Header Ads



கொரோனா வைரஸ் பரவல்: அரபு நாடுகளில் ஆபத்தில் சிக்கியுள்ள பல கோடி உயிர்கள்

யுத்தம் மற்றும் தொற்றுநோயால் எவ்வாறு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இப்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதால், ஏற்கனவே பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இந்த பகுதியில் இனி மனிதாபிமான மற்றும் அரசியல் விளைவுகள் மிகவும் தீவிரமாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேற்கத்திய நாடுகளைப் போன்றே நவீன சுகாதார வசதிகளைக் கொண்ட, தேவைப்பட்டால் உடனடியாக வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் ஏராளமான வளங்களைக் கொண்ட இஸ்ரேல் போன்ற நாடும் தொற்றுநோயின் அபாயங்களை எதிர்கொண்டுள்ளன.

மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் எதிர்கொள்ளும் அதே சிரமங்களை இஸ்ரேலும் எதிர்கொள்கிறது.

இரானின் நிலையும் இதேதான். இங்கு தற்போது அழிவு மிகவும் மோசமாக இருக்கிறது. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது, அரசாங்கம் புள்ளிவிவரங்களை முன்வைத்தாலும், மிகச் சிலரே அவற்றை நம்புகிறார்கள்.

கொரோனாவைரஸ் தொற்று

மத்திய கிழக்கு பகுதியில் வழக்கமாக இருப்பதைவிட வேறு சில சிறப்பு சிக்கல்களும்உள்ளன. அவை நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தக்கூடும். இங்குள்ள பெரும்பாலான நாடுகளில் மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை தீர்மானிப்பது மத அமைப்புகள்தான்.

மதத்தால் பீடிக்கப்பட்டுள்ள சமூகங்களின் அணுகுமுறை இறுக்கமாக உள்ளது. அதுமட்டுமல்ல, அங்கு மாற்றங்கள் எளிதாகவோ, விரைவாகவோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேலில் உள்ள கடும்போக்கு ஹார்தி சமூகத்தின் மக்கள் சமூக விலகல் வழிமுறைகளை ஏற்றுக்கொள்வதில் மெத்தனமாக இருந்தனர். இந்த நிலையில் அங்கு மக்கள் மிகவும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

மறுபுறம், சிரியாவில் இருந்து இராக்கிற்குதிரும்பிய ஷியா யாத்ரீகர்களுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, அங்கு அதிக அளவில் நோய் பரவும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது.

தோல்வியுற்ற நாடு

இது பெரிய சுகாதார நெருக்கடி மட்டுமல்ல, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்பதை மறுக்கமுடியாது. எண்ணெய் விலை தொடர்பாக செளதி அரேபியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தக யுத்தம் எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்கத்தின் விளைவு பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் வளமான பொருளாதாரத்தை மோசமாக பாதித்தது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்களையும் வணிக நிறுவனங்களையும் சிக்கலில் இருந்து காப்பாற்ற அங்குள்ள அரசுகள் உதவியை வழங்க முடியும்.

ஆனால் மத்திய கிழக்கின் மிகப்பெரிய பிரச்சனை, இந்த கொரோனாவை எதிர்த்துப் போராடுவதுதான். அங்கு தொடர்ந்து போர் நடைபெறுவதும், அதன் பின்விளைவாக முளைத்த அகதிகள் பிரச்சனையும்தான் தற்போது அங்கு தலையாய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

சிரியாவில் போரால் குடிபெயர்ந்தவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் இலக்காகலாம் என தொண்டூழிய அமைப்புகள் அஞ்சுகின்றன.
சிரியா, லிபியா, ஏமன் போன்ற நாடுகளின் அரசுகள் பெரும்பாலும் செயல்படாத அரசுகளாகக் கூறப்படுகின்றன, அந்நாடுகளில் அரசாங்கங்களுக்கு மிகக் குறைந்த அதிகாரம் தான் இருக்கிறது. அங்கு வளங்கள் குறைவாக இருப்பதோடு, மருத்துவ அமைப்பும், வசதிகளும் போதுமானதாக இல்லை. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களை அரசாங்கமும் அவர்களது நட்பு நாடான ரஷ்யாவும் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், சமூக நிறுவனங்களும், தொண்டு அமைப்புகளும் இந்த நாடுகளுக்கு உடனடி உதவி தேவை என்றுக் கோருவதோ, சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து உதவி செய்யவேண்டும் என்று கோருவதோ இயல்பானதுதான்.

வைரஸுக்கு ஏற்ற இடம்

கொரோனா நோய்த்தொற்றால் முதல் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதை மார்ச் 23 அன்று சிரியா அரசாங்கம் உறுதிப்படுத்தியது. எப்போதுமே போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இட்லிப் மாகாணத்தில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வரவில்லை. அங்கு பரிசோதிக்க வழி இல்லாததால் அங்கிருந்து தகவல் வரவில்லை இதை புரிந்து கொள்ள வேண்டும்.

