Header Ads



இஸ்லாத்தின் பார்வையில் கொவிட் 19 - நபிகளாரின் முன்னெச்சரிக்கை


- கலாநிதி M.S.M.சலீம்.
பேராதனைப் பல்கலைக்கழகம்-

இன்று மக்கள் கொவிட்-19 வைரசின் தாக்கத்தினால் செய்வதறியாது திகைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இலங்கை மட்டுமன்றி உலக வல்லரசு நாடுகளும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டங்களை முடக்கி வீடுகளில் அடைத்து இக்கிருமி தொற்றிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்கிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

வறுமைக் கோட்டில் வாழும் நாடுகளில் இருந்து வல்லரசுகள் வரைக்கும் மரண பிடியிலிருந்து எவ்வாறு தப்பலாம் என சிந்தித்து கொண்டிருக்கின்றது. 

உலகின் பல பாகங்களில் இருந்தும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 70000ஐ தாண்டும் அளவு மரணம் சம்பவித்துள்ளது. கொவிட்-19 இவ்வருட ஆரம்பத்தில் வுஹான் மாநிலத்தின் சந்தை ஒன்றில்  உணவுப்பொருட்களை கொள்முதல் செய்த 61 வயதான ஒருவருக்கு தொற்றி கடந்த ஜனவரி 9ம் திகதி வைத்தியம் பயனின்றி உயிரிழந்தார். 

அதைத் தொடர்ந்து சீனாவின் வுஹான் மாநிலம் கொவிட்-19 தொற்றின் மரண கிடங்காக மாறியது. அத்தோடு நின்று விடாமல் இம்மரணம் 3ம் உலக அபிவிருத்தியடையா நாடுகளில் இருந்து வல்லரசு நாடுகள் வரைக்கும் இன, நிற, சாதி பாகுபாடின்றி அனைவரையும் குலுக்கி கொண்டிருக்கின்றது. 

உலகின் பல பாகங்களிலும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த பல மில்லியன் கணக்கான சீனர்கள் தமது புது வருட பண்டிகையை கொண்டாடுவதற்காக சீனாவுக்கு வந்து திரும்புகையில் கொவிட்-19 கிருமிகளையும் காவிச் சென்று உலகின் பல பாகங்களிலும் பரப்பியதன் காரணமாக மக்கள் இன்று மரண எச்சரிக்கை அபாயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 18 வருடங்களுக்கு முன் சார்ள்ஸ் நோயானது பூனையை உண்டதன் காரணமாக ஏற்பட்டு அக்கொரோனா வைரஸ் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டது. 

இப்பாரிய உயிர்க்கொல்லி நோயானது வௌவாலில் இருந்து மனிதர்களை ஆக்கிரமித்து இன்று human to human மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகின்றது. 

"மனிதர்களே! பூமியில் உள்ளவற்றிலிருந்து உண்ண அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள்" அல்குர்ஆன்- 2:168. அமெரிக்காவின் RIC பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியரும் கத்தோலிக்க சமயத்தை சேர்ந்தவருமான கீழைத்தேய ஆய்வாளர் Craig Considine அவர்கள் 17.03.2020ல் வெளியான அமெரிக்க Newsweek நாளிதழில் குறிப்பிடும் போது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முஹம்மத் நபி ( ஸல்) அவர்கள் ஒரு ஆத்மீக வழிகாட்டியாகவும் இறை தூதராகவும் இருந்தும் தான் பிறந்த மக்காவிலோ வாழ்ந்து வந்த மதீனா நகரிலோ இந்நோய் ஏற்படவில்லை. ஆயினும் "if you hear of an outbreak of plague in a land do not enter it. But if the plague outbreaks out in a place while you are in it do not leave that place". நபி (ஸல்) அவர்கள் "ஒரு பிரதேசத்தில் தொற்று நோய் ஏற்பட்டு விட்டால் அப்பிரதேசத்து மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வெளி இடங்களில் உள்ளவர்கள் நோய் உள்ள பிரதேசத்திற்குள் நுழைய வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்" (புஹாரி, முஸ்லிம்) . 

