரு மாதம் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

“அவருக்கும் ஆவரது பிள்ளைகளுக்கும் நானும் எனது கணவரின் சகோதரிகளும் உணவு வழங்கி வந்தோம். இவர்களுக்கு சாப்பாடுகளில் எந்த குறையும் இருக்கவில்லை.

‘எனக்கு நிம்மதி இல்லை. நானும் பிள்ளைகளும் மரணிக்கப் போகின்றோம் என்றுதான் இரண்டு நாட்களாக கூறித் திரிந்தார். இவர் சும்மா கூறுகின்றார் என்று நாங்கள் இதனை பொருட்படுத்தவில்லை. திங்கட்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு சென்று இக்காரியத்தை செய்துள்ளார்” என்றும் அப்பெண் கூறினார்.

திங்கட்கிழமை இரவு கூட தனது இரண்டு பிள்ளைகளையும் தனது மடியில் வைத்து அவர் உறங்கச் செய்ததாகவும் தனது பிள்ளைகளுடன் இரக்கமாக நடந்து கொள்பவர் என்றும், இவ்வாறு ஏன் செய்தார் என்று புரியவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இச்சோக சம்பவத்தினை கேட்கும் எவருக்கும் மனம் உருகாமல் இருக்க முடியாது. தானும் பிள்ளைகளும் சாகப் போகின்றோம், என்னை கொலை செய்ய வருகிறார்கள், மூலம் நான் மரணித்தால் எனது பிள்ளைகளுக்கு யார் ஆதரவு? அதனால் நாங்கள் எல்லோரும் மரணிக்கப் போகின்றோம் என்று அவர் கூறித் திரிந்த சமயத்தில், அவரது உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இந்த விடயத்தில் கரிசனை கொண்டு அவருக்கு வைத்தியம் செய்வதற்கோ அல்லது பிள்ளைகளை அவரிடம் இருந்து மீட்பதற்கோ நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இப்பரிதாபம் நடந்திருக்காது.

இதுவே இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

2 comments:

  1. "நான் மரணிக்கப் போகின்றேன்" எனக் கூறித்திரிபன்/கூறித்திரிபவள் ஒருபோதும் அவ்வாறு செய்து கொள்வதில்லை. மாறாக அவ்வாறு செய்துகொள்ளப் போகின்றவர் ஒருபோதும் அதனை சொல்லித்திரியமாட்டார் எனும் சமூகக்கருத்து / தொன்மம் (social mith) எமது சமூகத்தில் நிலவுகின்றது.
    உண்மையில், இவ்வாறானவர்கள் தாம் இறப்பதற்கு முன்னால் இவ்வாறான உளவியற் பாதிப்புக்குள்ளான நிலையில் யாதேனும் ஒரு செய்தியை சமூகத்திற்கு சொல்லிவிடாமல் ஒருபோதும் நடவடிக்கையில் இறங்குவதில்லை என்பவதே உண்மை.
    இங்கு இந்த அறிவியலை அவரது உறவினர்களும் அயலவர்களும் பெற்றிருக்காமையே துரதிஷ்டம்.

    மக்களே!
    தான் இறக்கப் போவதாக யாராவது உங்களிடம் கூறுவாராயின் அது உங்களை அவர் மிரட்டுகிறார்(blackmail) எனப் பொருள்கொள்வதற்கு அப்பால் உங்களுக்கு தான் இறப்பதற்கு முன்னால் மிகவும் அரிதாகக் கிடைக்கக் கூடிய செய்தி ஒன்றினை உங்களிடம் முன்னறிவிப்புச் செய்கின்றார் என்பதே மிகவும் பொருளுள்ள விடயமாகும். ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் தரும் செய்திகளை உதாசீனப்படுத்தாது விழிப்படைந்து விரைவாக பொருத்தமான நடவடிக்கையில் இறங்குவதே சாலச்சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.