Header Ads



இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ள வௌவால்களுக்கும் கொரோனா தொற்று, உறுதிசெய்தது இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம்


இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வௌவால்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி வருகிறது.

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், வௌவால் மூலமாகப் பரவியிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.

முன்னர் உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிர்களை விழுங்கிய சார்ஸ், மெர்ஸ், நிஃபா போன்ற நோய்களும் வௌவால் மூலமே உருவானதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆராய்ச்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வௌவால்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. குறிப்பிட்ட சில இன வௌவால்களின் தொண்டை மற்றும் மலக்குடல் பகுதி மாதிரிகள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களில் எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுமா என்பது குறித்த முதற்கட்ட ஆய்வு நடைபெற்று வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.