"இந்த நோய் மிக விரைவாக பிராந்தியமெங்கும் பரவக்கூடும், குறிப்பாக மக்கள் நெரிசலாக வசிக்கும் அகதிகள் முகாம்களிலும், சரியான சுகாதார வசதிகள் இல்லாத இடங்களிலும் இந்த நோய் மிக விரைவாக பரவும்" என்று சர்வதேச நிவாரண நிறுவனமான மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரண்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள மருத்துவ மையங்களும், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் போரினால் சேதமடைந்துள்ளன. சிரியா குறித்து கவலை தெரிவித்திருக்கும் எம்.எஸ்.எஃப், சிரியாவிலிருந்து தப்பிச் சென்று துருக்கியில் அடைக்கலமாகி அங்குள்ள அகதி முகாம்களில் வசிப்பவர்கள் தொடர்பாகவும் கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேசப் போர்

உலகளவில் இடம்பெயர்ந்த மக்கள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ள ரெஃப்யூஜீஸ் இண்டர்னேஷனல்(Refugees International) என்ற அமைப்பு, உலக நாடுகள் உடனடியாக தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரியுள்ளது.

"உலகளாவிய தொற்றுநோய் பரவும் இந்த சமயத்தில், உலகில் அதிக ஆபத்தில் உள்ளவர்களை நாம் மறந்துவிடக் கூடாது" என்று இந்த அமைப்பின் திட்டம் மற்றும் கொள்கைத் துறையின் துணைத் தலைவர் ஹார்டிங் லாங் சுட்டிக்காட்டினார்.

"இப்போது அரசாங்கங்களின் கவனம் அவர்களின் மக்களைப் பாதுகாப்பதில் உள்ளது, இது முற்றிலும் சரியானது. ஆனால் கோவிட் -19 க்கு எதிராக சர்வதேசப் போர் வெற்றி பெற, உலக மக்கள் அனைவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்" என்று அவர் கூறுகிறார்.

"உலகில் வலுக்கட்டாயமாக இடம் பெயரவைக்கப்பட்ட 7 கோடி மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பாதுகாக்க அடிப்படை நடவடிக்கைகளை எடுப்பது சரியான நடவடிக்கையாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் இருக்கும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஆக்கப்பூர்வமான அமைப்பு

பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்தை நிறுத்துதல் ஆகியவற்றால் எழும் சூழ்நிலையை வளர்ந்த நாடுகள் எதிர்கொண்டுள்ள இந்த நிலையில், அவர்கள் அனைத்து மக்களையும் பற்றி சிந்திப்பது சாத்தியமல்ல. அதுமட்டுமல்ல, மத்திய கிழக்கின் பிரச்சனை மிகப்பெரியது.

இராக், சிரியா, லெபனான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் குறைந்தது ஒரு கோடியே 20 லட்சம் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளோர் இருப்பதாக ரெஃப்யூஜீஸ் இண்டர்னேஷனல் அமைப்பு கூறுகிறது. மத்திய கிழக்கு முழுவதிலுமே, அகதிகள் அல்லது குடியேறியவர்கள் எளிதில் கடந்து செல்லக்கூடிய எல்லைகள் பல உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளின் சேதமடைந்துள்ள மருத்துவ முறையும் மற்றுமொரு பிரச்சனை.

சிரியாவில், 56 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதோடு, நாட்டிலேயே 65 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளது கவலை தரும் விஷயம் என்று ரெஃப்யூஜீஸ் இண்டர்னேஷனல் சுட்டிக்காட்டுகிறது. அவர்களில் பெரும்பாலோருக்கு சுகாதார வசதிகள் இல்லை.

 கொரோனா வைரஸ்
நிலைமை என்னவென்றால், சமூக விலகல் மற்றும் சுத்தம் செய்வதற்கான எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதும் கடினம், அதே நேரத்தில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அங்கு மிகவும் நெருக்கடியான மற்றும் சுகாதாரமற்ற முகாம்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆபத்து இருக்கக்கூடிய இடத்தில்...

மத்திய கிழக்கில், போர் நடந்துக் கொண்டிருக்கும் பகுதிகளைத் தவிர, கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் வேறு பல இடங்களிலும் இருக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளையும் குறிப்பாகச் சொல்லலாம்.

மேற்கு கடற்கரையில் சுமார் 40 சதவிகிதத்தை ஆட்சி செய்யும் பாலஸ்தீனியர்களுக்கு நிர்வாக இயந்திரங்கள் குறைவாக இருப்பதால், அவை நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்திலேயே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இஸ்ரேலுக்கும் மேற்கு கரைக்கும் இடையில் தொழிலாளர்கள் சென்று வருவதால் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகரித்திருக்கிறது.

