April 09, 2020

போலி செய்திகளினால், பாதிக்கப்படும் முஸ்லிம்கள்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்தும் வரும் நிலையில், பரவிவரும் போலி செய்திகளால் பலர் பாதிப்படைகின்றனர்.

நிகழ்வு 1- மூன்று முஸ்லிம் மீனவர்களை 10-15 பேர் இருந்த குழுவினர் சூழ்ந்து முற்றுகை இடுகிறார்கள். மூன்று மீனவர்களும் அச்சத்துடன் கைகூப்பி கெஞ்சிகிறார்கள். 'இவர்களைத் தொடாதே, இவர்கள்தான் கொரோனாவைப் பரப்புகிறார்கள்.' என்று சுற்றியிருக்கும் அந்த கும்பல் உள்ளூர் மொழியில் கூச்சலிடுகிறது. - இது கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவம்

நிகழ்வு 2- 'ஜாவேத் பாய், இங்கிருந்து கடையை எடுத்துவிடுங்கள். இங்கே கடை போட வேண்டாம். உங்களால் நிறைய பிரச்சனை ஏற்படுகிறது. உங்களைப் போன்றவர்களிடமிருந்து இந்த நோய் பரவுகிறது. இங்கிருந்து உங்கள் கடையை எடுத்துவிடுங்கள்.'- இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் நடைபெற்ற சம்பவம்

இவை கடந்த சில நாட்களில் நாட்டின் இரண்டு பகுதிகளில் நடந்த சம்பவங்கள், இதுபோன்ற மேலும் பல சம்பவங்களின் செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

கொரோனா நோய்த்தொற்று மற்றும் முடக்கநிலையின் காரணமாக நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக ஏழை தொழிலாளர்கள் மற்றும் சிறிய கடைகளை வைத்திருப்பவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை சேர்ந்த மக்களை துன்புறுத்தும் சில சம்பவங்களும் அண்மையில் பதிவாகியுள்ளன.

தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வெளி வந்ததிலிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை முஸ்லிம்களை குறி வைத்து நடைபெறும் சம்பவங்கள் பல செய்திகளில் வந்துள்ளன.

டெல்லியின் தப்லிக் ஜமாத்தின் மத நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 6 பேர் மார்ச் 30 அன்று கோவிட் -19ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தி வெளிவந்ததிலிருந்து போலி செய்திகளும் வதந்திகளும் தொடர்ந்து பரவிவருகின்றன.

டெல்லியின் தப்லிக் ஜமாத்தின் மார்க்கஸில் நடைபெற்ற மத நிகழ்வில் பங்கேற்ற 8,000 பேரால் இந்த வைரஸ் நிச்சயமாக பரவியுள்ளது. ஜமாத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றதால் நோய்த்தொற்று பெருமளவில் பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பிரச்சனை என்னவென்றால், இப்போது நாட்டில் வசிக்கும் கோடிக் கணக்கான முஸ்லிம்களையும், மார்கஸில் இருந்து வந்தவர்களையும் மக்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.

மார்ச் 31 முதல், முஸ்லிம்களை குறிவைக்கும் வீடியோக்களும், முஸ்லிம்களை குற்றவாளிகளாகக் காட்டும் போலி வீடியோக்களும் வெளியாகின்றன.

ஹல்த்வானியைச் சேர்ந்தவர்

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் இருந்து ஒரு வீடியோ வந்துள்ளது. அதில் சிலர் ஒரு நபரிடம் பெயரைக் கேட்கிறார்கள். ஜாவேத் என்று அவர் தனது பெயரைச் சொன்னதும், அங்கிருந்து கடையை எடுக்கும்படி சொல்லிவிட்டு, இனிமேல் இங்கு கடை போடவேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.