இங்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் மீது அவர்களது போதனைகளை பின்பற்றுவது கடமையாக இருந்தாலும் மனித நேயத்தின் தந்தையாகவும் அறிவியல் வழிகாட்டியாகவும் அவர்களது கருத்துக்களை ஏனைய மனித இனம் பின்பற்றி இருந்தால் இப்பாரிய உயிரியல், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தப்பிக்க முடிந்திருக்கும். 

சீனாவில் ஆரம்பித்த இப்பாரிய உயிரியல் ஆயுத அழிவை நாமும் சந்திக்க நேரிடும் என்று உணராமல் அலட்சியமாக வாழ்ந்து கொண்டு இருந்த 180ற்கு மேற்பட்ட நாடுகளும் சீனாவின் உயிர் அழிவை விட பன்மடங்கு அழிவை சந்தித்துள்ளது. 

" மேலும் உங்களில் அநியாயம் செய்தோரை மட்டுமே குறிப்பாக பிடிக்காத வேதனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் " அல்குர்ஆன் - 8:25 . நபி (ஸல்) அவர்கள் "இரு தட்டுகளை கொண்ட ஒரு கப்பலில் ஒரு கூட்டம் கடலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். கீழே உள்ளவர்களுக்கு நீருக்கான தேவைகள் ஏற்படும்போது மேலே சென்று நீர் கொண்டு வர வேண்டும். நாங்கள் நீருக்கு மேலே உள்ளதால் ஒரு துளையை போட்டு நீரை பெற்றுக்கொள்ளலாம் என எண்ணி முயற்சித்த போது மேலே உள்ளவர்கள் அலட்சியமாக அதை பார்த்துக் கொண்டிருந்ததால் எல்லோரும் கடலில் மூழ்க நேர்ந்தது" (புஹாரி). ஒருவர் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். முகம், கை, கால்களை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதனால் ஐவேளை தொழுகையை கடமையாக்கி அத்தொழுகை நிறைவேறுவதற்கு சுத்தம் கடமையாகும் என்பதால் முகம், கை, தலை, கால்களை சுத்தம் செய்வது தொழுகைக்கு கடமையாக்கப்பட்டது. "சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாகும்" (முஸ்லிம்). 

"ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் அவருடைய இரு கைகளையும் கழுவிக் கொள்ளட்டும். ஏனெனில் அவருடைய கை தூககத்தில் எங்கு உலாவியது என்று அவருக்கு தெரியாது" (பைஹகி). மேலே குறிப்பிடப்பட்ட கருத்துக்களிலிருந்து பின்வரும் பரிந்துரைகளை குறிப்பிடலாம்.

1- நல்லவற்றை உண்பதோடு எதிர்காலங்களில் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்தல்.
2- தொற்று நோய்கள் உள்ள பிரதேசத்தில் உள்ளவர்கள் வெளியேறுவதிலிருந்து தடுத்தல்.
3- நோய் அற்ற பிரதேசத்தில் உள்ளவர்கள் நோய் உள்ள பிரதேசத்திற்குள் நுழையாமல் தடுத்தல்.
4- சமூக நல்ல கருத்துக்களை பின்பற்றல்.
5- முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களை மனித நேயத்தின் தந்தை அல்லது ஒரு அறிஞனின் கருத்தாக கருதி சகலரும் பின்பற்றல்.

மேலே குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவதனால் ஆரோக்கியமான சமூக, பொருளாதார பூரணத்துவமான கட்டமைப்பை கொண்ட பூகோள உலகை உருவாக்க முடியும் என்பது அடியேனின் கருத்தாகும்.

1 comment:

  1. இந்திய மற்றும் தமிழக தப்லிக் ஜமாஆத் அமைப்பினருக்கு ஒரு பிரதி அனுப்பி உதவுங்கள். இனியாவது அவர்கள் தொற்றுநோய்கால கட்டுப்பட்டுகள் பற்றிய முஹம்மது நபிகள் (ஸல்) அவர்களது உயரிய அறிவுறுத்தல்களை தெரிந்துகொள்ளட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.