April 18, 2020

உலமாக்கள் மீது அன்பு வைத்து, அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும், உபகாரங்களையும் செய்து கொடுப்போம்

அஷ்-ஷேக் மபாஸ் (ஹாமிதி)

சத்திய இஸ்லாத்தின்  மூலாதாரங்களாகிய அல் குர்ஆன் அல் ஹதீஸ் மற்றும் அதன் உட்பிரிவுகளை அறபு மொழியிலேயே கற்று வெளியானோரையே (உலமாக்கள்) அறிஞர்கள் என அழைக்கப்படுகிறது. இவர்களை குறித்து அல் குர்ஆனும் அல் ஹதீஸும் பின்வருமாறு கூறுகிறது.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை  அஞ்சுவோர் (உலமாக்கள்) அறிஞர்கள் ஆகும்.

(அல் குர்ஆன்)

(உலமாக்கள்) அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாகும். நபிமார்கள் திர்ஹம்களையோ தீனார்களையோ அனந்தரமாக விட்டுச் செல்லவில்லை மாறாக (சத்திய இஸ்லாத்தின்) அறிவை மட்டுமே விட்டுச் சென்றார்கள்.

(அல் ஹதீஸ்)

உண்மையான உலமாக்கள் யாரென்றால் அல்லாஹுதஆலாவை பயந்து அவனது தூதர்  நபி(ஸல்)அவர்களை பின்பற்றி  உலக ஆசைகள் மற்றும் மற்றும் சைத்தானிய்யத்தான சிந்தனைகளிலிருந்து தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் பாதுகாத்து நடப்பவர்களாகவும் அல்லாஹ்வின் கட்டளைகளயும் நபி(ஸல்)அவர்களது போதனைகளையும் தமது வாழ்க்கையிலும்  கடைபிடித்து சமூகத்துக்கு தஃவா செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

உலமாக்கள் தொழில்/விவசாயம்/வியாபாரம்/திருமணம் செய்வதிலிருந்து  தடுக்கப்பட்டவர்களோ/முடக்கப்பட்டவர்களோ/முடங்கியிருப்பவர்களோ அல்லர். ஹலாலான முறையில் தனது தொழிலையும் குடும்பத்தையும் அமைத்துக் கொண்டு சமூகத்தில் முன்மாதியானவர்களாகவும் இருப்பார்கள்.

பணத்துக்கும் உலக ஆதாயங்களுக்கும்  ஆசைப்பட்டு தீனுடைய (சன்மார்க்க) கல்வியிலிருந்து தமது எதிர்கால தலைமுறையை தடுத்துக் கொள்வதும் மஸ்ஜிதிலும் மத்ரஸாவிலும் கடமை செய்து என்ன பயன் என்று மகத்தான அந்த கல்வியை வழங்காது புறக்கணிப்பதும் அறிவுடமை கிடையாது.

உண்மையில் உலமாக்கள் மஸ்ஜிதிலும் மத்ரஸாவிலும் காலத்தை கழிப்பது இந்த சமூகத்துக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும். அவ்விரண்டு இடங்களும் நிறப்பப்படாமல்  இடைவெளியானால் உலகத்தில் தீனை பாதுகாப்பது பெறும் கஷ்டமாகவும் சமூகம் வழிதவறிச் செல்வதற்கு மிகவும் எழிதாகவும் அமைந்து விடும்.

அத்துடன் உலமாக்கள் சமூகத்துக்கு செய்ய பல சேவைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவைகளை சமூகத்துக்கு எடுத்துச் செல்வதில் சமூகமயப்படுத்துவதில் உலமாக்கள் பல சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்கவே செய்கின்றனர்.

அவைகளில் சமூகம் அவர்கள் பற்றி கூறும் சிலதை உதாரணமாக கூறலாம். 

குறைந்த பொருளாதாரம்

உலக அறிவும்  அந்தஸ்துகளும்  போதாமை

உலக விவகாரங்களில் அனுபவம் இல்லாமை

என இன்னும் பல காரணங்களை தமக்கு  சாதகமாக பயன்படுத்தி கண்ணியமான உலமாக்களை மட்டரகமாகவும் தமது உலக இலாபங்களுக்காக பயன்படுத்தவும் வேலைக்காரர்களாக நினைக்கவும் செய்கின்றனர்.

ஆனால் மறுபுறத்தில் சமூகத்தில் மூன்றில் இரண்டு வீத மக்கள்  இவ்வாறுதான் வாழுகின்றனர் என்பதை மறந்து விடுகின்றனர். உலமாக்கள் என்றால் வானத்திலிருந்து வீழ்ந்தவர்கள் போலவும் மலக்குகள் போன்று வாழ வேண்டியவர்கள் எனவும் சிந்திக்கின்றனர்.