ஆனால் மக்கள் தொகை அதிகமாக உள்ள காசா பகுதியில் நிலைமை மிகவும் கவலையாக உள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்ரேல் மற்றும் எகிப்தின் பொருளாதார முற்றுகையால் அங்குள்ள மக்கள் மீதமுள்ள பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்.

 கொரோனா வைரஸ்
காசா பகுதியில் கொரொனா பரவியதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து இஸ்ரேலுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையே நீண்ட விவாதம் தொடர்கிறது. இஸ்ரேலிய ராணுவத்தினர் வெளியேறிவிட்டனர், காசாவில் என்ன நடக்கிறது என்பதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பாலஸ்தீனிய குழு ஹமாஸ் தான் பிரச்சனைக்கு காரணம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால் காசாவில் தொற்றுநோய் பரவியிருந்தால், இஸ்ரேல் சொல்வதை நம்ப முடியாது. ஏனென்றால் இஸ்ரேல் காசாவிற்குள் இல்லை என்றாலும், வெளியில் இருந்தே அந்த இடத்தை கட்டுப்படுத்தி வருகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது.

இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேலின் முற்றுகையை அகற்றவேண்டும் என்றும், பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் இணைந்து தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாலஸ்தீனிய வல்லுநர்களும் மனிதாபிமான அமைப்புகளும் கோருவதில் ஆச்சரியமில்லை.

அனுசரித்துப் போக யாரும் தயாராக இல்லை

நெருக்கடியான இந்த நேரத்தில், மக்கள் தங்கள் பகைமையை நிறுத்தி வைப்பார்கள் என்ற கற்பனை மகிழ்ச்சி அளிக்கிறது. திரைக்குப் பின்னால் இருந்து, இஸ்ரேல் மேற்கு கடற்கரைக்கு சில பொருட்களைஅனுப்புகிறது, மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது என்ற பகல் கனவு ஆறுதலை கொடுக்கிறது.

ஆனால் அனைத்து விரோதங்களையும் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவேத் தெரிகிறது. மோதலில் ஈடுபட்ட பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஏமனில் ஒட்டுமொத்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சு இருந்தது, ஆனால் அது செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு செளதி இலக்குகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன.

அதே நேரத்தில், இரானுக்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகள் எந்தவிதத்திலும் குறைவதற்கான வாய்ப்பும் இல்லை. இந்த தடைகள் இரானுக்கு மருத்துவ மற்றும் பிற பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்குவதைத் தடுப்பதாக பல அமெரிக்க வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் அமெரிக்காவில் வலதுசாரி சித்தாந்தவாதிகளின் கருத்துக்களைக் கேட்டால்,இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக கருதி, இரானின் நிலைமையை அமெரிக்கா மோசமாக்கும் என்பதை புரிந்துகொள்வது கடினம் அல்ல.

டிரம்ப் அரசாங்கம் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் நெருக்கடியான இந்த நேரத்தில் இரானுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பேரழிவு பயம்

இந்த சூழ்நிலைகளில், இந்த தொற்றுநோய் மத்திய கிழக்கில் பரவினால், அதன் பரவலான விளைவுகள் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது.

மத்திய கிழக்கில் எந்தவொரு அரசாங்கமும் சட்டபூர்வமாக ஆட்சி செய்யவில்லை. புதிய தலைமுறையின் விருப்பங்களுக்கு அங்கு இடம் இல்லை. "அரபு வசந்தம்" சில பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் இந்த புரட்சிக்கு வழிவகுத்த பதற்றங்கள், மாறிலியாக அப்படியே தொடர்கின்றன.

ஜனநாயக நாடான இஸ்ரேலில் கூட, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு அரசியலமைப்பு நெருக்கடியாக கொரொனா வைரஸ் உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பதால், அங்கு, நெதன்யாகு தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் சேர எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் பினாயமின் நிர்பந்திக்கப்படுகிறார். இது ஒரு முன்முயற்சி. ஆனால், இதை ஒருபோதும் செய்ய முடியாது என்று கூறினார். இதனால், அவரது கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.

நீதிமன்றங்கள் மூடப்பட்டதால், பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் வழக்கின் விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டு, அவர் அதிகாரத்தில் தனது பிடியை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

யுத்தங்கள் மற்றும் தொற்றுநோய்களால் வரலாறு களங்கப்படுத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது நெருக்கடியின் ஆரம்பம்!

இத்தகைய சூழ்நிலையில், மத்திய கிழக்கில் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். எது எப்படியிருந்தாலும், அங்கு இன்று நாம் காண்வதை விட சிறப்பான நிலையை எதிர்காலத்தில் காணமுடியாது என்பதே கசப்பான உண்மை. BBC

No comments

Powered by Blogger.