ஜாவேதின் அருகே அமர்ந்திருக்கும் மற்றுமொரு கடைக்காரர், நாங்களும் கடை அமைக்கக்கூடாதா என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் அவர்கள், இல்லை, நீங்கள் கடை போடலாம் என்று சொல்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

இவர்களை வேலைக்கு வைக்க வேண்டாம், இவர்களால்தான் கொரோனா பரவுகிறது. யாராவது ஒரு முஸ்லிம் வண்டி இழுத்துச் செல்வதை பார்த்தாலோ அல்லது பொருட்களை வாங்கிச் செல்வதைப் பார்த்தாலோ இதோ, இந்த தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக அழைத்து எங்களிடம் தகவல் கூறுங்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த வீடியோவில் இருப்பவர் ஹல்த்வானியின் பனபூல்பூராவில் வசிக்கும் ஜாவேத். அவரிடம் நாங்கள் பேசினோம். "ஐ.டி.ஐ சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு நான் கடை போடத் தொடங்கினேன், என்னிடம் வந்த சிலர் ஆதார் அட்டையை கேட்டார்கள். ஆதார் அட்டை வீட்டில் இருக்கிறது என்று சொன்னேன். பிறகு அவர்கள் என் பெயரைக் கேட்டார்கள். ஜாவேத் என்று சொன்ன பிறகு, இங்கிருந்து கடையை எடுத்துவிடு, இனிமேல் இங்கே கடை அமைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்," என்கிறார் ஜாவேத்.

தனது தள்ளுவண்டியை அகற்றச் சொல்லும்போது அங்கிருந்த பெண் போலீஸ்காரர் இதை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்ததாக ஜாவேத் கூறுகிறார். தன்னை அங்கே கடை போடக்கூடாது என்று சொன்னவர்கள், மற்ற கடைக்காரர்கள் கடை அமைக்கலாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார் ஜாவேத்.

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு நடந்து செல்ல தொடங்கியபோது, பழங்களின் விற்பனை தொடரும், அதில் எந்த பாதிப்பும் இருக்காது என்று நினைத்த ஜாவேத் தனது கிராமத்திற்கு செல்லவில்லை.

உத்தரபிரதேசத்தின் பதாயூ நகரைச் சேர்ந்தவர் ஜாவேத். "இப்போது என்ன செய்வது? வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன். அவர்கள் 10-15 பேர் இருந்தனர், அவர்களை எதிர்த்து என்னால் எதுவுமே பேச முடியவில்லை. இனிமேல் என்னால் கடை போட முடியாது," என்று கூறுகிறார் அவர்.

அவரது குரல் ஆழ்ந்த விரக்தியை பிரதிபலிக்கிறது. ஜாவேதின் சகோதரர் சந்தையில் இருந்து மொத்தமாக பழங்களை வாங்கி வருவார். ஜாவேத் பழங்களை விற்பார். இப்போது இரு சகோதரர்களுக்கும் வேலை இல்லை, வருமானமும் இல்லை.

தங்களுக்கு எந்த பழ விற்பனையாளரிடமிருந்தும் இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று நைனிடால் எஸ்.எஸ்.பி சுனில் மீனா எங்களிடம் கூறினார். ஆனால் சிலர் முடக்கநிலையை மீறியதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது, அவர்கள் மீது ஐ.பி.சி பிரிவு 188இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நைனிடால் எஸ்.எஸ்.பி தெரிவித்தார்.

டெல்லியிலும் ஆதார் அட்டைக்கான கோரிக்கை

பிப்ரவரியில் கலவரத்தீயில் புகைந்துக் கொண்டிருந்த டெல்லியும் இந்த பிரச்சனையில் இருந்து விலகியிருக்கவில்லை. இதேபோன்ற வீடியோ வடமேற்கு டெல்லியில் உள்ள சாஸ்திரி நகரிலிருந்து வெளிவந்துள்ளது. சாஸ்திரி நகரின் பி-பிளாக் பகுதியில் ஒரு கூட்டம் நடைபெற்றது, தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்யும் எந்த முஸ்லிமையும் அந்த பகுதிக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது, அங்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை தள்ளுவண்டியில் கொண்டுவந்து தெருவில் விற்பனை செய்பவர்கள் தங்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து தங்கள் அடையாளத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரை பிபிசி தொடர்பு கொண்டது.

வீடியோ வைரலாகியிருப்பதால், அந்த நபர் எங்களுடன் நேரடியாக பேசவிரும்பவில்லை, ஆனால் தனது காலனியில் அத்தகைய கூட்டம் நடைபெற்றது என்பதை ஒப்புக்கொண்டார்.

கர்நாடகாவிலிருந்து வெளிவந்த வீடியோ

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களில் இதேபோன்ற வன்முறை மற்றும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் இரண்டு வீடியோக்கள் வெளி வந்துள்ளன.