சுருக்கமாக கூறுவதாயின் உலமாக்கள் தலை நிமிர்ந்து வாழுவதும் சமூகத்தில் ஒரு அந்தஸ்துடன் இருப்பதும்  இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

ஆனால் இன்றைய காலத்தில் எமது சமூகம் உலமாக்களை பார்க்கும் விதமே வித்தியாசமானது. உலமாக்கள் வெளிப்பார்வையில்  கொஞ்சம் தலைதூக்கி விட்டாலே போதும், இவர்கள் மஸ்ஜிதுகளிலும் மத்ரஸாக்களிலும் இருக்க வேண்டியவர்களியிற்றே!, ஏன் இப்படி ஆனார்கள்? என்று விமர்சனத்துக்கு மேல் விமர்சனமும் கேள்விகளும் கேட்கும் நிலைமைகளையை இன்று காணக்கிடைக்கின்றது.

உண்மையில் உலமாக்கள் தமது குடும்பத்துக்கும் தமது  சமூகத்துக்கும் மிகத் தேவையானவர்கள். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறந்து அவனது மண்ணறைக்கு மண் போட்டு மூடும் வரை அவர்களின் தேவையும் சேவையும் இன்றியமையாததாகும்.

மத்ரஸாவில்  (ஆசிரியராக) முஅல்லிமாக கடமை புரிபவரும் மஸ்ஜிதில்  இமாமாக கடமை புரிபவரும் தனது வாழ்வாதாரத்துக்கு தேவையான மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தொகை சம்பளத்துடன் கஷ்டத்துக்கு மேல் கஷ்டத்தையும் தியாகத்துக்கு மேல் தியாகத்தையும் தலையில் சுமந்துதான் அப்புணித பணியை செய்கின்றனர். அதிலும் நிருவாக ரீதியான/சமூக ரீதியான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அசாதாரண நிலமைகளை காணுகிறோம்.

மத்ரஸாக்களில் படித்து பட்டம் பெற்ற உலமாக்கள் உழைத்து, வீடு கட்டி, பிள்ளைகளுக்கு/சகோதரிகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தாலே போதும் நிருவாக/சமூக  ரீதியானபல பிரச்சினைகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன.

சரி போனால் போகட்டும் பொறுத்துப் போவோம் என்று உலமாக்கள் கடமை செய்ய ஆரம்பித்தால் அவர்களின் முதல் எதிரிகளாக மாறுவது அவர்களது நிருவாகிகளும் சமூகமும்தான்.

காரணம் உலமாக்கள் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்ற சிந்தனை உள்ள அவர்களிடம் உலமாக்கள் சமூகத்தில் செல்வந்தர்களாக தலை நிமிர்ந்து வாழ்வது, குடும்ப சுமைகளை குறைத்துக் கொள்ள போதுமான சம்பளத்தை வழங்குவது தவறானது என்ற சிந்தனைதான்.

பொது மக்களால் சமூகத்தில் உயர்ந்தவர்கள் கௌரமானவர்கள் என்று அல்லாஹ்வின் மாளிகையையும் நாளைய தலைவர்கள் உருவாகும் கலாசாலைகளையும் நிருவாகிக்க பொறுப்பு வழங்கப்படுகின்ற போது இம்மனிதர்கள் கண்ணியமிக்க உலமாக்களுக்கு செய்கின்ற மிகப்பெரும் துரோகம் தனது சுய இலாபத்திற்காக யாரை வேண்டுமாயினும் எப்படியாவது பொய், புறம், கோள், அவதூறு என்று இல்லாத பொல்லாதவைகளை பரப்பி தரம் வாய்ந்த அவர்களை குறித்த அந்த பதவியிலிருந்து நீக்கி மக்களுக்கு நாடகம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தில் நலைநிமிர்ந்து வாழவேண்டிய உலமாக்களை தலை குனியச் செய்வதால் அவர்கள் சாதிக்க நினைப்பதுதான் என்ன?

எனவே உலமாக்கள் மீது அன்பு வைத்து அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் உபகாரங்களையும் செய்து கொடுத்து சமூகத்திலே அவர்களுக்குரிய ஓர் இடத்தை பெற்றுக் கொடுப்பது எமது சமூகத்தின் தலையாய கடமையும் சத்திய சன்மார்க்கத்துக்கு சமூகம் செய்யும் சேவையுமாகும். தவிர அவர்களை விமர்சித்துக் கொண்டு திரிவதில் எந்த புன்னியமும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அவர்களின் பதுஆவுக்கு ஆளாகி சீரழிய வேண்டிய நிலமையே உருவாகும் என உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நன்றி - வஸ்ஸலாம்

0 கருத்துரைகள்:

Post a comment