Header Ads



கொரோனா வைரஸ்: இலங்கையின் தற்போதைய நிலை என்ன...?

இலங்கையில் பரவி வரும் கொரோனா தொற்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (மார்ச்16) புதிதாக மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் பாதிக்கப்பட்டோரின் தொகை 28ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 212 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருபவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவதாகச் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவை விமானிக்கு கோவிட் - 19

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் விமானிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படடுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிக்கையொன்றின் ஊடாக இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

குறித்த விமானி இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், குறித்த விமானியுடன் பயணித்த அனைத்து விமான ஊழியர்களின் நேர அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.

அதன்பின்னர் குறித்த ஊழியர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட வேண்டும் என அந்தந்த ஊழியர்களுக்கு நிறுவனம் அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவிக்கின்றது.

மூன்று நாட்கள் பொது விடுமுறை

இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், உணவு பகிர்ந்தளித்தல், போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள், வங்கி, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் கூட்டுதாபனங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன். தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் தனியார் துறை நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தின் தன்மையை அவதானித்து எதிர்வரும் காலங்களில் விடுமுறை வழங்குவதா இல்லையா என்ற தீர்மானம் எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நகரங்கள் இன்றும் முடங்கியுள்ளன

கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் எனப் பல வர்த்தக நடவடிக்கைகள் இலங்கையில் முடங்கியுள்ளதைக் காண முடிகின்றது.

அத்துடன், போக்குவரத்துக்களும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது,

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையில் குறித்து விசாரணை

இத்தாலி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைதந்த 170ற்கும் அதிகமானோர் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தவிர்ப்பவர்களுக்கு எதிராக போலீஸார் சட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகப் பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

ஐரோப்பா, இரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த முதலாம் தேதி முதல் 15ஆம் தேதி வரையான காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் வருகைத் தந்த அனைவரையும் போலீஸில் பதிவு செய்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.