திங்களன்று கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தின் பிடாரி கிராமத்தில் முஸ்லிம் மீனவர்களை கிராம மக்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். கிருஷ்ணா ஆற்றில் மீன் பிடிக்க வந்த இந்த மீனவர்களை சூழ்ந்துக் கொண்ட கூட்டம், 'நீங்கள் ஏன் வந்தீர்கள்? உங்களைப் போன்றவர்களால்தான் கொரோனா பரவுகிறது' என்று கூச்சலிட்டது.

இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது, அதில் கிராமவாசிகளின் கைகளில் கம்புகளும், தடிகளும் உள்ளன. இந்த மீனவர்கள் கைகூப்பி மன்றாடி அழுவதை பார்க்க முடிகிறது.

பாகல்கோட் எஸ்.பி. லோகேஷ் பி ஜகல்சரிடம் பிபிசி தொடர்பு கொண்டது. "இரண்டு இந்துக்கள், இரண்டு முஸ்லிம்கள் என நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வேறு கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களை அந்த குறிப்பிட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். நடந்தது தவறு தான். விவகாரம் தெரியவந்ததும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

பெங்களூருவின் அமருதாலியில் திங்கட்கிழமையன்று வன்முறை நிகழ்ந்தது. ஜரின் தாஜ், தனது மகன் தப்ரெஸுடன் குடியிருப்புப் பகுதிகளில் ரேஷன் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார், சிலர் அவர் விநியோகம் செய்வதை தடுத்தனர்.

"இந்துக்களுக்கு உணவு விநியோகிக்க வேண்டாம், உங்கள் மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விநியோகியுங்கள் என்று சுமார் 20 பேர் எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்யவில்லை. அருகிலுள்ள வேறொரு காலனிக்குச் சென்றுவிட்டோம். இதற்குப் பிறகு, கூட்டம் வந்து எங்கள் மீது தடியடி நடத்தினார்கள்," என்று தப்ரேஜ் கூறுகிறார். அவரது வலது கையில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன. தலையிலும் சில தையல்கள் போடப்பட்டுள்ளன.

23 வயதான தப்ரேஜ், ஆடைகள் விற்பனை செய்யும் ஒரு ஷோரூமில் பணிபுரிகிறார். யோகேந்திர யாதவின் அமைப்பான ஸ்வராஜ் இந்தியாவின் சார்பில், கடந்த 14 நாட்களாக ஏழைகளுக்கு ரேஷன் விநியோகித்து வந்தார். இந்த வழக்கில், அடையாளம் தெரியாத 6 பேர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் வாயிலாக எங்களுக்கு தெரிய வந்த சம்பவங்களைப் பற்றி மட்டுமே இங்கு பேசினோம். கோவிட் -19 என்பது எந்தவொரு மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைத் தாண்டிய ஒரு தொற்றுநோய்.

தப்லிக் ஜமாத் கூட்டம் நடைபெற்ற பிறகு தான் கோவிட் -19 நோய்த்தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்தது என்பதும் உண்மைதான்.

இந்தியாவில் கோவிட் -19 வழக்குகளில் 30% தப்லிக் ஜமாத்துடன் தொடர்புடையவை. ஆனால் இப்போது சாமானிய மக்களின் கோபமானது ஜமாத்துடன் எந்த தொடர்பும் இல்லாத இஸ்லாமிய மக்கள் மீதும் திரும்பியிருக்கிறது என்று சுகாதார அமைச்சக செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் டேகு நகரில் உள்ள சின்ஜியோன்ஜி தேவாலயத்தின் தலைவர் லீமைன், நான்காயிரம் பேருக்கு கொரோனா பரவுவதற்கு மூலக் காரணமாக இருந்துள்ளார்.

அதாவது தென் கொரியாவின் மொத்த கொரொனா பாதிப்பில் 60 சதவீதம் இது. தென் கொரியாவில் கொரோனா நெருக்கடியின் மைய புள்ளி என்று லீமைன் அழைக்கப்பட்டார். பின்னர், தனது தவறுக்கு அவர் மன்னிப்பும் கேட்டார்.

பொய்கள் மூலம் வெறுப்பு பரப்பப்படுகிறது

 கொரோனாவை மதத்துடன் இணைக்கும் இதுபோன்ற செயல்கள் இயல்பாக இந்தியாவில் தொடங்கவில்லை. மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட முறையில் போலிதகவல்கள், வீடியோக்கள் பரப்பப்பட்டன.  

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், வேண்டுமென்றே அதைப் பரப்புகிறார்கள் என்றகருத்தும் பொது மக்களிடையே உணர்ச்சிபூர்வமாக பரப்பப்படுகிறது. 

இதற்காக பல போலி மற்றும் தவறாக சித்தரிக்கப்படும் வீடியோக்கள் வைரலாக்கப்படுகின்றன.

வேறு எப்போதோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை தற்போது கொரோனாவுடன் இணைத்து தவறான செய்திகளை பரப்புவதற்கு பயன்படுத்தி சித்தரிக்கப்படும் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

 போலி வீடியோ - உணவு பொருட்களை பொட்டலமிடும்போது முஸ்லிம்கள் எச்சில் துப்புகிறார்கள்

ஏப்ரல் 2 ஆம் தேதி சோனம் மகாஜன் ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளார். 45 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு முஸ்லிம் உணவு பொட்டலத்தின் மீது துப்புகிறார்.

இந்த வீடியோவை ட்வீட் செய்த சோனம் மகாஜன், ஒரு நபர் சொமாடோ நிறுவனத்திடம் ஆர்டர் செய்திருந்த உணவுப் பொருளை ஒரு முஸ்லிம் இளைஞர் கொண்டு வந்து கொடுத்தபோது, அதை வாங்க மறுத்த சம்பவத்தை நியாயப்படுத்தினார்.

ஆல்ட் நியூஸ் அறிக்கையின்படி, இந்த வீடியோ இந்தோனீசியா, சிங்கப்பூர், யு.ஏ.இ ஆகிய நாடுகளில் 2019 ஏப்ரல் முதல் வெவ்வேறு கருத்துக்களுடன் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக சரியான தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்த வீடியோ மிகவும் பழமையானது, இதற்கு கொரோனா பரவுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. இந்த வீடியோ இப்போது இந்தியாவில் புதிய நோக்கங்களுடன் பகிரப்படுகிறது.

மார்ச் 30 முதல், போலி வீடியோக்களும், வகுப்புவாத இயல்புடைய செய்திகளும் வெளிவந்துள்ளன என்று உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான ஆல்ட் நியூஸின் நிறுவனர் பிரதீக் சின்ஹா கருதுகிறார்.

"பல பழைய செய்திகள் வைரலாகின்றன, அவை தற்செயலானவை அல்ல, யாரோ ஒருவர் அவற்றைத் தேடி எடுத்து தூசி தட்டி, தவறான செய்திகளுடன் வெளியிடுகிறார்கள். இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதற்காகவே ஒரு முழு நெட்வொர்க் இயங்குகிறது. சாமானிய மக்களுக்கு ஒரே மாதிரியான செய்திகள் தொடர்ந்து கிடைக்கும்போது, அவர்கள் அவற்றை சுலபமாக நம்பி விடுகின்றனர். நமது சித்தாந்தத்துடன் பொருந்தக்கூடிய ஒரு வீடியோவை நாம் அனைவரும் நம்புகிறோம் ." என்கிறார் அவர்.

துப்லகாபாத் தனிமைப்படுத்தும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மீது துப்புகிறார்கள் என்று வடக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கூறிய பிறகு, இதுபோன்ற வீடியோக்கள் இன்னும் அதிகமாக வரத் தொடங்கிவிட்டன.

அந்த சம்பவம் தொடர்பான எந்த வீடியோவும் ரயில்வே ஆணையத்தால் வெளியிடப்படவில்லை என்றாலும், அதே கருத்தை கூறிக் கொண்டு பல பழைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.

இந்த போலி வீடியோக்களின் அதிக தாக்கம் பொருளாதார வர்க்கத்தில் அடிமட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூக மக்கள் மீது தான் ஏற்படுகிறது. இவர்கள்தான் தப்லிக் ஜமாத் குழுவின் அலட்சியத்திற்கான விலையை செலுத்துபவர்களாகவும், இந்த போலி தகவல்களின் சுமையை சுமப்பவர்களாகவும் மாறிவிட்டனர். கொரோனா நோய்தொற்று ஒருபுறம் என்றால், தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் அச்சத்துடன் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் BBC

2 கருத்துரைகள்:

இந்தியாவில் பிற்போக்குவாதிகளே அதிகம்?

இந்தியா நாடா
கேடுகெட்ட அரசியல்வாதி இருக்கும் நாடுதான் இந்தியா

Post a Comment